அரங்கம்: மனசு

பாபு பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவன். மாலை பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தவன். அவனின் தாய் லட்சுமியிடம் சொல்கிறான்.
அரங்கம்: மனசு

காட்சி - 1

இடம் - வீடு
மாந்தர் - பாபு, பாபுவின் தாய் லட்சுமி.

(பாபு பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவன். மாலை பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தவன். அவனின் தாய் லட்சுமியிடம் சொல்கிறான்.)

பாபு: அம்மா!....எனக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருது. எனக்கு புது ஜீன்ஸ் பேண்டும், சட்டையும் வேணும்.....அதைப் போட்டுக்கிட்டுப் போய் என் நண்பர்களுக்கு ஸ்வீட் கொடுக்கணும்!
லட்சுமி: டேய், தீபாவளிக்கு எடுத்த பேண்ட சட்டையையே இன்னும் போடாம அப்படியே வெச்சிருக்கே!... அதை போட்டுக்கடா!... 
புதுசா வேறே ட்ரெஸ் எதுக்கு?....பணத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது!.....எத்தனையோ வீட்டுலே ஏழை பிள்ளைங்க ரெண்டு ட்ரெஸ்ûஸ மட்டும் வெச்சுக்கிட்டு மாத்தி, மாத்தி துவைச்சுப் போட்டுக்கறாங்க.....பணத்தோட மதிப்பு உனக்குத் தெரியலேடா....
பாபு: ஏழைகளைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை.....என் பிறந்த நாளை நான் மகிழ்ச்சியா கொண்டாடணும்.....அதனால எனக்கு கண்டிப்பா நீ புது ஜீன்ஸ் பேண்ட், சட்டை வாங்கித் தரணும்! நான் அதைப் போட்டுக்கிட்டுப் போய் என் நண்பர்கள் மத்தியிலே பெருமையா காண்பிப்பேன்!....
லட்சுமி: சரிடா!.....உனக்கு நான் சொல்றது எல்லாம் புரியாது.....நீங்க படிச்சு, சம்பாதிக்கும் போதுதான் உனக்குப் புரியும்!.....நீ இப்ப டியூஷனுக்கு கிளம்பு....நாளைக்கு கடைக்குப் போய் வாங்கலாம்.


காட்சி - 2

இடம் - கடைவீதி
மாந்தர்கள் - லட்சுமி, பாபு, வேலைக்காரி, அஞ்சலை, அவளின் பேரன் ராஜா. 

லட்சுமி: அட, அஞ்சலை எங்கே கடைவீதிக்கு வந்திருக்கே.....ஆமா, இந்தப் பையன் யாரு?
அஞ்சலை: இவன் என் பேரன் ராஜா. நாலாம் வகுப்பு படிக்கிறான். இவன் கிழிந்து போன யூனிஃபார்மோடு ஸ்கூலுக்குப் போயிருக்கான்!....அவன் வகுப்பு ஆசிரியர், "இப்படி கிழிந்த யூனிஃபார்மோடு ஸ்கூலுக்கு வராதே....புதுசா தெச்சு போட்டுட்டு வா'ன்னு சொல்லி இவனை விரட்டிட்டாரு!....
லட்சுமி: ஐயய்யோ!....அப்புறம் என்னாச்சு? 
அஞ்சலை: புது யூனிஃபார்ம் எடுத்து தைக்க ஐந்நூறு ரூபாய் ஆகும். அதான்.....மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.....என்ன செய்யறதுன்னு தெரியாம, பேரனை கூட்டுக்கிட்டு கோயிலுக்குப் போகலாம்னு கிளம்பிட்டேன்....
லட்சுமி: ஏன் அஞ்சலை, .....ராஜாவோட அப்பாகிட்டே சொல்ல வேண்டியதுதானே? 
அஞ்சலை: ராஜா அப்பா ஆட்டோ ஓட்டுறாரு.....இரண்டு வாரமா காய்ச்சல்லே அவர் படுத்திருக்காரு....அதனால அவர் கையிலே காசு இல்லேம்மா......அதான் அவருகிட்டே கேட்க முடியலே....

(அப்போது பாபு, தன் அம்மாவிடம்)

பாபு: அம்மா, ஒரு நிமிஷம் இங்கே வா....
லட்சுமி: என்னடா?
பாபு: அம்மா, ராஜாவையும் அவனோட பாட்டியையும் கோயிலுக்குப் போயிட்டு நாம போற ஜவுளி கடைக்கு வரச் சொல்லு....
லட்சுமி: என்னடா சொல்றே? 
பாபு: அம்மா நான் சொன்னதை அவங்ககிட்டே சொல்லும்மா....
லட்சுமி: சரி, சரி சொல்றேன்.....அஞ்சலை நீங்க கோயிலுக்கு போயிட்டு சீக்கிரம் வாங்க,....கொஞ்சம் வேலை இருக்கு.....நாங்க ரெண்டு பேரும் இங்கேயே, இந்த ஜவுளிக்கடை வாசலிலேயே நிக்கிறோம்!....
அஞ்சலை: சரிம்மா...


காட்சி - 3

இடம் - கடை வீதி
மாந்தர் - லட்சுமி, பாபு. 

லட்சுமி: ஏண்டா,.....அவங்களை ஜவுளிக்கடைக்கு வரச்சொன்னே?.....உன்னோட பிறந்த நாளைக்குத்தானே புது ஜீன்ஸ் பேண்ட்,.... சட்டை வாங்கப்போறோம்?.....இப்போ அவங்களை எதுக்கு கூப்பிடுறே?
பாபு: அம்மா,.....நீங்க என் பிறந்த நாளுக்காக எடுக்கப்போற பேண்ட், சட்டைக்கு ஆகும் பணத்தை அஞ்சலையோட பேரன் ராஜாவுக்கு புது யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்திடும்மா!.....
லட்சுமி: (ஆச்சரியத்துடன்) என்னடா சொல்றே?......என்ன ஆச்சு உனக்கு?
பாபு: அம்மா எனக்கு போட்டுக்க ஏகப்பட்ட ட்ரெஸ் இருக்கு.... ஆனா, ராஜா படிக்கிற வயசுலே யூனிஃபார்ம் இல்லாம ஸ்கூலுக்குப் போக முடியாம தவிக்கிறான். நேற்றுக்கூட நீங்க சொன்னீங்க....பணத்தை வேஸ்ட் பண்ணாம ஏழைக்கு உதவலாம்னு......அதான் இந்த முடிவுக்கு வந்தேன். கோயிலுக்குப் போயிட்டு அவுங்க ரெண்டு பேரும் வந்தவுடன் ஜவுளிக்கடைக்கு கூட்டிட்டு போய் ராஜாவுக்கு புது யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்திடலாம். இதை என்னோட பிறந்த நாள் பரிசா அவன் போட்டுக்கட்டும்!.....என்ன, சரியா அம்மா?.....
லட்சுமி: (மகிழ்ச்சியுடன்) பாபு, அடுத்தவங்களுக்கு உதவி செய்யணுங்கிற உன் முடிவிலே நீ உயர்ந்து நிக்கறே....உன்னைப் பார்க்க எனக்கு பெருமையா இருக்குடா!......

(கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அஞ்சலையையும், ராஜாவையும் அழைத்துக் கொண்டு கடைக்குள் நுழைகின்றனர். திரும்ப வரும்போது ராஜாவின் கையில் யூனிஃபார்ம் துணிகளுடன் கூடிய பை. ராஜாவின் முகத்தில் மகிழ்ச்சி. அஞ்சலை நன்றியுடன் பாபுவையும், லட்சுமியையும் பார்த்து கைகூப்புகிறாள். பாபு நிம்மதியும், சந்தோஷமும் அடைகிறான். லட்சுமி தன் மகன் பாபுவை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைகிறாள்!)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com