/

கருவூலம்: மிதிவண்டி!

சைக்கிளைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டவரான "பாரன் கார்ல் டிராய்ஸ் தி சாயர் பர்ன்'... (யப்பாடி! எவ்ளோ நீளமான பேரு!) ...

News image
Updated On :30 ஜூன் 2018, 12:01 pm IST

சைக்கிளைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டவரான "பாரன் கார்ல் டிராய்ஸ் தி சாயர் பர்ன்'... (யப்பாடி! எவ்ளோ நீளமான பேரு!) ...
வருடம் 1817.
முதல் சைக்கிள் முழுக்க முழுக்க மரத்தால் ஆனது! மிதிப்பதற்குப் பெடல் எல்லாம் கிடையாது!!....சும்மா காலைத் தரையில் உந்தித் தள்ளிக்கிட்டே போகவேண்டியதுதான்! அந்தக் காலத்தில் குதிரைகளில், அல்லது குதிரை பூட்டிய வண்டிகளில்தான் பயணம் செய்வர். குதிரையின் உபயோகம் இல்லாமல் வேகமாகச் செல்வதற்கு இந்த வண்டியைப் பயன் படுத்தினர். 
பிறகு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பியர்ரி லேல்மெண்ட் என்பவர் 1866 இல் ஒரு சைக்கிளை வடிவமைத்தார். இது இரண்டு சக்கரங்கைளை ஒரு பாம்பு போன்ற இரும்புக் குழாய் மூலம் இணைத்து வடிவமைக்கப்பட்டது! இதற்கு மிதிப்பதற்குப் பெடல் இருந்தது! ஆனால் முன் சக்கர அச்சில் இணைக்கப்பட்டிருந்தது! 
பிறகு சைக்கிள்கள் பரிணாம வளர்ச்சியடைந்து தற்போதுள்ள நிலைமைக்கு வந்தது. நவீன சைக்கிளில் 300 க்கும் மேற்பட்ட பாகங்கள் உள்ளன. 
இன்றும் சைக்கிளுக்கு உள்ள மவுசு குறையவில்லை! ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் சுமார் 100 கோடி புதிய சைக்கிள்கள் செய்யப்படுகின்றன. 
சைக்கிள் கண்டுபிடித்து 200 வருடங்கள் ஆகியும் அதன் அடிப்படைத் தொழில் நுட்பத்தில் அதிகமான மாற்றங்கள் ஏதுமில்லை! 
உலகிலேயே சைக்கிளை அதிகம் பயன்படுத்துவோர் சீன மக்கள் ஆவர். தற்போது சீனாவில் 50 கோடி சைக்கிள்கள் உபயோகத்தில் உள்ளன. 
மலையேற்றத்திற்கான விசேஷமான சைக்கிள்கள் 1970 இல் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இரு சக்கர வாகனங்களைப் போன்று 21 கியர்கள் இருக்கும்!
ரேஸில் பங்கு பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட சைக்கிள்களும் வந்து பல வருடங்களாகிவிட்டது! 
விமானத்தைக் கண்டுபிடித்த ஆர்வில் ரைட், வில்பர் ரைட் சகோதரர்கள் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் முதலில் சைக்கிள் கடைதான் வைத்திருந்தனர். 
1903 இல் அவர்கள் முதன் முதலில் பறக்கவிட்ட விமானத்தை அவர்களது சைக்கிள் கடையில்தான் வடிவமைத்தனர்! 
சைக்கிள் பல சாதனைகளுக்கு உதவியிருக்கிறது. 1935 இல் ஃபிரெட் ஏ.பார்க்மேன் என்பவர் சைக்கிள்களைக் கொண்டு உலகைச் சுற்றி வந்தார். அதில் சுமார் 40,000 கி.மீ. தூரத்தை அவர் சைக்கிளில்தான் பயணித்தார். 
உலகின் மிக மெதுவாகச் செல்வதற்கு ஒரு போட்டி இருந்தால் அது சைக்கிளில் செல்லும் போட்டியாகத்தான் இருக்கும். மனிதனின் பேலன்ஸூக்கான போட்டி அது! 
பேப்பர் போடுபவர், தபால் அளிப்பவர் இவர்களுக்கெல்லாம் சைக்கிள்தான் இன்றும் உறுதுணை! 
உடலுழைப்பு, மற்றும் இயந்திரத்தின் ஒத்துழைப்பு என்ற இரண்டும் சேர்ந்த சைக்கிள் ஒரு அருமையான கண்டுபிடிப்புத்தான்! 
சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத, தேக ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக, விரைந்து செல்வதற்கு உகந்ததாக இருக்கும் வாகனம் சைக்கிள் என்பதில் ஐயமில்லை! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.