அரங்கம்: பூச்சி! 

(காலை - ராமனாதன் மிதிலாவை இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்த்திக்கொண்டு செல்கிறார்.  
அரங்கம்: பூச்சி! 

க.சங்கர்

காட்சி -1,   
இடம் - சாலை,  மாந்தர் - ராமனாதன், மகள் மிதிலா

(காலை - ராமனாதன் மிதிலாவை இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்த்திக்கொண்டு செல்கிறார்.  தெருமுனையில் படுத்திருக்கும் நாய் அவர்களை அமைதியாகப் பார்க்கிறது
மதியம் - ராமனாதன் தனியாக அதே வாகனத்தில் வருகிறார்.  நாய் சிறிது தூரம் வரை துரத்திச் சென்று குரைக்கிறது. திரும்பிச் செல்லும்போதும் குரைக்கிறது.
மாலை - ராமனாதன் மிதிலாவைப் பின்னால் அமர்த்திக்கொண்டு திரும்புகிறார். அவர்களை அமைதியாகப் பார்க்கிறது.)

காட்சி - 2,   
இடம் - ராமனாதனின் வீடு,   
மாந்தர் - ராமனாதன், அவர் மனைவி சுமித்ரா, மகள் மிதிலா. 

ராமனாதன் - சுமி....என்னோட "டை' யை எங்கியாவது பார்த்தியா?
(சுமித்ரா டையுடன் வருகிறாள்) 
சுமித்ரா - டீக்கடையைத் தாண்டிப் போகும்போது கவனமா இருங்க.....வழக்கம்போல் அந்த நாய் உங்களைத் துரத்தப்போகுது....
ராமனாதன் - அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?...
சுமித்ரா - இந்த இடத்திலே எத்தனை வீடுங்க இருக்கு.... ஆனா அவங்களை யாரும் அந்த நாய் ஒண்ணும் பண்றதில்லே.....உங்களை மட்டும்தான் அது எதிர்க்குதாம்....இஸ்திரி போடுற அம்மா சொன்னாங்க....
ராமனாதன் - எப்பவும் துரத்தறதில்லே....லஞ்சுக்கு வரப்போ மட்டும்தான் துரத்துது...!
(மிதிலா முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டே வருகிறாள்)
சுமித்ரா - ஏண்டி முகத்தை அப்படி வெச்சிருக்கே?...
மிதிலா - எனக்கு பாகற்காயே பிடிக்கலே.....ஏன் அதையே  பண்றீங்க?....மதியம் நான் சாப்பிட மாட்டேன் போங்க....
சுமித்ரா - சாப்பிடாட்டி போ!....நாளைக்கும் அதேதான்!....
மிதிலா - சரி,....இன்னிக்கு மதியம் சாப்பிடறேன்..... நாளைக்கு வேறே ஏதாவது செய்யுங்க.....ப்ளீஸ் மா!....
(இருவரும் சிரிக்கிறார்கள்)

காட்சி - 3,   
இடம் - சாலை,    மாந்தர் - ராமனாதன், நாய்.

(உணவு இடைவேளையின் போது ராமனாதன் வீட்டிற்கு வருகிறார். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். தெரு முனையில் நாய் அவர் குறுக்கே பாய்கிறது. தடுமாறி வண்டியுடன் கீழே சாய்கிறார்)

காட்சி - 4,   
இடம் - ராமனாதனின் வீடு, நேரம் - மாலை 4 மணி,   
மாந்தர் - ராமனாதன், சுமித்ரா, மிதிலா.

சுமித்ரா - அந்த நாயைப் பத்தி நகராட்சியில் புகார் கொடுங்கன்னு சொன்னா கேட்டீங்களா?....இப்போ பாருங்க என்னாச்சுன்னு!....
ராமனாதன் - ஒண்ணும் ஆகலே....கையிலே லேசா அடி....காலையிலேயே ஆஃபீஸ் போக ரெடியாயிடுவேன்
சுமித்ரா - இப்போ கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறீங்களா இல்லையா?....
ராமனாதன் - ஓ.கே!....நீ இதை விடு!.....நான் 
பார்த்துக்கறேன்!..... 
மிதிலா - கமப்ளெயின்ட் பண்ணிடலாம்பா....

காட்சி -5,   
இடம் - இஸ்திரிக் கடை,   நேரம் - மாலை 5-30,   மாந்தர் - ராமனாதன், இஸ்திரி பழனியம்மாள்

பழனியம்மாள் - வாங்க சார்,....இப்போதான் சார் உங்க ஆர்டரை முடிச்சேன்.....கையிலே என்னாச்சுங்க?....
ராமனாதன் - எல்லாம் அந்த நாயாலதாம்மா....அது யோரோடது?....யார் வளர்க்கிறாங்க?....
பழனியம்மாள் - அது தெரு நாய் சார்....பேரு "பூச்சி'....
ராமனாதன் - பூச்சியா?....யார் வெச்ச பேரு?.....
பழனியம்மாள் - எல்லாம் அந்த ஸ்கூல் பசங்க சார்....பத்து வருஷத்துக்கு முன்னாடி யாரோ இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க....
ராமனாதன் - இல்லே சார்.....உங்க குடியிருப்புப் பகுதியிலேதான்....அப்போ அது கரும்புக் காடா  இருந்துச்சு.....ஒரு வேப்பமரத்துக்கு கீழே நின்னு ரெண்டு நாளா கத்திக்கிட்டே இருந்திச்சு....மதியம் அங்கே கொஞ்ச நேரம் விளையாட வர பக்கத்து ஸ்கூல் பசங்கதான் அது இது கொடுத்துப் பாத்துக்கிட்டாங்க.... "பூச்சி' பேர் வெச்சதும் அவங்கதான்.....ஒவ்வொரு மத்தியானமும் அந்த மரத்துக் கீழே கூடிடுவாங்க.....
ராமனாதன் - அப்படியா?....ஆனா அந்தப் பக்கமெல்லாம் பூச்சி வந்ததே இல்லியே....
பழனியம்மாள் - தெரியலே சார்!.....ஒரு வேளை பயமா இருக்கலாம்....குடியிருப்புக்கான  வேலை ஆரம்பிக்கறப்போ அந்த வேப்பமரத்தை வெட்டினாங்க.... அப்போ கோபத்திலே சிலரைக் கடிச்சிருக்கு!.....ரொம்பவுமே அடிச்சு விரட்டி விட்டாங்க.....ஒரு கால்ல இன்னும் அந்தத் தழும்பு இருக்கு.....பார்த்தாலே தெரியும்....
ராமனாதன் - அந்த வேப்ப மரம் எங்கம்மா 
இருந்தது?...
பழனியம்மாள் - உங்க வீடு இருக்கிற இடத்துலேதான் சார்!.....

காட்சி - 6,   
இடம் - ராமனாதனின் வீடு,  
மாந்தர் - ராமனாதன், சுமித்ரா, மிதிலா.
(ராமனாதன், இஸ்திரி போடும் பழனியம் மாளுடன் நடந்த உரையாடலை விவரித்து முடிக்கிறார்.)

ராமனாதன் - இப்போ சொல்லு,.....பூச்சி மேலே என்ன தப்பு இருக்கு?...... அதுக்கு குழந்தைகளை ரொம்ப பிடிக்கும்!.....அதான் மிதிலா இருக்கும்போது துரத்துறதில்லேன்னு நினைக்கிறேன்.....
சுமித்ரா - நீங்க சொல்றது சரிங்க.....நாம இங்கே வர்றதுக்கு முன்னாடி இது பூச்சியோட இடமா இருந்திருக்கு....அதோட சந்தோஷத்தை மறைமுகமா நாம கெடுத்திருக்கோம்......பூமி எல்லோருக்கும் பொதுவானதுதானே?.....
ராமனாதன் - ம்ம்ம்......மிதிலா, என்ன கம்ப்ளெயின்ட் பண்ணிர்லாமா?.....
மிதிலா - வேணாம்ப்பா.......டெய்லி எதாவது சாப்பிடக் கொடுக்கலாம்......
சுமித்ரா - வெரி குட், சூப்பர்!.....நாளைக்கே ஏதாவது செய்வோம்!.....
மிதிலா - ஆனா.....கொஞ்சம் ருசியா ஏதாவது கொடுங்க.....பாகற்காய் மட்டும் செஞ்சு குடுக்காதீங்க....பூச்சி ரொம்ப பாவம்!
(சொல்லி விட்டு மிதிலா ஓடுகிறாள்....சுமித்ரா துரத்துகிறாள்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com