Enable Javscript for better performance
மரங்களின் வரங்கள்!- Dinamani

சுடச்சுட

  
  sm12

  வறட்சியைத் தாங்கும் வெப்பாலை மரம்

  என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?

  நான் தான் வெப்பாலை மரம் பேசுகிறேன்.  எனது  அறிவியல் பெயல் ரைட்டியா டிங்டோரியா.  நான் அபோசைனாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.  எனக்கு நிலப்பாலை, இரும்பாலை, ஏகாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. ஸ்வேதகுடஜா என்ற வடமொழி பெயரும் எனக்குண்டு.  

  குறிஞ்சி,  முல்லை, நெய்தல், மருதம், பாலை  ஆகிய ஐந்து வகை நிலங்களில் பாலை நிலத்தைக் குறிப்பவன் நான்.  வறண்ட,  மிக வறண்ட மற்றும் ஈரப்பதமிக்க இடங்களிலும், மணற்பாங்கான மற்றும் மலைச்சரிவுகளிலும் நான்   வளருவேன். என் மர நிழலில் அமரும் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் சண்டைச் சச்சரவே இருக்காதுன்னு பெரியவங்க சொல்றாங்க. அந்த அளவுக்கு வசிய குணம் கொண்டவன் நான்.  என்னிடம் இருக்கும் வேதிப்பொருட்களான சைக்ளோ ஆர்டேன், பீட சிடோஸ்டெரால், பீடா அமிரின் மற்றும் தாதுகள், அமிலங்கள் உடலில் ஏற்படும் வியாதிகளைத் தணித்து உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

  யானைக்கு தாகம் ஏற்பட்டால், என் மரப்பட்டையைக் கிழித்து  நீர் பருகும். பட்டைஉரிக்கப்பட்ட பகுதி தந்தம் போல் வெண்மையாக இருக்கும்.   அதனால் என்னை தந்தப்பாலை என்றும் என்னை அழைப்பார்கள். என் காய்கள் பீன்ஸ் போன்றிருக்கும்.  இலைகள் வேப்பிலையைப் போன்ற வடிவினை கொண்டிருக்கும்.  என் பூக்கள் வெண்ணிறத்தில் நறுமணமுடையதாக மல்லிகைப் பூ போன்ற வடிவில் ஒவ்வொரு கிளையின் முனையிலும் இருக்கும். 

  வெப்பு எனப்படும் உஷ்ணம் சம்பந்தமான நோய்களான வயிற்றுக் கழிச்சல், சரும நோய்கள், உடல்சூடு, காய்ச்சல் போன்ற நோய்களை  நான் தீர்ப்பேன் என்பதால் எனக்கு வெப்பாலை என பெயர் வந்ததுன்னு சொல்றாங்க. அரிப்புடன் கூடிய தோல் நோய், சொரியாசிஸ் ஆகியவற்றுக்கு  மருந்து எங்கிட்ட இருக்கு. 

  என் மரப்பட்டையில் அர்சாலிக் ஆசிட் எனப்படும் அமிலத் தன்மை மிகுதியாக உள்ளது.  இது உடலின் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், இது இரத்தத்தில் சேரும் கொழுப்பைக் கரைத்து வெளியேற்றக் கூடியது. இதிலிருந்து தான்  தான் பேட்டா அமிரின் என்னும் வேதிப் பொருளை பிரித்தெடுக்கிறார்கள். இது வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுது.  மேலும், இது மலேரியா எனும் குளிர்க்காய்ச்சல், மூட்டுவாதம், பல்வலி, வீக்கம் இவற்றைக் குணப்படுத்தும்  மருந்தாகவும் பயன் தருது.  என் பட்டையை பசுமையாக இடித்து சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாறுடன் பசும்பால் சேர்த்துப் பருகி வந்தால் சிறுநீரக நோய்கள் பறந்து விடும்.

  என் இலைகள் பல்வலிக்கு சிறந்த நிவாரணி.  என் இலையோடு சிறிது உப்பு சேர்த்து மென்று, சிறிது நேரம் வாயில் வைத்திருந்து துப்பிவிட பல் வலி, பல் சொத்தை குணமாகும். என் இலைகள் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.  வயிற்றுப் போக்குக்கான மருந்தையும், உலர்ந்த சருமம், பொடுகை போக்கும் தைலத்தையும்  என் இலையிலிருந்து தயாரிக்கிறாங்க. என் இலைகளை அரைத்து விழுதாக்கி அக்கிப் புண்கள், பொன்னுக்கு வீங்கி என்ற சொல்லப்படும் புட்டாலம்மை ஆகியவற்றின் மீது தடவினால் வலியைக் குறைந்து வீக்கத்தைப் போக்கும். என் மரக்கட்டை சிற்பங்கள், தீக்குச்சி, மரப்பெட்டி செய்ய பயன்படுகின்றன.

  நான் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முனுகப்பட்டு அருள்மிகு பச்சையம்மன் திருக்கோயிலில் தலவிருட்சமாக இருக்கிறேன்.  மரம் வளர்ப்போம், ஆரோக்கியம் காப்போம்.  நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.

  (வளருவேன்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai