ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முத்திரை பதித்த முன்னோடிகள்: டாக்டர் இராஜா இராமண்ணா

இந்திய அணுசக்தி ஆராய்ச்சி துறையின் முன்னோடிகளுள் ஒருவர் டாக்டர் இராஜா இராமண்ணா ஆவார்.

News image
Updated On :28 ஏப்ரல் 2018, 9:46 am

என். பாலசுப்ரமணியன்

இந்திய அணுசக்தி ஆராய்ச்சி துறையின் முன்னோடிகளுள் ஒருவர் டாக்டர் இராஜா இராமண்ணா ஆவார். அணு இயற்பியல் (Nuclear physics) துறையில் பட்டம் பெற்ற இவர் ஒரு அருமையான மேற்கத்திய இசை கலைஞரும் ஆவார்.
அணு இயற்பியல் துறையைப் பற்றி விரிவுரை ஆற்றுவது போல் பியானோ இசைப்பது பற்றியும் இவரால் விரிவுரை ஆற்ற முடியும்.
1978ஆம் ஆண்டு ஈராக்கின் அதிபர் சதாம் உசைன் ஈராக் நாட்டின் அணு ஆராய்ச்சி துறையை பார்வையிட இவரை அழைத்தார். இதனால் ஈராக்கின் தலைநகர் பாக்தாத் சென்றார் ராமண்ணா. அங்கு சதாம் உசேனின் மாளிகையில் சிறப்பு விருந்தினராக தங்கினார். ஈராக்கில் "டுவைத்தா' (Tuwaitha) என்ற இடத்தில் இருந்த அணு ஆராய்ச்சி நிலையத்தையும் பார்வையிட்டு தமது மேலான ஆலோசனைகளை வழங்கினார்.
அன்று இரவு அவரை சந்தித்த சதாம் உசேன் "நீங்கள் உங்கள் நாட்டுக்கு சேவை புரிந்தது போதும்! இனி என் நாட்டுக்கு உதவுங்கள! நீங்கள் கேட்கும் எல்லா உதவிகளையும் நான் அளிக்கிறேன்! நீங்கள் இந்தியா திரும்ப கூடாது!' என்று உத்தரவிட்டார்! இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமண்ணா அடுத்த நிமிடமே விமானம் பிடித்து இந்தியா திரும்பினார். தன் வாழ்நாளில் எதற்குமே அஞ்சாத ராமண்ணா இச்சம்பவத்தை நினைத்து மிகவும் அஞ்சினார். "புனித பயண ஆண்டுகள்' (Years of pilgrimage) என்ற தமது சுயசரிதை நூலில் இச்சம்பவத்தை பதிவு செய்துள்ளார்.
28.1.1925 அன்று கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்த டாக்டர் ராஜா ராமண்ணா "காமன்வெல்த் ஸ்காலர்ஷிப்' பெற்று பிரிட்டனில் அணு இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
இசையில் பேரார்வம் கொண்ட இவர் இலண்டனில் இருந்தபொழுது பல மேற்கத்திய இசைக் குழுவினருடன் இணைந்து பியானோ இசைக்கும் இசை கலைஞராக பணி புரிந்தார்.
இந்தியா விடுதலை அடைந்தபிறகு அதன் பிரதமரான ஜவஹர்லால் நேரு அறிவியல் துறையை மிகவும் நேசித்தார். இந்தியா எல்லா துறைகளிலும் தன்னிறைவு பெற வேண்டும் என விரும்பினார்.இதனால் 1947 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆராய்ச்சித் துறையை ஏற்படுத்தினார். அதன் முதல் தலைவராக டாக்டர் ஹோமி ஜஹாங்கிர்பாபா விளங்கினார். திரு . ஹோமி பாபா தலைசிறந்த அறிவியல் வல்லுனர்களைத் தமது அணுசக்தி துறைக்கு தேர்ந்தெடுத்தார். 1954 ஆம் ஆண்டு தமது உயர்கல்வியை லண்டனில் முடித்த ராமண்ணா பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் பணிக்கு சேர்ந்தார். ஒரு பக்கம் அணு ஆராய்ச்சி நடந்துகொண்டிருந்தது.மறுபக்கம் தாம் கண்டறிந்த அணு ஆயுதங்களின் திறமையை சோதிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அறிவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டது. எனவே சோதனையை நடத்தவேண்டிய இடத்தை தேர்வு செய்யும் பணி ராமண்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு அவர் தேர்வு செய்த இடமே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள "பொக்ரான்' ஆகும். 
ஆனால் 1966 ஆம் ஆண்டு துரதிர்ஷ்ட வசமாக ஹோமி பாபா விமான விபத்தில் காலமானார். இதனால் ராஜா ராமண்ணா இந்திய அணுசக்தி துறையின் தலைவரானார். தமது அணு ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தார். 1973 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்திய அணு ஆராய்ச்சி நிறுவனம் அணு ஆயுதம் ஒன்றை உற்பத்தி செய்தது.
1974 ஆம் ஆண்டு அந்நாளைய பிரதமர் திருமதி இந்திராகாந்தியிடம் அணு ஆயுதங்களை பரிசோதிக்கும் தமது எண்ணத்தை வெளிப்படுத்தினார். அவரது ஒப்புதலோடு மே மாதம் 18 ஆம் நாள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது . இதை கண்டு உலக நாடுகள் அனைத்தும் ஆச்சரியம் அடைந்தன.
இதன்மூலம் திரு இராஜா இராமண்ணா உலகப்புகழ் அடைந்தார். இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித்துறையின் (Defence research and development organisation) (DRDO) தலைவரானார். இந்திய இராணுவ அமைச்சகத்தின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
1984 ஆம் ஆண்டு சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (International Atomic Energy Agency) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990 ஆம் ஆண்டு அந்நாளைய பிரதமமந்திரி திரு வி. பி. சிங் அவர்களால் இராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1997 முதல் 2003 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக பணிபுரிந்தார். 2000 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய உயர்கல்வி கழகத்தின் (National Institute of Advanced Studies) முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவர் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி ,இசைக் கலைஞர் மட்டுமல்ல. சிறந்த எழுத்தாளரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு "புனிதப் பயண ஆண்டுகள்' (வங்ஹழ்ள் ர்ச் ல்ண்ப்ஞ்ழ்ண்ம்ஹஞ்ங்) என்ற சுயசரிதை நூலையும் 1993 ஆம் ஆண்டு மேற்கத்திய இசை குறித்த "The structure of music in Raga and Western Systems" என்ற நூலையும் எழுதியுள்ளார்.
பல்வேறு இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவராக இவர் புரிந்துள்ளார். 
இச் சாதனையாளருக்கு 1963 ஆம் ஆண்டு "சாந்தி ஸ்வரூப் பட்னாகர்' விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு இவருக்கு 1968 ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ' விருதையும், 1973 ஆம் ஆண்டு "பத்ம பூஷண்' விருதையும், 1975 ஆம் ஆண்டு "பத்ம விபூஷண்' விருதையும் வழங்கி சிறப்பித்தது.
இம் மாமேதை 24.9.2004 அன்று காலமானார்.
அறிந்துகொள்வோம் வாருங்கள்.
(1) இவர் பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்தார். உணவு இடைவேளை சமயத்தில் இவர் பள்ளியில் இருந்த பியானோவை வாசிப்பார். அந்த சமயத்தில் யாருமே இருக்கமாட்டார்கள். இவரது நேர்த்தியான வாசிப்பை கண்டு மகிழ்ந்த ஆசிரியர் இவரை பியானோ கற்கும்படி வற்புறுத்தினார். அவரே "மார்கரெட் மோஃபெட்' (Margaret moffet) என்ற இசை வல்லுநரிடம் இசை பயில இவரை அனுப்பினார்.
(2) இந்திய அணுசக்தி கனவைக் கொண்டிருந்தவர்கள் இருவர். ஒருவர் திரு ஜவஹர்லால் நேரு...., மற்றொருவர் திரு ஹோமி ஜஹாங்கிர் பாபா. இந்திய அணுசக்தி சோதனை வெற்றியடைந்தது காண இருவரும் இல்லை. தமது ஆராய்ச்சியின் வெற்றி யைஅவர்கள் இருவருக்கும் சமர்ப்பிப்பதாக ராமண்ணா கூறினார்.
(3) இந்தியாவின் அணு சோதனை பற்றி பல்வேறு நாடுகளும் கேள்வி எழுப்பின. இந்தியா ஒருபோதும் அணுசக்தி ஆராய்ச்சியை அழிவிற்கு பயன்படுத்தாது ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் என்று முதல் "பொக்ரான்' சோதனைக்கு பிறகு அறிவித்தார்.
(4) உலக நாடுகள் பலவற்றுக்கும் இவர் பயணம் செய்துள்ளார். ஒரு விஞ்ஞானியாக அல்ல! ஒரு தலைசிறந்த இசைக்கலைஞராக! பாகிஸ்தானுக்கும் பலமுறை இவர் சென்றுள்ளார். எதற்கு? மேற்கத்திய இசையை இசைப்பதற்கு!
(5) போரை தடுக்கும் ஆயுதம் எது? என்று கேட்டபொழுது அவர் கூறிய ஒரே பதில் "இசை!' ... ஆம்! அணுசக்தி ஆராய்ச்சியை விட அவர் இசையை மிகவும் நேசித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.