ஞானக்கிளி! - 6: தோளில் ஒரு குருவி!
கதை என்றால் ஞானத்திற்கு மிகவும் ஆர்வம்! சற்று முன்பாகவே மாந்தோப்புக்கு வந்தது!


கதை என்றால் ஞானத்திற்கு மிகவும் ஆர்வம்! சற்று முன்பாகவே மாந்தோப்புக்கு வந்தது!
பாத்திமா கையை உயர்த்தினாள். ""கிளியக்கா! நான் ஒரு கதை சொல்றேன் கேளுங்க....''
ஞானம் மகிழ்ந்தது! குழந்தைகள் சொல்வதைக் கேட்பதில் மிகுந்த இன்பம்.
""எங்க பாட்டி ஒரு கதை சொன்னாங்க....கதை பேரு "நேசம்...!''
ஞானம் கூர்ந்து கவனித்தது. அணில், குருவி, மைனா விளையாட்டை நிறுத்தின. ஒரு பட்டாம்பூச்சி ஞானத்தின் அருகில் வந்து கிளையில் ஒட்டிக்கொண்டது. மெல்லிய தன் சிறகுகளை அசைத்தது. கதைக்கு வரவேற்பு!
பாத்திமா தொடங்கினாள். ""தங்கவேலன் என்று ஒரு மாமா இருந்தார்... அவர் குடியிருக்கும் பகுதியில் பல பள்ளி மாணவர்கள் இருந்தனர். அந்த மாணவர்களுக்கு ஒரு போட்டியை அறிவிச்சார்.....பறவை வளர்க்கும் போட்டி!...மாணவர் ஏழு பேர் பெயர் கொடுத்தார்கள். ஒருவன் பாலா....
அவன் ஏற்கனவே தபால்தலை சேகரிப்பதில் பரிசு பெற்றவன்!....வீட்டில் பறவைகளை வளர்க்கிறான்.
போட்டி நாள். மதிப்பிட தங்கவேலன் வந்தார். அவர் கூடவே சில சிறுவர்களும் வந்தனர். மாணவர் ஆறு பேருடைய வீடுகளுக்கும் சென்றனர். பின்னர் பாலா வீடு!
பாலா வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி ஆனந்தகுமார் என்ற மாணவனின் வீடு. அது சிறு ஓட்டு வீடு. காட்டாமணக்குச் செடியால் வேலி. அங்கே.....! விதவிதமான பறவைகள்.....குருவிகளின் சத்தம்!.... ஆனால் ஆனந்த்குமார் போட்டிக்குப் பெயர் கொடுக்காதவன்! மைனா...,வெண்புறா..., சிட்டுக்குருவி... அணில்! மாணவர்களின்
மகிழ்ச்சிக் குரல்...
தங்கவேலனுக்கு வியப்பு! ""ஆனந்த்!....காலையில் நான் இந்த வழியாகத்தானே வந்தேன்!....அப்போது இங்கு ஒரு பறவை கூட இல்லையே!....''
தங்கவேலனுடன் பாலா, ""இதெல்லாம் இவன் வளர்க்கும் பறவைகள் இல்லை!...'' என்றான்.
""பின்னே?'' என்ற மாமா ஆனந்தகுமாரைப் பார்த்தார்.
""நம்ம சந்தோஷத்துக்காக இன்னொரு உயிரின் சுதந்திரத்தைப் பறிச்சு....கூண்டில் அடைக்கக்கூடாதுன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க!.... எனக்கு பறவை, சிட்டுக்குருவிக்கெல்லாம் தானியம், தண்ணீர் வைக்க ஆசை!....அதைச் செஞ்சேன்!'' என்றான் ஆனந்த்குமார்!
அவன் சொல்லும்போதே ஒரு தோளில் அணில் வந்து அமர்ந்தது! மறுதோளில் சிட்டுக்குருவி!
தங்கவேலன் மாமா வியப்பின் எல்லைக்கே போனார்! ""ஆனந்த்!....உனக்கு என் வாழ்த்துக்கள்! உன் நேசம் உயர்வானது! ''
முதுகில் தட்டிக் கொடுத்தார். ""நீ ஏன் போட்டியிலே கலந்துக்கலே?....இருந்தாலும் உனக்கு ஒரு சிறப்புப் பரிசு !''
""வேண்டாம் அங்கிள்!....பரிசுக்காக இதை நான் செய்யலே!... என் மனத்திருப்திக்குத்தான் செய்யறேன்! இந்தப் பறவைகள், அணில்கள் என் மீது காட்டும் அன்பு இருக்கிறதே அதுதான் எனக்கு கிடைத்த மாபெரும் பரிசு!''
அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அணில் ஆனந்தின் தலையில் ஏறியது! குருவி மறுதோளில் அமர்ந்தது! கையில் பட்டாம்பூச்சி! '' என்று கதையை முடித்தாள் பாத்திமா.
ஞானம் சிறகை அசைத்துக் கதையை ரசித்தது! ""பாத்திமாவுக்கு வாழ்த்து....நீங்களும் இதுபோல நல்ல கதைகளைக் கேட்கணும்....
படிக்கணும்!....கேட்கும்போது சொல்லத் தயாரா இருக்கணும்!'' என்று கூறிவிட்டுப் பறந்தது!
கிளி வரும்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...