அரங்கம்
காட்சி -1
இடம் - அரசவை, மாந்தர் - மன்னர் ராஜசிம்மர், அமைச்சர் நல்லான், தளபதி கருத்திருமன்,
விகடகவி வெங்கண்ணா படை வீரர்கள்
அமைச்சர் நல்லான்: மன்னா!.... கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகமாகிவிட்டது! நம் வியாபாரிகளின் வாணிபக் கப்பல்களை நடுக்கடலில் வழி மறித்து கொள்ளை அடித்துச் செல்கிறார்கள். இதனால் கடல் கடந்து நாடுகளுக்கு, வாணிபப் பொருட்களை அனுப்ப அஞ்சுகிறார்கள்.
ராஜசிம்மர்: தளபதியாரே,.... இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.
தளபதி கருத்திருமன்: மன்னா!.. உத்தரவு கொடுங்கள்.....அவர்களை ஒழித்துக் கட்டி விடுகிறோம்.
ராஜசிம்மர்: கப்பல்கள் புறப்படுவது, எந்த நாட்டுக்கு எத்திசையில் செல்கிறது என்பதை வணிகர்கள் இரகசியமாகத் தானே வைத்திருப்பார்கள். மரக்கலங்கள் செல்வதை கொள்ளையர்கள் எப்படி அறிகிறார்கள்.?
கருத்திருமன்: யாரோ இருந்து கொண்டு கொள்ளையர்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள் என ஒரு சந்தேகம் உள்ளது!...
மன்னர் ராஜசிம்மர்: அந்தக் கயவர்களைப் பிடிக்க வேண்டும்.
விகடகவி வெங்கண்ணா: மன்னா.. எனக்கு ஒரு யோசனை!
மன்னர்: சொல் வெங்கண்ணா!...
விகடகவி: முத்துக்கள், வைரங்கள், பவளங்களைத் தாங்கி ஒரு கப்பல் புறப்படப் போவதாக ஒரு வதந்தியை அங்காடிகளில் பரப்பி விடலாம். பெட்டிகளில் வைக்கோலை நிரப்பி பழங்களை அடுக்கி கப்பல்களில் பயணப் படுத்துவோம். கப்பலின் அடித்தளத்தில் நம் வீரர்களை மறைந்திருக்கச் செய்வோம், கொள்ளையர்கள் கப்பலுக்குள் நுழைந்ததும் அவர்களைத் தாக்கிக் கைது செய்து விடலாம்!
மன்னர்: அமைச்சரே!.... இந்த யோசனை சரிப்படுமா?
அமைச்சர் நல்லான்: நல்ல யோசனை தான்!
மன்னர்: அமைச்சரே.. வணிகர்கள் குழுத் தலைவர் மாசாத்துவானிடம் இதைத் தெரியப் படுத்துங்கள். அவரது கப்பலை ஆயத்தப் படுத்தச் சொல்லுங்கள். சரி.. கப்பல் புறப்படும் செய்தியைக் காற்று வாக்கில் உலவச் செய்வது எப்படி..?
வெங்கண்ணா: கவலை வேண்டாம் மன்னா. அது என் பொறுப்பு. என் நண்பன் மடைப்பள்ளி குப்பண்ணாவும் அவன் மனைவியும் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த ரகசியத்தைச் சொல்லி யாரிடமும் சொல்லாதே எனச் சொல்லிவிட்டால் போதும். ஒரு நாளைக்குள் ராஜ்ஜியம் பூரா பரவி விடும்.
(மன்னர், அமைச்சர், தளபதி எல்லோரும் சிரிக்கிறார்கள்)
காட்சி - 2,
இடம் -அங்காடித் தெரு, மாந்தர் - வெங்கண்ணா, அவன் தோழன் பெருமாள் கோவில்
மடைப்பள்ளி சமையல்கார குப்பண்ணா
வெங்கண்ணா: அடடே.. குப்பண்ணாவா.. சவுக்கியமா.. பார்த்து ரொம்ப நாளாச்சே.
குப்பண்ணா: இப்போதானே முந்தா நாள் பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தே.. நான் கூட தொன்னையில் உனக்குச் சர்க்கரைப் பொங்கல் தரும் போது அண்டாவைக் கிண்டி முந்திரி இரண்டு எடுத்துப் போடச் சொன்னியே மறந்திட்டியா வெங்கண்ணா.......அரண்மனையில் எதுவும் விசேஷம் உண்டா.?
வெங்கண்ணா: இருக்கு!... ..ஆனா அது பரம ரகசியம்.
குப்பண்ணா: நான் உன் ஆத்மார்த்த நண்பனாச்சே.....என்னிடம் சொல்லக் கூடாதா?....
வெங்கண்ணா: சொன்னா எனக்கு என்ன தருவே.?
குப்பண்ணா: இந்தப் புளியோதரை,...அப்புறம் இரண்டு வடை....
வெங்கண்ணா: சரி,... கேளு.. அமாவாசை அன்னிக்கு யவன நாட்டுக்கு ஒரு கப்பல் போகப் போவுது. நவரத்தின வியாபாரி மாசாத்துவான் அதில் பல பெட்டிகள் முத்து, பவளம், வைரம் போன்றவைகளை அனுப்பறார். கொள்ளையர்கள் கப்பலைத் தாக்காமல் இருக்க எல்லா பெட்டிகளிலும் அடியில் பொருள் வச்சு மேலே வைக்கோல் பரப்பி முந்திரி, நாரத்தைப் பழங்கள் வைக்கப் போறார். இதை யார்கிட்டேயும் சொல்லிடாதே!....
குப்பண்ணா: என் பெண்டாட்டி, மச்சினன்கிட்டே கூட சொல்ல மாட்டேன் போதுமா?... இந்தா புளியோதரை வடை சாப்பிடு.
(இந்த செய்திகளை தூண் மறைவில் ஒருஆள் கவனிப்பதை குப்பண்ணா அறியவில்லை.. ஆனால் வெங்கண்ணா கவனித்து விட்டான்)
காட்சி - 3,
இடம் - குப்பண்ணா இல்லம், மாந்தர் -
குப்பண்ணா, அவன் மனைவி காமாட்சி,
அவள் தம்பி கிட்டப்பா
குப்பண்ணா: அடியே காமாட்சி, வெங்கண்ணா ஒரு சேதி சொன்னான். யவன நாட்டுக்குப் போற வியாபாரக் கப்பலில் பெட்டி பெட்டியா முத்தும் பவளமும் வைரமும் போகுதாம். வரும் போது அது பெட்டி பெட்டியா தங்கத்தோட திரும்ப வரும். யார் கிட்டேயும் சொல்லக் கூடாது என்ன.!
கிட்டப்பா: (ஒட்டுக் கேட்டுவிட்டு) என்ன மச்சான் பெட்டி பெட்டியா முத்து பவளம் வைரம் கப்பலில் போவுதா ? அமாவாசை அன்னிக்கா..? மாசாத்துவான் யவன நாட்டுக்குத் தன் கப்பலில் அனுப்பறாரா ? நம்ம துறைமுகத்தில் இருந்தா,,?
குப்பண்ணா: அடியே.. இவன் ஒட்டுக் கேட்டுட்டானே.. ஊர் பூரா சொல்லிடுவானே.
காமாட்சி: தம்பி யாரிடமும் மூச்சு விடக் கூடாதுடா .. ராஜாங்க ரகசியம்.
கிட்டப்பா: என் தோழன் கோபண்ணா கிட்டே கூடச் சொல்ல மாட்டேன்... சரி, நான் விளையாடப் போறேன்....எனக்கு நாலு வடைஎடுத்து வை.
(கிட்டப்பா தன் தோழர்களிடமும், காமாட்சி கிணற்றடியில் பல பெண்களிடமும் செய்தியைச் சொல்ல செய்தி பரவி விடுகிறது)
காட்சி - 4
இடம் - நடுக்கடல் கொள்ளைக்கார கபாலியின் கப்பல், மாந்தர் - கடல் கொள்ளைக்காரன் கபாலி, அவன் தளபதி கோடாலி கருப்பன்
கபாலி: கோடாலி.. நம்ம ஆளு புறாச் செய்தி அனுப்பினானா.?
கோடாலி: அமாவாசை அன்னிக்கு யவன நாட்டுக்கு தொண்டி துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒண்ணு கிளம்புதாம். போகும் போது முத்து, பவளம்.வைரம். வரும் போது தங்கப் பாளங்களோட பயணம் செய்யப் போவுதாம்.
கபாலி: நம்பலாமா.?
கோடாலி: மடைபள்ளி குப்பண்ணாவிடம் அரண்மனை விகடகவி வெங்கண்ணா ரகசியாமாய்ச் சொன்னதை மண்டபத்தில் தூண் பின் மறைந்து நின்று கேட்ட அரண்மனைக் காவலன் நம் ஆள் செவிட்டு கோவிந்தன் அதை உறுதி செய்தான்.
கபாலி: சரி, செவிட்டு கோவிந்தனை கப்பல் கிளம்பியதும் சைகைச் செய்தி அனுப்பச் சொல்லு. அப்புறம் இனி கோவிந்தன் அங்கே இருக்க வேண்டாம்.. புது ஒற்றனை அனுப்பு.
கோடாலி : சரி தலைவரே...நம்ம ஓண்டிப் புலியை அனுப்பறேன். குடுகுடுப்பைக்காரன் போல பேசுவதில் வல்லவன்.
கபாலி: கோவிந்தன் சமிக்ஞை அனுப்பியதும் நமது கப்பல் ஒரு வியாபாரி கப்பலைப் போல அந்தக் கப்பலை நெருங்கி குடி தண்ணீர் உதவி கேட்பது போல் நடித்து உள் நுழைந்து கப்பல் தலைவனைக் கைது செய்து விட வேண்டும்.
கோடாலி: அப்படியே ஆகட்டும் தலைவரே.
கபாலி: இந்த முறை பொருட்கள் மட்டும் அல்ல.. நமது கப்பல் பழசாகி விட்ட து. வணிகக் கப்பலை அப்படியே நம் கபாலத் தீவுக்குக் கொண்டு போய் விட வேண்டும். நமது தோழர்களுக்கு தக்க உத்தரவுகளைக் கொடுக்க வேண்டும்.. நீ போய் அடுத்து ஆக வேண்டியவற்றைக் கவனி.
(கோடாலி வணங்கிச் செல்கிறான்)
காட்சி - 5
இடம் - தொண்டி துறைமுகம்,, மாந்தர் - வணிகர் மாசாத்துவன், வேலையாட்கள், வணிகக் கப்பலின் தலைவன் சுறாவேல், கபாலி
(இரவு அர்த்த சாமம் தாண்டி விடிவதற்கு நான்கு நாழிகை முன்னால். தீவட்டிகள் வெளிச்சத்தில் கப்பல் பிரம்மாண்டமாய் நிற்கிறது. சற்று தொலைவில் கலங்கரை விளக்கத்தின் பெரிய திரி எரிந்து வெளிச்சம் தெரிகிறது---மாசாத்துவான் வணிகக் கப்பலில் பெட்டிகள், மூட்டைகள் ஏற்றப்படுகின்றன---)
சுறாவேல்: மாலுமிகளே.. ஏற்ற வேண்டியவை இனி இல்லை. கிளம்பலாம். காற்று திசை மாறிவிட்டது. நங்கூரத்தை மேலே ஏற்றுங்கள். பாய்களை அவிழ்த்து விடுங்கள். துடுப்புகளை போடுங்கள்.
(மாசாத்துவான் கை அசைக்க கப்பல் கடலை நோக்கி விரைகிறது---அதே சமயம் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறி சுழலும் விளக்கின் அருகில் செவிட்டு கோவிந்தன் இரு தீப்பந்தங்களைக் குறுக்கும் நெடுக்குமாக அசைக்கிறான். கப்பல் கிளம்பி விட்டது என்பதற்கு சமிக்ஞையாக---).......(நடுக்கடலில் தயாராக இருக்கும் கொள்ளைக் கப்பலில்)......
கபாலி: அதோ கலங்கரை விளக்க உச்சியில் குறுக்கு நெடுக்காக தீப்பந்தத்தை நம் ஆள் அசைக்கிறான்.... தயாராகுங்கள் கப்பல் கிளம்பி விட்டது!
(சங்கேதமாக செய்தியை அனுப்பி விட்டு இறங்கும் கோவிந்தனை வெங்கண்ணா வீரர்களுடன் காத்திருந்து கைது செய்கிறான்)
வெங்கண்ணா: வாடா செவிட்டு கோவிந்தா.. காது கேளாதவன் போல நடிச்சு சபை செய்திகளை கொள்ளைக்காரனுங்களுக்கா அனுப்பறே.. வா சிறையில் களி தின்னலாம்!
(நடு நிசியில்... நடுக்கடலில் கபாலியின் ஆட்கள், வணிகக் கப்பலுக்குள் நுழைய, மறைந்திருக்கும் வீரர்கள் பெரும் வலைகளை பாய்மரத்தில் இருந்து அவிழ்த்து விட்டு மூட்டை போலக் கட்டிக் கொள்ளையர்களைக் கைது செய்கிறார்கள்)
காட்சி 6
இடம் - அரச சபை, மாந்தர் - மன்னர், அமைச்சர் , தளபதி வெங்கண்ணா மற்றும் அவையோர்
தளபதி கருத்திருமன்: மன்னா நம் வீரர் களுக்கு சிறு சிராய்ப்பு கூட இன்றி அனைத்துக் கொள்ளையர்களையும் வலை போட்டு பிடித்து விட்டோம்.
அமைச்சர்: இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நம்மிடம் சிக்கும் முன்னதாக அவர்கள் கொள்ளை அடித்த தங்கப் பாளங்கள் அடங்கிய இருபது பெட்டிகள் கைப்பற்றப் பட்டுள்ளன. கொள்ளைக்காரன் கபாலியை விசாரித்ததில் அதை நம் அண்டை நாடான பவள நாட்டு வாணிபக் கப்பலைக் கொள்ளை அடித்துக் கிடைத்ததாம். அந்தத் தங்கத்தை என்ன செய்வதுமன்னா ?
மன்னர்: பெரும் குதிரை வண்டிகளில் ஏற்றி உடனே பவள நாட்டுக்கு எடுத்துச் சென்று அவர்கள் பொருட்களை ஒப்படையுங்கள் அமைச்சரே. இந்த மொத்த செயல் திட்டத்துக்கும் மூளையாகச் செயல் பட்ட வெங்கண்ணாவுக்கு பத்தாயிரம் பொற்காசுகள் அடங்கிய என் அன்புப் பரிசு!
வெங்கண்ணா: வணங்கி பரிசைப் பெறுகிறார்.
(அவையில் கரகோஷம்!)
(திரை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!
சிஎஸ்கேவுக்கு பின்னடைவு.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் விலகல்!
அஸ்ஸாம் தேர்தல்: காங்கிரஸின் 3 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! பழங்குடியினருக்கு அதிக வாய்ப்பு!!

தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

