

கேள்வி: சேவல் எப்படி விடியற்காலையில் கூவுகிறது? அதற்கு எப்படி அது விடியற்காலை என்று தெரிகிறது?
பதில்: விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும், சரியாக 5 மணிக்கெல்லாம் எழுந்து விடவேண்டும் என்று நினைத்துப் பலர் அலாரம் வைத்துத் தூங்கப் போவார்கள்.
ஆனால், விடியற்காலையில் அலாரம் அடித்துக் கொண்டே இவர்கள் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மணியின் சத்தம்கூட அவர்களை காதுகளில் விழாத அளவுக்கு அயர்ந்து தூங்கி விடுவார்கள். பிறகு நேரம் ஆன பிறகு, அய்யய்யோ என்று பதறி அடித்து எழுந்து அடுத்த காரியங்களைச் செய்வதற்காக
ஓடுவார்கள்.
ஆனால், இந்தச் சேவல் இருக்கிறதே விடியற்காலையில் சூரிய உதயம் தோன்றுவதற்கு முன்பே, தானே ( சேவல் எப்போது தூங்கும், எப்போது விழித்துக் கொள்ளும் - இதற்கே ஒரு விளக்கம் தேவைப்படும். அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்) எழுந்து கொண்டு, கொக்கரக்கோ என்று கம்பீரமாகக் கழுத்தை நிமிர்த்தி நீட்டி முழக்குகிறதே! இது எப்படி சாத்தியம்? என்று பலர் வியந்து போயிருந்தாலும், யாரும் அதைப் பற்றிப் பெரிதாகச் சிந்தித்ததில்லை.
ஆனால், ஜப்பான் நாட்டின் நகோயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தகாஷி யோஷிமுரா என்ற பயாலஜி ஆராய்ச்சியாளர், தீவிரமாக் யோசித்து பல சேவல்களை வெகு நாட்களுக்கு இருட்டு அறையில் வைத்து (சாப்பாடு எல்லாம் போட்டுத்தான் - அவர் அவற்றைக் கொடுமைப்படுத்தவில்லை) சோதித்துப் பார்த்தார்.
எப்படி இருட்டாக இருந்தாலும், நாள் தேதி தெரியாமல் இருந்தாலும் இரவு பகல் புரியாமல் இருந்தாலும் விடியற்காலையில் சூரிய உதயத்துக்கு முன்னர் அந்தச் சேவல்கள் கொக்கரக்கோ என்று குரல் எழுப்புவதை மட்டும் நிறுத்தவில்லை. ஆச்சரியப்பட்டுப் போனார் தகாஷி.
வெகு நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு அவர் கண்டுபிடித்தது - சேவல்களின் உடம்புக்குள்ளே பயாலாஜிகல் கடிகாரம் ஒன்று இருக்கிறது என்பது. இந்தக் கடிகாரம் நாம் வைத்திருப்பதைப் போல் வட்டமாகவும் 12 எண்களைக் கொண்டதாகவும் இரண்டு பெரிய சிறிய முள்களைக் கொண்டதாகவும் இல்லை. சேவல்களின் உள்ளுணர்வுதான் அந்தக் கடிகாரம். அதுதான் சேவல்களின் கொக்கரக்கோ சத்தம் எப்போது கிளம்ப வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறதாம். இந்தக் கடிகாரம் பேட்டரி போடாமலேயே காலம் காலமாக பரம்பரை பரம்பரையாகச் செயல்பட்டு வருகிறதாம்.
அம்மாடியோவ்.... கொக்கரக்கோ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.