அறம் செய விரும்பு!

பூஜை அறையில் விநாயகர் சிலைக்கு அழகிய ரோஜா மாலை போடப்பட்டுள்ளது. அக்கா பூஜாவும், தம்பி தேஜாவும் அருகருகே நின்றுகொண்டு சாமி கும்பிடுகின்றனர்.
 அறம் செய விரும்பு!

 அரங்கம்
 ஆத்திசூடி நாடகம்
 காட்சி - 1,
 இடம் - பூஜா, தேஜா வீடு. சிறிய பங்களா. வாசலில் "அவ்வை இல்லம்' என்ற போர்டு. மாந்தர் - சிறுமி பூஜா, சிறுவன் தேஜா, அம்மா அம்சவேணி, அப்பா ஞானவேல்.
 (பூஜை அறையில் விநாயகர் சிலைக்கு அழகிய ரோஜா மாலை போடப்பட்டுள்ளது. அக்கா பூஜாவும், தம்பி தேஜாவும் அருகருகே நின்றுகொண்டு சாமி கும்பிடுகின்றனர். அவர்கள் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படத் தயாராக யூனிபாரத்துடன் நிற்கின்றனர்.
 
 பூஜா, தேஜா இருவரும் : (பாடுகின்றனர்) பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்.......
 (குழந்தைகளின் அம்மா அம்சவேணி டைனிங் டேபிளில் காலை உணவு பறிமாற ஏற்பாடு செய்து கொண்டிருத்தல்)
 (பாட்டு தொடர்கிறது) ....கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா....
 (குழந்தைகள் கை கூப்பி வணங்க....--- நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படிக்கும் ஞானவேல், பெருமையுடன் தன் குழந்தைகளைக் கவனிக்கிறார். -- டைனிங் டேபிள் அருகே நின்றுகொண்டிருக்கும் அம்மா அம்சவேணி. --)
 அம்சவேணி : பூஜா,.... தேஜா,.... சாமி கும்பிட்டாச்சுன்னா சாப்பிட வாங்க..... டிபன் சாப்பிடலாம். பள்ளிக்கூடத்திற்கு நேரமாச்சு.....
 பூஜா : இதோ வந்துட்டேம்மா.... வாடா, தேஜா...
 (பூஜாவும், தேஜாவும் அப்பாவைக் கடந்து செல்லும்போது...)
 இருவரும் : குட்மார்னிங் டாடி...
 ஞானவேல் : வெரி குட் மார்னிங்...
 (பூஜாவும், தேஜாவும் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவாறு )
 இருவரும் : குட் மார்னிங்ம்மா...
 பூஜா : இன்னிக்கு என்னம்மா டிபன்?
 அம்சவேணி : சாரி, பூஜா.... இன்னிக்கு உன் தம்பிக்குப் பிடிச்ச இட்லி செஞ்சுட்டேன்!.... நானைக்கு உனக்குப் பிடிச்ச தோசை.... ஓ.கே வா?.... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா....
 பூஜா : பரவாயில்லைம்மா.... இட்லிதான் காலையிலே நல்ல உணவுன்னு எங்க மிஸ் சொன்னாங்க.... நான் பழக்கப்படுத்திக்கிறேன்.
 அம்சவேணி : நல்ல பொண்ணு.
 தேஜா : அம்மா இனிமே தேஜா அக்காவும், என்னை மாதிரி இட்லி சாப்பிட்டு ஸ்ட்ராங்கா குண்டாயிடுவாங்க.... இல்லையாம்மா?.... (கையை மடித்துக் காட்டுகிறான்)
 பூஜா : போடா, நான் ஐஸ்வர்யா ராய் மாதிரி ஒல்லியாத்தான் இருப்பேன்.
 தேஜா : அப்போ அம்மா குஷ்பு இட்லி செஞ்சா சாப்பிடமாட்டியா? (சிரித்தல்)
 
 காட்சி - 2,
 இடம் - வீடு, மாந்தர் - பூஜா, தேஜா, அம்சவேணி, ஞானவேல்.
 (அம்மா அம்சவேணி
 ஒரு பால் பாக்கெட்டைக் கொண்டுவந்து)
 
 அம்சவேணி : பூஜா, இந்தப் பால் பாக்கெட்டை வழக்கம்போலப் பிள்ளையார் கோவில் அர்ச்சகர் கிட்டே குடுத்துட்டுப் பள்ளிக்கூடம் போங்க....
 பூஜா : சரிம்மா...
 தேஜா : அபிஷேகத்துக்காம்மா?....
 அம்சவேணி : ஆமாம்ப்பா.... என் கொழந்தைங்க நல்லா இருக்கணும்னு வேண்டுதல்....
 இருவரும் : ஓ.கே. நாங்க வரோம்மா.....
 (இருவரும் செல்கின்றனர். - அம்சவேணி, ஞானவேல் அருகில் வந்து...)
 அம்சவேணி : என்னங்க.... நம்ம கொழந்தைங்க நல்ல பிள்ளைங்க...
 ஞானவேல் : எல்லாம் அம்மா சரியா இருந்தா குடும்பமே நல்லா இருக்கும்....
 அம்சவேணி : ஏன்.... நீங்க மட்டும் என்னவாம்?...
 ஞானவேல் : விளையாட்டுக்குக் கூட நீ என்னை விட்டுக் குடுக்கமாட்டியே!.... அதுதான் என் அம்சவேணி!
 
 காட்சி - 3,
 இடம் - பக்கத்து வீட்டு வாசல். மாந்தர் - பூஜா, தேஜா, பக்கத்துவீட்டுச் சிறுவன் செல்வம், செல்வத்தின் தாய் சிங்காரி.
 (பக்கத்து வீட்டு வாசலில் இவர்களுடன் படிக்கும் செல்வத்தின் அம்மா சிங்காரி நின்று கொண்டிருக்க...)
 
 பூஜா : ஆன்ட்டி, செல்வம் பள்ளிக்கூடத்துக்கு வரலையா?
 சிங்காரி : ம்.... அவன் உங்க மாதிரி நேரத்துக்கு எழுந்து குளிச்சி, ஸ்கூலுக்குக் கிளம்பறவனா?.... எருமை மாடு மாதிரி எட்டு மணிக்கு குளிக்கப் போனான். பைப்புலே தண்ணி நின்னுபோச்சு! பாத்ரூமுக்குள்ள கிணத்துல விழுந்த ஆந்தை மாதிரி முழிச்சிட்டு நிக்கறான்!.... நீங்க போங்க!
 (இருவரும் செல்கிறார்கள்)
 
 காட்சி - 4,
 இடம் - சாலை, மாந்தர் - சாலையைக் கடக்க முடியாமல் ஒருவர்.... பூஜா, தேஜா.
 ( சாலையில் வாகனங்கள் நிறையப் போகின்றன. சிக்னல். சாலையைக் கடக்க முடியாமல் ஒருவர் நிற்க, பாதசாரிகளின் பச்சை சிக்னல் கிடைத்தவுடன் பூஜாவும், தேஜாவும் அவருக்கு உதவுகின்றனர்.)
 
 காட்சி - 5,
 இடம் - சாலை, மாந்தர் - கைக்குழந்தையுடன் ஒரு பெண், பூஜா, தேஜா.
 (பிள்ளையார் கோயில் மணி ஒலிக்கிறது. பூஜாவும், தேஜாவும் கோயிலுக்கு அருகே வந்ததும், கைக்
 குழந்தையுடன் ஒரு பெண் அங்கே வருதல். குழந்தை அழுகிறது.)
 
 பெண் : அம்மா தாயீ!.... அந்தப் பாலை குடும்மா.... கொழந்தை ரெண்டா நாளா பட்டினி.... பாலுக்கு அழுதும்மா....
 பூஜா : இந்தா....
 தேஜா : அக்கா, வேண்டாம்!..... கோயிலுக்கு அம்மா குடுக்கச் சொல்லியிருக்காங்க!.... சாமி கோவிச்சுக்கும்....
 பூஜா : நாம் எல்லாருமே சாமியோட கொழந்தைங்கதான்னு, அம்மா சொல்லியிருக்காங்க.... அழற இந்தக் குழந்தைக்குப் பால் குடுத்தா சாமி கோபப்படாதுடா...
 (பாலைக் கொடுக்கிறாள்)
 
 காட்சி - 6,
 இடம் - பூஜா, தேஜா வீடு, மாந்தர் - பூஜா, தேஜா, அம்மா அம்சவேணி, அப்பா ஞானவேல்.
 (பூஜாவின் அம்மா அம்சவேணி டென்ஷனுடன் அங்கும், இங்கும் உலாவிக்கொண்டிருக்கிறார். அடிக்கடி வாசலைப் பார்க்கிறாள்.)
 
 ஞானவேல் : வீணா கோபப்படாதே.... கொழந்தைங்க ஸ்கூல்ல இருந்து வர்ற நேரம்தான்..... நிதானமா விசாரிப்போம்.
 (அப்போது பூஜாவும், தேஜாவும் உள்ளே வருகின்றனர்)
 அம்சவேணி : நில்லுங்க!..... பால் பாக்கெட் கோயிலுக்கு வரலேன்னு அர்ச்சகர் போன் பண்ணினாரு! என்ன செஞ்சீங்க?
 தேஜா : நான் வேண்டான்னுதாம்மா சொன்னேன்.... பூஜாதான்...
 அம்சவேணி : பூஜா....
 பூஜா : இரண்டு நாளா, பால் இல்லாம, பசியோட இருந்த ஒரு குழந்தைக்குப் பாலைக் குடுத்துட்டேம்மா!.... தப்பாம்மா?....
 ஞானவேல் : அம்சவேணி! நான் சொல்லலே!.... நம்ம கொழந்தைங்க.... தப்பே பண்ணாதுன்னு!.....
 (அம்சவேணி மெதுவாக வந்து பூஜாவையும், தேஜாவையும் அணைத்துக் கொள்கிறாள்.)
 பூஜா : சாரிம்மா....
 அம்சவேணி : நோ.... சாரி... இப்பத்தாம்மா உண்மையிலேயே, சாமிக்கு அபிஷேகம் பண்ணின புண்ணியம் கிடைச்சிருக்கு....
 தேஜா : அம்மா,.... கண் தெரியாத ஒருத்தருக்கு இன்னிக்கு உதவி செஞ்சோம்...
 அம்சவேணி : உங்களுக்கு என்ன பரிசு தர்றதுன்னு தெரியலையே!
 பூஜா : வேண்டாம்மா.... நல்ல காரியங்கள் செய்யும்போது எதையும் எதிர்பார்க்கக் கூடாது.... அப்பதான் நமக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும்னு அப்பா சொல்லியிருக்காரு!...
 ஞானவேல் : நான் எங்கம்மா சொன்னேன்.... ஒளவையார், ஆத்திசூடியில், வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் சொல்லியிருக்காங்க!
 தேஜா : அதுதான் நம்ம வீட்டுக்கு அவ்வை இல்லம்னு பேர் வச்சீங்களாப்பா?....
 ஞானவேல் : ஆமாம்....
 (திரை )
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com