அரங்கம்: இணைய வழிக் கல்வி!

என்ன தம்பிகளா... ஆன்லைனில் நடத்துற பாடங்கள் புரியுதா? நேரில் சொல்லித் தருவதே சமயத்துல புரியறதில்லையே?
அரங்கம்: இணைய வழிக் கல்வி!

காட்சி 1
இடம் வீடு
மாந்தர் பாலு, கோபி, மாலினி, ஆசிரியை
(இணைய வழியில் கல்வி நடக்கிறது)

ஆசிரியை: என்ன தம்பிகளா... ஆன்லைனில் நடத்துற பாடங்கள் புரியுதா? நேரில் சொல்லித் தருவதே சமயத்துல புரியறதில்லையே?
பாலு: அப்படியெல்லாம் இல்லை மிஸ். நல்லாவே புரியுது.
கோபி: (முணுமுணுத்துக் கொண்டே) நேரில் நடத்துவதை விட நல்லாவே புரியுது மிஸ்...
ஆசிரியை: என்ன சொன்னே?
கோபி: ஒண்ணுமில்லை மிஸ்... (எல்லோரும் சிரிக்கிறார்கள்)
ஆசிரியை: சரி, ஆன்லைன் பாடத்தை இன்னையோட முடிக்கலாம்னு இருக்கேன். இன்னும் ரெண்டு வாரத்துக்கு ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை.
மாலினி: வேண்டாம் மிஸ்... வீட்டுல இருந்து போர் அடிக்குது. வகுப்பு வச்சாதான் ஜாலியா இருக்கு.
ஆசிரியை: இல்லை. விடுமுறை விட்டது விட்டதுதான். ஆனா ஒரு நிபந்தனை. (எல்லோரும் உற்று கவனிக்கிறார்கள்)
மாலினி: சொல்லுங்க மிஸ்.
ஆசிரியை: இந்த கரோனா காலத்துல ஊர் சுத்த முடியாது. அதே நேரத்துல விடுமுறையை உபயோகமா பயன்படுத்தணும். என்னென்ன பண்ணோம்னு அடுத்த வகுப்புல சொல்லணும். சரியா?
மாணவர்கள் (கோரஸாக): கண்டிப்பா சொல்லுவோம் மிஸ்...

காட்சி 2
இடம் கோபியின் வீடு
மாந்தர் கோபியின் அம்மா, கோபி,
அம்மா: டேய்.... என்னடா அங்கே பண்றே? சீக்கிரம் சாப்பிட வா...

கோபி: இரும்மா... இங்கே பால்கனியில செடி வச்சிட்டு வரேன்...
அம்மா: அப்படி என்னென்ன செடி வச்சிருக்கே, பால்கனியில? காட்டு, பார்ப்போம்...
கோபி: இது ரோஜா செடி, இது கொத்தமல்லி செடி, இங்க இருக்கறது துளசி செடி, நீ இனிமே இங்கேயே சுத்தி வந்து சாமி கும்பிடலாம்.
அம்மா: இது என்னடா மல்லி செடியா?
கோபி: (மகிழ்ச்சியுடன்) ஆமாம் அம்மா. அழகா இருக்கா?
அம்மா: நல்லா இருக்கு. மல்லி செடி கொஞ்சம் வளர்ந்தா, பெரிய கொடியா மாறும். பால்கனியில வைத்தா சுவரெல்லாம் விரிசல் வருமே...
(கோபியின் முகம் சுருங்குகிறது)

அம்மா: கவலைப்படாதே டா. மொட்டை மாடி சும்மா தானே இருக்கு. அப்பா கிட்டே சொல்லி கொஞ்சம் மண்ணு கொட்டச் சொல்றேன். பெரிய செடிகளை கொஞ்சம் அங்கே வைக்கலாம்.
கோபி: அம்மான்னா அம்மாதான் (அம்மாவை கட்டிக் கொள்ள வருகிறான்)
அம்மா: (சற்றே நகர்ந்து) முதல்ல கை அலம்பிட்டு வாடா. சாப்பிட்டு தயாராகு. கொஞ்ச நேரத்துல உன் ஓவிய ஆசிரியர் "ஸþம்'ல வருவாரே.

காட்சி 3
இடம் வீடு மாந்தர் பாலுவின் அம்மா, பாலு, பாலுவின் அக்கா. செஸ் மாஸ்டர். பாலுவின் அப்பா
பாலு: அம்மா... என் செஸ் போர்டு எங்கே ம்மா...?

அம்மா: நேத்து ராத்திரி முழுக்க நீ தனியாதானே விளையாடிட்டு இருந்த? நல்லா தேடிப் பாரு...
பாலு: ஆங்... என் அறையில படுக்கைக்குக் கீழே இருந்ததும்மா. எடுத்துக் கொண்டேன்.
அக்கா: சீக்கிரம் வந்து உட்காரு டா... செஸ் மாஸ்டர் வாட்ஸ்அப் கால்ல வந்துட்டாரு. நீ வர்றதுக்குள்ள என் தோழிக்கு கான்பிரென்ஸ் கால் போட்டுடறேன்.
பாலு: இதோ வந்துட்டேன் கா... (செஸ் போர்டுடன் வந்து அக்கா பக்கத்தில் உட்காருகிறான்.
செஸ் மாஸ்டர்: இன்னைக்கு நாம ராணியை வச்சி என்னென்ன டெக்னிக் இருக்குன்னு தெரிஞ்சிக்கப் போறோம்.
(செஸ் கிளாஸ் முடிந்து வந்ததும்)

அப்பா: இன்னைக்கு ஆளுக்கொரு நாவலை எடுத்து பத்து பக்கமாவது படிக்கணும். ரெண்டு பேரும் முகத்தை அலம்பிட்டு படிக்கற அறைக்குப் போங்க...
(அக்காவும் தம்பியும் உற்சாகத்துடன் ஓடுகிறார்கள்)

காட்சி 4
இடம் மாலினியின் வீடு
மாந்தர் மாலினி, மாலினியின் பாட்டி, மாலினியின்தம்பி விசு, இசை ஆசிரியை.
(உரத்த குரலில் மாலு பாடிக் கொண்டிருக்கிறாள்)

பாட்டி: மாலு, இன்னைக்கு என்ன ஸ்வரம் பாடிட்டு இருக்கே?
மாலினி: நேத்து பாடின அதே ஸ்வரம்தான் பாட்டி. இன்னைக்கும் அதையே பழக சொல்லியிருக்கார். இதோ, பாட்டு மிஸ் போன் பண்றாங்க...
பாட்டி: சொல்லுங்க மிஸ்... இவ நல்லா பாடறாளா?
இசை ஆசிரியை: நல்லா பாடறாம்மா. அவ குரலும் நல்லா இருக்கு. ஆர்வமா கேட்டு புது விஷயமா கத்துக்கறா.
பாட்டி: அவளுக்கு விளையாட்டுத் தனம்தான் அதிகமா இருக்கு.
இசை ஆசிரியை: அது இல்லாத குழந்தை இருக்க முடியுமா? பாருங்களேன், மாலு ஒருநாள் பெரிய பாடகியா வருவா...
பாட்டி: ரொம்ப சந்தோஷம் மிஸ் (செல்லிடப்பேசியை வைக்கிறாள்)
மாலுவின் தம்பி விசு: மாலு அக்கா, வா... மொட்டை மாடியில விளையாடலாம்.
மாலு: இருடா, என் பிரெண்ட்úஸாட சேர்ந்து ஸ்லோகம் பாராயணம் பண்ணனும், அரை மணி நேரம் கழித்து மாடிக்குப் போகலாம்.

காட்சி 5
இடம் வீடு
மாந்தர் பாலு, மாலினி, ஆசிரியை, கோபி,
(மீண்டும் ஆன்லைன் வகுப்பு)

ஆசிரியை: என்ன பசங்களா, விடுமுறை எப்படிப் போச்சு?...
பாலு: நல்லா போச்சு மிஸ். நிறைய கத்துக் கிட்டோம்.
மாலினி: வீட்டுலயே இருந்து போர் அடிக்குமேன்னு நினைச்சேன். நேரம் போனதே தெரியல...
ஆசிரியை: கோபி, அங்கே என்ன அவசர அவசரமா எழுதிட்டு இருக்கே? இன்னும் வகுப்பே ஆரம்பிக்கலையே?
கோபி: ஒண்ணுமில்லை மிஸ். இதைதான் வரைந்துட்டு இருந்தேன்.
(தன்னிடம் இருந்த பேப்பரை காண்பிக்கிறான். அதில் ஆசிரியையின் முகம் தத்ரூபமாக வரையப்பட்டிருந்திருந்தது)

ஆசிரியை: என்னையே வரைஞ்சுட்டியா, வாலு. போட்டேன்னா? (செல்லமாகக் கை ஓங்குகிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com