/

 இயற்கை ஷாம்பு - மணி பூவந்தி மரம்

 நான் தான் மணி பூவந்தி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் சபிண்டஸ் எமார்கினாட்டஸ் என்பதாகும்

News image
Updated On :23 நவம்பர் 2019, 6:39 am

மரங்களின் வரங்கள்!
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?
 நான் தான் மணி பூவந்தி மரம் பேசறேன். எனது தாவரவியல் பெயர் சபிண்டஸ் எமார்கினாட்டஸ் என்பதாகும். நான் சப்பின்டேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் தொன்மையான பாரம்பரியம் கொண்ட பழம்பெரும் மரமாவேன். உங்களுடைய புற அழுக்கை மட்டுமின்றி, அகத்தில் ஏற்படும் நோய்களையும் தீர்க்கும் வல்லமை படைத்தவன் நான்.
 எனக்கு பூவந்தி மரம், பூந்திக்கொட்டை மரம், சோப்புக்காய் மரம் என வேறு பெயர்களும் உண்டு. நான் நீள்வட்ட வடிவ இலைகளையும், பூங்கொத்துக்களாய் பூக்கும் வெண்ணிறமான மலர்களையும் கொண்டிருக்கிறேன். என் காய்கள் முட்டை அல்லது கோள வடிவில் இருக்கும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூத்து கோடையில் நான் காய்ப்பேன். நீலகிரி, ஆனைமலை, பழனிமலை, பொதிகைமலை காடுகள், தமிழகத்தின் வடமேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட வறண்ட காடுகள் போன்ற 2500 அடி வரையிலான உயரமான பகுதிகளிலும், அடர்ந்த மலைப் பகுதிகளிலும் என்னை நீங்கள் காணலாம். என் பழங்கள் மருத்துவ குணமுடையவை.
 சாதாரணமாக பூந்திக் கொட்டை எனப்படும் என் பழங்களின் உலர்ந்த சதைப் பகுதியை இடித்து நீரில் சற்று ஊறவைத்து பிழிந்தால், மிகுந்த நுரையுடன், நறுமணத்தோடு திடமான சாறு உண்டாகும். இதை எண்ணெய் வைத்த தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் இருக்கவே இருக்காது. தலையில் ஏற்படும் பேன், பொடுகு, சிரங்கு போன்ற பாதிப்புகளை அறவே நீக்கி தலைமுடியை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றுவதோடு உடலில் உள்ள கிருமிகளை எல்லாம் இந்த பூவந்தி பொடியின் ஆற்றல் மிக்க நுரையில் கலந்து வெளியேறி விடும். மனமும், புத்துணர்வு அடையும், உங்கள் உடலில் நல்ல நறுமணம் உண்டாகும்.
 என் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள் ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளை அழித்து, உங்கள் தோலுக்கு, பிரகாசத்தையும், மென்மையையும் தருகின்றன.
 உங்களுக்குத் தெரியுமா குழந்தைகளே, என் கொட்டைகளைத் தான் பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையான சோப்பாக, சுத்தம் செய்வதற்கான பொருளாக அக்காலமக்கள் பயன்படுத்தியிருக்காங்க. அதனால், அவர்களுக்கு எந்தவித நோயும் வந்ததில்லையாம். தலைமுடியும் கொட்டுவதில்லை. நரைத்த அல்லது வழுக்கை தலையினரை காண்பதும் அரிதாம். ஹும், இப்போது அப்படியா குழந்தைகளே.
 என் கொட்டைகளில் இருக்கும் மென்மையான பருப்பை சிறிது எடுத்து, நன்கு அரைத்து விழுதாக்கி, அதை பாலில் கலந்து ஊற வைத்து, சற்று நேரம் கழித்து வடிகட்டி, ஓரிரு துளிகள் மூக்கில் இட, மூக்கு மற்றும் வாயின் வழியே சளி வெளியேறும். என்ன ஆச்சரியம், சற்று நேரத்தில் காக்கா வலிப்பு, மயக்கம் பல் கிட்டிப் போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். பல் வலியா, கவலை வேண்டாம், என் கொட்டைகளை உடைத்து அதைப் பொடியாக்கி, இந்துப்பு சேர்த்து நன்கு வறுத்து, பற்பொடியுடன் கலந்து தினமும் பல் துலக்கினால் பற்களில் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கு சட்டென நீங்கிடும்.
 என் பழத்திலுள்ள ஆற்றல் மிக்க தாதுப் பொருட்கள் முகத்தில் ஏற்படும் பருக்கள், சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு புண்கள் போன்ற அனைத்து பாதிப்புகளையும் நீக்கும் திறன் எனக்கு உண்டு. பூவந்திக் கொட்டைகளை இட்ட நீரில் நகைகளை ஊற வைத்து அதன் பின் கைகளால் அந்த நகைகளை நீரிலேயே அலசி விட்டு வெளியில் எடுத்தால் நகைகள் புதுப் பொலிவுடன் மின்னும். பட்டுப் புடவைகளிலுள்ள கறையையும் நீக்கும் திறன் எனக்குண்டு.
 தூத்துக்குடி, நரிப்பையூர் பகுதியில், பிழைபொறுத்தம்மன் குடியிருப்பு பகுதியில் திறந்த வெளியில் அருள்மிகு பிழைபொறுத்தம்மன் காளி சிலை முன்பு நானிருக்கிறேன். குழந்தைகளே, இக்காளி சிலை பாண்டியர் காலத்தது. மலைப்பகுதிகளில் மட்டும் காணப்படும் நான் இங்கு கடற்கரை மணற்பகுதியில் காணப்படுவது சிறப்பு. இந்த மரம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததன்னு சொல்றாங்க. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.