அரங்கம்: கல்வெட்டு
மாந்தர் - கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் - சாமி, அவர் நண்பர் சுந்தரம், கேடி ரங்கன் அவன் நண்பன் கில்லாடிமுருகன்


காட்சி - 1
இடம் - பூங்கா
மாந்தர் - கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் - சாமி, அவர் நண்பர் சுந்தரம், கேடி ரங்கன் அவன் நண்பன் கில்லாடிமுருகன்
சாமி - வாங்க சுந்தரம்.. காந்தி சிலை பின்னால்
உங்களுக்காகத் தான் காத்திருக்கேன்.
சுந்தரம் - இது தானே நாம வழக்கமா சந்திக்கும் இடம். வர்ற வழியில் பஸ் பிரேக் டவுன், வேறே பஸ் பிடிச்சு வர்றேன்.. இந்தாங்க நல்லூர் சிவன் கோயில் சுவர் கல்வெட்டு பிரதி
(ஓரு காகிதச் சுருளை நீட்டுகிறார்.)
சாமி - தஞ்சாவூர் பள்ளி அக்ரஹார கல்வெட்டில் இந்தக் கோயிலைப் பற்றி ஒரு குறிப்பு இருக்கு. தங்கப் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய ரகசிய சங்கேதக் குறிப்புகள் இதில் தெளிவா இருக்கு!....
(அப்போது சிலைக்கு மறுபுறம் கடலை உரித்து
சாப்பிடும் ரங்கன் இதைக் காதில் வாங்குகிறான்)
கில்லாடி முருகன் - அண்ணே.. நாம பெரிய ஆளா ஆகணும்ன்னா எதுவும் புதையல் அகப்பட்டாதான் உண்டு.
ரங்கன் - (வாயில்ஆட் காட்டி விரலை வைத்து) உஷ் கவனமா கேளு!... (என மறு பக்கத்தைக் காட்டி சைகை செய்கிறான்)
சாமி - அந்தக் காலத்தில் மாமன்னர்கள் இறந்து விட்டால் உடல் எரிக்கப்பட்டு அவர்களின் சாம்பலை ஒரு தங்கக் குட த்தில் வைத்து கோயில் அருகில் கோயில் மூலவர் சிவலிங்கத்துக்கு நேர் பின் புறம் பிரகாரத்தில் ஒரு மேடை கட்டி உள்ளே வைத்து அதன் மேல் சிறு சிவலிங்கம் வைத்திருப்பார்கள். உள்ளே நவரத்தினங்கள், மன்னரின் அணிகலன்கள், வாள் எல்லாம் இருக்கும்.
சுந்தரம் - இதை எப்படியோ தெரிந்து கொண்டு பல கோயில் பிரகாரங்களில் இருந்த மேடைகளை இடித்து புதையலை சில தீய சக்திகள் எடுத்து இருக்கிறார்கள். இந்த நல்லூரிலும் அப்படிச் செய்திருக்கிறார்கள். ரகசியம்!... வெளியே கசிந்தால் புதையலுக்கு ஆபத்து! நமக்கும் ஆபத்து. சரி, அடுத்தவாரம் நல்லூருக்குப் போறோம். போலீஸூடன் தொல்லியல் இலாக்கா ஆட்களுடன் தோண்டி புதையலை எடுக்கறோம். வரட்டுமா,.... நீங்க சங்கேதக் குறியீடுகளின் அர்த்தத்தை ஆராய்ச்சி செய்து வைங்க. இரவில் இடம் தெரியாது. பகலில் போய் சுண்ணாம்புக் கோடு போட்டு வச்சிட்டு இரவில் ஜெனெரேட்டர் வச்சுதான் தோண்டனும். இல்லாவிட்டால் மக்கள் கூடி விடுவார்கள்.
(இருவரும் போனதும்)
ரங்கன் - முருகா, காதில் விழுந்திச்சா!...... நல்லூருக்கு நாளைக்கே போறோம்!.... புதையலை எடுக்குறோம்!... பிரிச்சுக்குறோம். கோவில் எங்கே இருக்குன்னு தெரியுமில்லே?
முருகன் - என்னா இப்படி கேட்டுட்டீங்க.. அந்தக் கோயில் நடராஜர் ஐம்பொன் சிலையைத் தானே ஆஸ்திரேலியா பார்ட்டிக்கு விக்க என் வீட்டில் புதைச்சு ஒளிச்சு வச்சிருக்கோம்.
ரங்கன் - மெதுவா பேசுடா.. சரி நம்ம ஆளுங்களை தயாரா கடப்பாரை மண்வெட்டி சகிதம் இருக்கச் சொல்லு. நாளைக்கே நடு ராத்திரி தாண்டியதும் தோண்ட ஆரம்பிக்கிறோம்.
காட்சி 2
இடம் - நல்லூர் கோயில் சிவன் சந்நிதி
காலம் - இரவு எட்டு மணி
மாந்தர் - ரங்கன், முருகன், சில பக்தர்கள், கோயில் குருக்கள்
குருக்கள் - அபூர்வமாத்தான் மக்கள் இங்கே வர்றாங்க. மாமன்னர் ராஜராஜ சோழர் வழிவந்த ஒரு கடைசி சோழராஜா சமாதி வெளிப் பிரகாரத்தில் இருக்கறதா சொல்லிக்கறாங்க.
(பிரசாத விபூதியைத் தருகிறார்)
ரங்கன் - சாமி ரொம்ப வரலாற்று முக்கியம் வாய்ந்த கோயில் இதுன்னு நினைக்கிறேன்.
(திருநீரை பய பக்தியுடன் பெற்றுக் கொண்டு நூறு ரூபாய் தட்டில் போடுகிறான்.)
குருக்கள் - என்னத்தைச் சொல்ல .. இங்கிருந்த மூணடி உயர புராதான நடராஜர் ஐம்பொன் சிலை காணாமல் போயி ஒரு வருஷம் ஆவுது. போலீஸ் வாரா வாரம் வந்து போறாங்க. சின்ன கிராமம்.. இருட்டிட்டா ஜனங்க தெருவிலேயெ நடமாடறதில்லே.. யாரு எடுத்தாங்களோ.. மத்த சிலைகள் எல்லாத்தையும் டவுனில் உள்ள பெரிய சிவன் கோயில் சிலைகள் காப்பகத்துக்கு கொண்டு போ யிட்டாங்க....சரி, கோயிலைப் பூட்டணும் கிளம்பலாமா!
(குருக்கள் எல்லா கதவுகளையும் பூட்டிவிட்டுக் கிளம்புகிறார்....நடுஇரவு.. கோயிலின் பிரகாரச் சுவர் மேல் ஏணி வைத்து ஒருகும்பல் உள்ளே நுழைகிறது.)
காட்சி - 3
இடம் - கோவில் பிரகாரம்
மாந்தர் - ரங்கன், முருகன், திருட்டு கும்பல்
ரங்கன் - முருகா, ஆராய்சியாளர் சாமி பையில் இருந்த கல்வெட்டுச் சுருளை களவாடிகொண்டு வந்திட்டியே பலே!
முருகன் - பஸ்ஸில் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கிட்டு நைஸா பிளேடு போட்டு உருவிட்டேன்!...
ரங்கன் - சரி, நம்ம கிட்டே இருக்கிற கல்வெட்டு படிக்கிற ஆள் கோவிந்தனைக் கூப்பிடு!
(கோவிந்தன் காகிதச் சுருளைப் பிரித்து
தரையில் வைத்துப் படிக்கிறான்.)
கோவிந்தன் - செல் போன் லைட்டை நல்லா அடிங்கப்பா எழுத்து ரொம்ப லேசா தெரியுது. அச்சு தெளிவா இல்லே!
(கோவிந்தன் படிக்கிறான்) பாட்டு மாதிரி எழுதி இருக்கு.. ம் படிக்கிறேன்.. ராஜாதி ராஜ ஸ்ரீ விக்கிரம பூபதி பேரன் புகழ் வாழ்க..கொள்ளிடம் கரையில் பள்ளிப் படையில் உள்ள ராஜாதிஸ்ரீ பார்த்திபேந்திர மன்னரின் புகழ் வாழ்க புதல்வன் ஆன ராஜாதி ராஜஸ்ரீ விக்கிரமசோழரின் இறுதிக்கிரியை சாம்பல் அடங்கிய குடம் இங்கே மண்ணுக்குள் மாவீரன்....நந்தியின் பார்வை அநேக ஆசி...
முருகன் - ஒண்ணும் புரியலையே.”
கோவிந்தன் - என்னா புரியலே சமாதி மேடைக்கு மேல் சிவலிங்கம் சின்னதா இருக்கு அதன் முன் சின்ன நந்தி இருக்கா. அது திரும்பி எங்கோ பார்க்குது பார்.. அந்த கண் போற திசையில் மூலையில் தோண்டுங்கப்பா
முருகன் - கோவிந்தன் அண்ணே உங்க அறிவே அறிவு. தோண்டுங்கப்பா அந்த மூலையில் உள்ள பெரிய கல்லை நகர்த்துங்க
(ஆட்கள் தோண்ட)
ஒருவன் - “தலைவா.. ஒரு படிக்கட்டு மாதிரி உள்ளே போகுது..”
ரங்கன் - கல்லை நகர்த்தி எடுங்க.. உள்ளே இறங்குங்க
(அந்த படிக்கட்டுகள் கீழே செல்ல செல்போன் வெளிச்சத்தில் உள்ளே இறங்குகிறார்கள். அங்கே ஒரு விஸ்தாரமான கூடம் தென்படுகிறது)
முருகன் - அண்ணே சோழராஜ்யத்தின் மொத்த கஜானாவும் இங்கே தான் இருக்கு போல.. நிறைய பெட்டிகள் இருக்கே
கோவிந்தன் - அவசரப் படாதீங்க.. பெட்டிகளுக்குள் என்ன இருக்குன்ன்னு பார்க்கு முன் கொஞ்சம் கவனிங்க கீழே.. ஷூ காலடித் தடங்கள் நிறைய தென்படுது. போலீஸ் வந்திருக்கலாம் என உள்ளுணர்வு சொல்லுது
ரங்கன் - நமக்கு முன்னால் யார் எப்படி வரமுடியும்..சரி பெட்டிகளை மெதுவா மேலே கொண்டு போயிடுவோம்.
(அப்போது படார் படார் என எல்லா பெட்டிகளில் இருந்தும் மூடிகளைத் திறந்து கொண்டு ஆயுதம்
ஏந்திய காவல் படை வீரர்கள் எழுகின்றனர்.. ஒரு பெட்டியில் இருந்து குருக்கள் வருகிறார் ஒரு
பெட்டியில் இருந்து ஐஜி ராஜு எழுகிறார்)
குருக்கள் - சார் இந்த கயவாளிப் பசங்க தான் நடராஜர் சிலை காணாமல் போன முதல் நாள் கோயிலுக்கு வந்தானுங்க..., விடாதீங்க!
ஐ.ஜி.ராஜு - (துப்பாக்கியை நீட்டி) மரியாதையா சரண் அடைங்க.. இல்லாட்டி உங்க சமாதியும் இங்கே தான்.
(எல்லோரும் கையைத் தூக்கி சரண்
அடைகிறார்கள்.)
காட்சி 4
இடம் - சிலை கட த்தல் தடுப்பு பிரிவு அதிகாரி அலுவலகம்
மாந்தர் - ஐஜி ராஜு, குருக்கள், காவல் படை வீரர்கள் (சிறை கம்பிக்குப் பின்) சிலை திருடும் கும்பல்.
ராஜு - நடராஜர் சிலையை எடுத்து வர முருகன் வீட்டுக்கு காவலர்கள் போயிருக்காங்க.. ம்... சொல்லு ரங்கா..வேறே எந்தெந்த கோயில்களில் சிலை எடுத்தீங்க. அப்புறம் அருங்காட்சியகங்களில் என்ன பண்ணுனீங்க.. சிசி டிவி கேமிரா காட்டுது..மியூசியத்தில் அங்குமிங்கும் ஏன் அலையறீங்க?
ரங்கன் - ஐயா பழங்காலப் பொருட்களை அருங்காட்சியக மியூசியங்களில் இருந்து டூப்ளிகேட் செஞ்சு வச்சிட்டு ஒரிஜினலைத் திருடி விப்போம். சிலை எடுக்கறதுக்கு முந்தி இது தான் செஞ்சோம்
(அப்போது சாமியும் சுந்தரமும் உள்ளே வர)
ராஜு - ரொம்ப நன்றி. நான் சொன்ன மாதிரி பூங்காவில் நீங்க பேசினதுக்கு. முழுசும் இந்தப் பசங்க காதில் தெளிவா விழணுமேன்னு கவலையா இருந்தது.
சுந்தரம் - பஸ்ஸில் காகிதச் சுருள் வெளியே கண்ணில் படும் படி வச்சிருந்தேன் சார் நீங்க சொன்னபடி.
ராஜு - சுருள் காணாமல் போனதும் உஷாரானோம். இவங்க கூட்டத்தில் கல்வெட்டுகளை நம்மை விட தெளிவா படிச்சு புரிஞ்சு சொல்ல ஆள் இருக்கிறாங்கன்னு நம்ம உளவுத்துறை டிஎஸ்பி சொன்னார். கோவிந்தன் கல்வெட்டு படிக்கும் திறமைஅபாரம்..இவனை எகிப்துக்கு அனுப்பிச்சா பிரமிடு ரகசியங்களையே படிச்சு சொல்லிடுவான்
சாமி - ஆனா நல்ல திசையில் புத்தி போகலையே. ஒருவனுடைய திறமையை ஆக்கவேலைக்குத் தான் பயன் படுத்தணும்.
ராஜு - உண்மை தான் சார்.. இந்தக் கேடிப் பசங்க பிற்காலத்தில் வருவாங்கன்னு தெரிஞ்சு தான் மாபெரும் பொக்கிஷங்களை மறைச்சு வச்சு கல்வெட்டுகளில் சங்கேதமா குறிச்சுட்டுப் போயிட்டாங்க முன்னோர்கள். ஆனா பல பொக்கிஷ புதையல்களை கண்டு பிடிக்கவே முடியலே. மண்ணுக்குள்ளேயே இருக்கு.
சுந்தரம் - ஒரு ஆய்வு என்ன சொல்லுதுன்னா. பூமிக்கு மேலே மக்கள் கைகளில் உள்ள தங்கத்தின் அளவை விட நூறு மடங்கு மூழ்கிய கப்பல்களிலும், புதையலாக மண்ணில் புதையுண்டும் தங்கம் இருக்காம்.
(அப்போது மேள தாள நாதஸ்வர முழக்கம் கேட்க)
ராஜு - முருகன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நடராஜர் விக்கிரகத்தை பக்தர்கள் ஊர்வலமா எடுத்துப் போய் கோயிலில் திரும்பவைக்கப் போறாங்க.
(சிலையைத் தூக்கி வரும் பக்தர்கள் ஒரு நிமிடம் காவல் நிலைய வாசலில் நிற்க குருக்கள் தீபாராதனை செய்கிறார். எல்லோரும் வணங்குகிறார்கள்)
சாமி -மீண்டும் விக்கிரகம் அங்கே கிராமத்து கோயிலில் இருக்கலாமா
ராஜு - ஒரு வாரம் இருந்ததும் அது சிலைகள் காப்பகத்துக்குப் போயிடும். ஒண்ணு தெரியுமா சார்.. இப்போ எல்லாம் நான் கோயிலுக்குப் போனால் பக்தியை மிஞ்சி என்னை அறியாமல் அங்கிருக்கும் விக்கிரகம் உண்மையானது தானா ? இல்லே கயவர்களால்மாற்றி வைக்கப்பட்ட ஒன்றா? என்ற எண்ணமே கண் முன்னால் நிக்குது. கள்வர்கள் மனதில் இது எத்தனை ஆயிரம் வருஷம் பழசு? எத்தனை கோடிக்குப்போகும்? என்ற எண்ணம் வருகிறது.
சுந்தரம் - தீய எண்ணமுடைய கள்வர்களை மட்டுமா படைக்கிறார் கடவுள். அதைக் கண்டுபிடிக்க உங்களைப் போன்ற அதிகாரிகளையும் தான் படைக்கிறார்.
ராஜு - அது மட்டுமா.. கல்வெட்டுகளை ஆராய்ந்து எங்களுக்கு விளக்கம் சொல்ல சுந்தரம், சாமிகளையும் கூடவே படைக்கிறார்.
(கல்வெட்டு ஆய்வாளர்கள் இருவரும் சிரிக்கின்றனர்)
(திரை)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...