ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மாடனும் கணேசனும்...

காவல்துறை புகார் மையத்திற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது."ஐயா... எங்கள் முன்னாடி கணேசன் சங்கிலியை அறுத்துக் கிட்டு ஓடிட்டாங்கய்யா!''

News image
Updated On :23 நவம்பர் 2019, 6:29 am

சூடாமணி சடகோபன்

காவல்துறை புகார் மையத்திற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது.
"ஐயா... எங்கள் முன்னாடி கணேசன் சங்கிலியை அறுத்துக் கிட்டு ஓடிட்டாங்கய்யா!''
"நீங்க யாரு? எங்கிருந்து பேசறீங்க?.... "கணேசன்' ங்கறது யாரு?''
"ஐயா.... எம்பேரு மாடனுங்க,..... மயிலாப்பூர் மாட வீதியிலேந்து பேசறேங்க!''
" பொறுமையா, பதறாம நடந்ததைச் சொல்லுங்க! என்ன நடந்தது? எப்படி நடந்தது? எங்க நடந்தது?''
மாடன் போனில், "ஐயா... மயிலாப்பூர் கோயில் திருவிழா நடந்து கிட்டிருக்கு. நானும் எம்பையனும் திருவிழாவுக்கு வந்தோம். நாலு காசு கிடைக்கும்னு காத்துக் கிடந்தோம். சரியான கூட்டமுங்கோ, அலை அலையா... தாரைத் தப்பட்டை, மேளம், பேண்டு வாத் திய வாத்தியம் வாத்தியம்னு ஜோரா காது ஜவ்வு கிழியறாப் போல வாசிக்கிட்டு இருக்காங்க. அப்ப
எவனோ ஒரு வெடியக் கொளுத்திப் போட்டானுங்க! ஜனங்க பயந்து போய் ஓட ஆரம்பிச்சாங்க! அந்தச் சமயம் பார்த்து, கணேசன் செயினை அறுத்து கிட்டு ஓடிட்டானுங்க. ரொம்ப நீளமானச் செயினுங்க. தடியா, ஸ்ட்ராங்கா வேற இருக்குமுங்க......நல்ல எடை வேறேங்க!.... சங்கலியை அறுத்துக்கிட்டு ஓடிப்புட்டாங்க! பதட்டமாப் போச்சுங்க!...''
"அது எப்படிய்யா செயினை அறுத்தவனோட பெயரை ஒன்னால சரியாச் சொல்ல முடியுது? அவனை உனக்குத் தெரியுமா?....ரெண்டு பேரும் கூட்டுக் களவானிகளா? அவனை மாட்டி விட்டுட்டு, நீ தப்பிச்சுக்கலாம்னு பாக்குறயா?
"ஐயா, கணேசனை இந்த ஏரியாவில் தெரியாத ஆளுங்களேகிடையாது. நாலு பேரு கூட ற இடத்துல அவன் கண்டிப்பா, ஆஜராயிடுவானுங்க! கூட்டம் கூடினா அவனுக்கு லாட்டரி அடிச்சாப் போல! அப்பத் தான் அவனுக்கு 
எக்கச்சக்க கலெக்ஷன் கிடைக்கும்.''
"அப்ப கணேசனை ஒனக்கு நல்லாத் தெரியுங்கற! உன்னாலே கணேசைப் புடிச்சுக்குடுக்க முடியும்னு சொல்லு! அவனைப் புடிச்சுக் குடுத்தா உனக்குப் பதக்கம் கிடைக்க வழி பண்றேன். அந்த ஏரியாவுல "செயின் ஸ்நாச்சிங்' நாளுக்கு நாள் அதிகமாயிட்டேப் போவுது. போலிசுக்கே தண்ணி காட்றாங்க அவனுங்க!...''
"கண்டிப்பா உதவறேனுங்க...''
"அப்ப ஒன்னு பண்ணு, உடனே கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அதிகாரியைப் பாரு. இப்ப நீ மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலதானே நிக்கற? நானும் வயர்லெசுல அவங்களுக்கு விவரத்தைச் சொல்லிடறேன்!. அங்க அவங்க தயாரா இருப்பாங்க.. கணேசனை சீக்கிரம் பிடிச்சிடலாம்! சரி.. அவன் செயினை மொத்தமா அறுத்துகிட்டு ஓடிட்டானா? இல்ல மிச்சம் மீதி துண்டு ஏதாச்சும் வெச்சுட்டுப் போயிருக்கானா''
"ஐயா,... சரியாச் சொன்னீங்க!...... ஆமாங்க,.... அறுந்த செயின்ல ஒரு துண்டு தெருவுல விழுந்து கிடக்குங்க! எடுத்து வெச்சிருக்கேன்!''
"அப்ப அதைப் பாதுகாப்பா எடுத்து வெச்சுக்க!..... நாங்க வந்து அதை வாங்கிக்கறோம்!..... அந்த திருடனோட கைரேகை அதிலே பதிஞ்சிருக்கும்!.... அதை வெச்சுக் கண்டுபிடிச்சிடலாம்!''
"சரிங்கய்யா, நீங்கச் சொல்றபடியே செஞ்சுடரேனுங்க!...''
"அது சரி ... செயினோட சொந்தக்காரர் அங்கே இருக்காரா?....இருந்தாருன்னா, நாங்க வரும் வரை அங்கயே நிக்கச் சொல்லு.''
"அந்தச் செயினோடச் சொந்தக்காரனே நான்தாங்க!''
"அப்ப நீ ஸ்டேஷனுக்கு வரும்போது, கையோட, ஒரு புகாரை எழுதிக் கொடுத்துடு, மறக்காம!..''
"சரிங்க, அப்படியே பண்ணிடறேன்!''
மாடன் தாமதிக்காமல் அருகில் உள்ள மயிலாப்பூர் காவல் நிலையத்திற்குச் செல்கிறார். காவல் துறை அதிகாரி மாடனைப் பார்த்து,...."நீங்கதான் சங்கிலியை அறுத்துக்கிட்டு ஓடிட்டான்னு போன் செஞசீங்களா? நீங்க செயினை அறுத்து கிட்டு ஓடினவனை நேர்ல பாத்தீங்களா? தேவைப்பட்டா, சாட்சி சொல்ல, கோர்ட்டுக்கு வருவீங்களா?''
"கண்டிப்பா வர்றேனுங்க!''
"அப்ப எங்க கூட ஜீப்புல ஏறுங்க. உடனே ஸ்பாட்டுக்குப் போய், பக்கத்துல ஏதாவது சி.சி.டி.வி யில் துப்பு கிடைக்குமான்னு பார்க்கலாம்.''
ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள் மற்றும் மாடன் எல்லோரும் புறப்படுகிறார்கள் !
போலீஸ் ஜீப் வேகமாக ஓடிக் கொண்டிருக்கையில் "ஓடுங்க, ஓடுங்க" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே ஒரு கூட்டம் ஆரவாரத்துடன் குறுக்கே நுழைந்தது. எல்லோரும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தனர். போலீஸ் ஜீப் பிரேக் போட்டு நின்றது. இன்ஸ்பெக்டர் தலையை வெளியே நீட்டி....
"என்னப்பா, என்ன நடக்குது இங்க? ஏன் எல்லோரும் ஓடறீங்க?'' என்று கூட்டத்தில் ஒருவனை பார்த்துக் கேட்டார்.
"சார்... கணேசன் அறுத்த செயினோட, முரட்டுத் தனமா ஓடி வர்றான். ரொம்ப கோவமா வேற இருக்கான் சார்!....வாட்ட சாட்டமானவன் சார்!....மிதிச்சே கொன்னுடுவான் சார்!...''
இன்ஸ்பெக்டர் தலையைச் சொறிந்துகொண்டே, "கணேசன் அவ்வளவு பெரிய ரவுடியா? போலீஸுக்கு எப்படி இவ்வளவு நாட்களாக அவனைப் பத்தி தெரியமாப் போச்சு! திருடனுங்க போட்டோவெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் ல ரெடியா
இருக்கு. ஆனால் கணேசன்ற போல எந்த அக்யூஸ்டும் இல்லையே! யாரும்போலிஸ்காரங்களுக்கு தகவல் சொன்னா மாதிரி தெரியலியே! விடக் கூடாது!..... ஒரே அமுக்கா அமுக்கிட வேண்டியதுதான்! துப்பாக்கியை எடுத்து வைத்துக் கொண்டார்''
அதே சமயம் போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு தூரத்திலிருந்து ஒரு விநோத ஒலி கேட்டது. பொதுவாக சென்னை போன்ற பெரு நகரங்களில் அது போன்ற ஒலியை அவர் கேட்டதேயில்லை. கூர்ந்து கவனித்தார். தூரத்திலிருந்து ஒரு யானை தன்னுடைய தும்பிக்கையை வேகமாகச் சுழற்றியப்படியே பிளிரிக் கொண்டு, குறுக்கே நின்று கொண்டிருந்த வண்டிகளையெல்லாம் புரட்டிப் போட்டுக் கொண்டே வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது.
யானையைக் கண்டவுடன் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டிருந்த மாடன், "சார்... சார்... அவன் தான், நான் சொன்ன கணேசன்!''
இன்ஸ்பெக்டர் மாடன் காட்டிய திசையைப் பார்த்தார். அவருக்கு ஒரு யானை கண்களில் பட்டது!
மாடன் இன்ஸ்பெக்டரிடம், "பட்டாசு வெடிச்சத்தத்துல ரொம்ப பயந்து போயிருக்கான் சார். அவனோட காலைப் பாருங்க சார்... அறுந்த செயின்ல பாதி இன்னும் தொங்கிட்டிருக்கு. நீங்க சொன்னபடியே மீதி செயினை மயிலாப்பூர் மாடவீதி ஓரமாக ஒரு கோணிப்பையில் போட்டு பாதுகாப்பாக வச்சிருக்கேன் சார். என்னைப் பார்த்துவிட்டால் பெட்டி பாம்பா அடங்கி ஒடுங்கிடுவான் சார்!'' என்றான்.
இன்ஸ்பெக்டருக்கு தலை சுற்றியது. 
"இவ்வளவு நேரமாக நீ கணேசன்.....கணேசன்னு சொன்னது இந்த யானையைத் தானா?''
"ஆமாம் சார்... நான் ஒரு யானைப்பாகன் சார்!....சின்ன வயசுலேந்து என் பிள்ளை மாதிரி வளர்க்குறேங்க. கணேசனுக்கு அறிவு அதிகம் சார். கூட்டத்தைப் பார்த்து ரொம்ப மிரண்டு போயிருக்கான் சார். இவன் செஞ்ச கலாட்டாவுல எனக்கு மூணு மணி நேரம் கலெக்ஷன் பூடுச்சு சார்!''
இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியை கோபத்துடன் உறையுள் தள்ளினார்.
"தங்கச் செயினைத்தான் அறுத்துக்கிட்டு ஓடிட்டான்.... அவனை எனக்கு நன்றாகத் தெரியும். புடிச்சுத் தர்றேன்னு இவன் சொன்னதை நம்பி வந்தா, கடைசியில் இரும்புச் செயினு... அதையும் அறுத்துகிட்டு ஓடினது ஒரு யானை!.... ச்சே... ஒரே நிமிஷத்துல போலீசை நல்லா ஏமாத்திட்டான்...''
கோபத்துடன்மாடனைப் பார்த்து,... "வேலைங்களை வுட்டுபோட்டு ஓம்பின்னாடி இப்படி சுத்தினா, இப்படித்தான் எங்களை முட்டாளாக்கி விடுறதா? இதுக்கு என்ன தண்டனை கிடைக்குமுன்னு உனக்குத் தெரியுமா?''
"ஐயா, மன்னிச்சுடுங்கய்யா! கணேசன் என் பிள்ளை மாதிரி! அவன் இல்லாம என்னாலே ஒரு நாள் கூட இருக்கமுடியாதுங்க ஐயா! அவனை எப்படியாவது கண்டுபிடிசுக் குடுப்பீங்கன்னுதான் உங்க கிட்டே வந்தேன்!'' என்றான் மாடன் அப்பாவியாய்!''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.