Enable Javscript for better performance
பசுமை விருந்து - புங்க மரம்- Dinamani

சுடச்சுட

  

   பசுமை விருந்து - புங்க மரம்  

  By DIN  |   Published on : 20th July 2019 10:54 AM  |   அ+அ அ-   |  

  PUNGA_MARAM

  மரங்களின் வரங்கள்!
   என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
   நான் தான் புங்க மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் பொங்கிமியா பின்னாடா என்பதாகும். நான் ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். பொங்கேமியா என்பது தென்னாட்டுப் பெயரான புங்கம் என்பதிலிருந்து உருவானதாகும். தமிழ்நாட்டின் பழமையான மரங்களுள் நானும் ஒருவன். வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் நான் முதன்மையானவன். ஏனெனில் என் இலைகள் சிறிதானவை, அடர்த்தியானவை. நான் ஊடுறுவும் காற்றை தடுக்காமல் நன்றாக அசைத்து விடுவதால், சுற்றுச்சூழலை குளிர்த்தன்மையுடன் வைத்துக் கொள்வதுடன் அடர்த்தியான நிழலையும் தருகிறேன். நான் பிராண வாயுவை அதிகளவு உற்பத்தி செய்வேன். சாலை ஓரங்களில் நிழலைத் தரவும், மண் அரிப்பைத் தடுக்க என்னை வளர்க்கிறார்கள்.
   நான் உங்களுக்கு அதிக அளவில் நிழல் தருவதோடு, மண்ணரிப்பையும், காற்று மாசுபடுதலையும் தடுப்பேன். நான் பருவ காலத்திற்கேற்றவாறு என்னை தகவமைத்துக் கொள்ளும் சிறப்புடையவன். வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையயை ஏற்படுத்தும் குணம் எனக்குண்டு.
   என் பூக்களில் தேன் செறிந்திருப்பதால் வண்டுகளுக்கு கொண்டாட்டம் தான். "புன்னை யணி மலர் துறைதொறும் வரிக்கும்' என ஐங்குறுநூறு (117) என்னை சிறப்பித்து கூறுகிறது. என் மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை. மல்லிகைப் பூப் போன்றிருக்கும் என் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயன்படுகிறது. என் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் புங்கம் எண்ணெய் பூச்சிக்கொல்லி மருந்தாகும்.
   குழந்தைகளே, சரும நோய்களுக்கு எண் எண்ணெய் சிறந்த மருந்து. வடுக்கள், தழும்புகள் மறைய வேண்டுமா, அவற்றின் மீது என் எண்ணெய்யை பூசுங்கள், இருந்த இடம் தெரியாது. என் மரத்தின், ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை இவை மூன்றையும் புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் விரைவில் ஆறும். அது மட்டுமா, என் பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் ஓடி விடும். சிலர் பல் துலக்க என் மரத்தின் குச்சியை பயன்படுத்தறாங்க.
   என் இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி குடித்து வந்தால் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் குணமாகும். இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வந்தால் வீக்கம் குறைந்து, காயம் ஆறும். இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் மறையும். குழந்தைகளின் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறுகள், பேதி ஆகியவற்றுக்கு புங்க இலைச்சாறு கைகண்ட மருந்தாகும். என் காற்று மாசுப்படுதலை கட்டுப்படுத்தும்.
   குழந்தைகளே, மரங்கள் இருக்குமிடம் மகிழ்ச்சியின் பிறப்பிடம். மரம் மனிதனின் மூன்றாவது கரமுன்னும் சொல்றாங்க. ஏன்ன, உங்க இரண்டு கரங்கள் மட்டும் இயற்கையை காக்கல, நாங்களும் இயற்கை காக்கறோம், அதனால் தான். மரங்களால் சூற்றுச்சூழல் வளமாகும், உங்களின் வாழ்வு நலமாகும். மரம் வளர்த்தால் வானம் மகிழ்ந்து பூ மாரி பொழியும், மழை பொழிந்தால் பூமி குளிரும், பூமி குளிர்ந்தால் பயிர்கள் செழிக்கும், பயிர்கள் செழித்தால் வறுமை ஒழியும்.
   நான் நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புன்கூர், அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயிலில் தலவிருட்சமாக இருக்கிறேன். என் தமிழாண்டு குரோதி., நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !!
   (வளருவேன்)
   - பா.இராதாகிருஷ்ணன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai