அரங்கம்: செலவும் ஒரு சேமிப்பே!
வேம்பையன் தந்தை. மலர்க்கொடி தாய். இளங்கோ பத்தாம் வகுப்பு . விமலா எட்டாம் வகுப்பு.


காட்சி - 1
இடம் - வீடு
மாந்தர் - வேம்பையன், மலர்க்கொடி, விமலா, இளங்கோ.
(வேம்பையன் தந்தை. மலர்க்கொடி தாய். இளங்கோ பத்தாம் வகுப்பு . விமலா எட்டாம் வகுப்பு.)
இளங்கோ: அப்பா, நீங்க காலையிலே ஒரு புதிர் போட்டீங்க...."நீயும் யோசி.....தேவைப்பட்டா பள்ளியிலே நண்பர்களிடமும் கேட்கலாம்....மாலையிலே விடையோடு வா' ன்னு சொன்னீங்க...., எனக்கும் தெரியலே...,நண்பர்களுக்கும் புரியலே!
வேம்பையன்: விமலா, உனக்குத் தெரியுமா?...
விமலா: யோசிக்கறேன்....எனக்கே தெளிவு வந்ததும் சொல்றேன்!....
மலர்: என்ன புதிர்?.....சொல்லுங்க....நானும் யோசிப்பேன்!....
வேம்பையன்: செலவும் ஒரு சேமிப்பு!
மலர்: செலவு செலவுதானே?....அது எப்படி சேமிப்பாகும்?
இளங்கோ: அதையேதான் என் நண்பர்களும் சொல்றாங்க....
மலர்: புதுசா பொருள் வாங்கறோம்.....பழுதான பொருளைச் சீர் செய்யறோம்....இதுக்கெல்லாம் பணத்தைக் கொடுக்கிறோம்!....இது செலவு!....நம்ம வருமானத்திலே ஒரு தொகையைச் செலவழிக்காம சேர்த்து வைக்கிறோம்!....அது சேமிப்பு!
வேம்பையன்: ஆனா சில செலவுகளும் ஒரு வகையில் சேமிப்பா மாறுது....உங்களுக்குத் தெரிஞ்ச ஒண்ணைச் சொல்லுங்க....
(இரவு உறங்கச் செல்லுமுன் விடை கிடைக்கும் என்று எண்ணுகிறார்கள். )
காட்சி - 2
இடம் - வீடு
மாந்தர் - வேம்பையன், மலர்க்கொடி, இளங்கோ, விமலா, மணியன்.
(இரவு ஒன்பது மணி. வீட்டில் மூத்த மகன் மணியன். ஆட்டோ ஓட்டுனர்....கையில் ஒரு கட்டோடு (பேண்டேஜ்) வருகிறான்.)
மலர்: (பதற்றத்தோடு) மணி, ....என்னய்யா கையிலே கட்டு?
மணியன்: பயப்படாதீங்க....ஒரு சின்ன விபத்து....
மலர்: நீதான் கவனமா ஓட்டுவியே....
மணியன்: ஆமாம்மா.....ஒரு விஷயத்திலே கவனக்குறைவா இருந்திட்டேன்...
வேம்பையன்: என்ன விஷயம்?
மணியன்: நாலு நாளா ஆட்டோவிலே முகப்பு விளக்கு இல்லே....எதிலே இரு சக்கர வாகனத்துலே ஒருத்தன் வந்தான்!....அவன் வண்டியிலும் விளக்கு இல்லே....வேகமா வேறே வந்திட்டான்.....மோதி விபத்து ஆயிடுச்சு!....நல்ல வேளை....அப்போ வண்டியிலே யாரும் இல்லே....இருந்திருந்தா பிரச்சினை பெரிதாகி இருக்கும்!....
(இளங்கோவும் விமலாவும் திகைப்புக்கு உள்ளாகிறார்கள்)
வேம்பையன்: எதிரே வண்டியிலே வந்தவனுக்கு அடியா?
மணியன்: லேசா கை,...கால்லே சிராய்ப்பு!....நான் வலுவா பிரேக்கைப் போட்டேன்!....இல்லேன்னா ரெண்டு பேருக்கும் அடி பலமாயிருக்கும்!.... ஆனா கூட்டம் கூடிடுச்சு!.....என் மேலேதான் தப்புன்னு சிலபேர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க....நல்ல காலம்!.... இரு சக்கர வாகனத்திலே வந்தவன் எதுவும் சொல்லலே.
போக்குவரத்துக் காவல்துறை விசாரணை,....எப்படியோ ரெண்டு பேரும் சமாதானமாகிவிட்டதால் வழக்கு இல்லாமப் போயிடுச்சு! ஆனா விளக்கு எரியலேங்கறதுக்கு அபராதம் மட்டும் கட்டவேண்டியதாப் போச்சு! அது மாத்திரமா?....நாங்க ரெண்டு பேரும் வேறே ஒரு ஆட்டோவைப் பிடிச்சு மருத்துவமனைக்குப் போனோம்! அந்தச் செலவு வேறே!
வேம்பையன்: இதெல்லாம் தேவையா? புது பல்பு அம்பது ரூபாய்தானே இருக்கும்!....உடனே வாங்கிப் போட்டிருந்தா, இந்த விபத்து....,வீண் செலவு ஏற்பட்டிருக்குமா?...
மலர்: பல்புங்கற சின்ன செலவைச் செஞ்சிருந்தா போக்குவரத்துக் காவலரிடம் தண்டம் (அபராதம்) கட்டின செலவு....ஆட்டோ செலவு, மருத்துவமனைச் செலவு....இதெல்லாம் மிச்சம்தானே! அந்தப் பணம் உனக்கு சேமிப்பா இருந்திருக்குமே!....
வேம்பையன்: இந்த நிலையிலே நாலஞ்சு நாள் சவாரியும் போக முடியாது....சம்பாத்தியம் வேறே நஷ்டம்!.....தொழிலுக்காக ஒரு கருவியை வாங்கினா அது செலவு இல்லே....அந்தக் கருவி நமக்கு பொருள் ஈட்டிக் கொடுக்கும்!....வீட்டைச் சுத்தமாவும், சுகாதாரமாவும் வெச்சிக்கறத்துக்காக பண்ற செலவு மருத்துவச் செலவைக் குறைக்கும்! சில செலவுகளை உடனடியா செஞ்சிட்டா நமக்கு சேமிப்பு மாதிரித்தான்!
விமலா: அண்ணா!....இனிமே கவனமா இரு!....."பல்பு' போல ஆட்டோவுக்கு ஏதாவது பணம் வேணுமின்னா எங்களைக் கேளு!....தர்றோம்....இனிமே இப்படி விபத்தை ஏற்படுத்தாதே....ஆபத்திலே சிக்காதே.... எல்லாம் சரியா இருந்தா நாம யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லே!....
(ஆட்டோவைக் கவனமாக ஓட்டுவதோடு பழுது ஏதேனும் ஏற்பட்டால் உடனே அதைச் சரி செய்ய வேண்டும் என்ற தெளிவு மணியனுக்கு வருகிறது)
----வேம்பையன் கூறிய புதிரின் பொருள் அந்த நிகழ்ச்சியால் வீட்டாரின் மனத்தில் ஆழமாய்ப் பதிகிறது.-----
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...