அரங்கம்: தோட்டம்!
(அப்பா சுந்தரத்திடம்) - என்னங்க கீரை, வெண்டை, கத்தரி விதை எல்லாம் வாங்கி வாங்க பத்து பத்து ரூபாய்க்கு


காட்சி 1,
இடம் - வீடு,
மாந்தர் - அப்பா சுந்தரம், அம்மா மாலதி,
குழந்தைகள் ராம், ப்ரியா
அம்மா மாலதி - (அப்பா சுந்தரத்திடம்) -என்னங்க கீரை, வெண்டை, கத்தரி விதை எல்லாம் வாங்கி வாங்க பத்து பத்து ரூபாய்க்கு
சுந்தரம் - இங்கே எங்கே இடம் இருக்கு..மாடியில் நாலைந்து தொட்டிகளில் பூச்செடிகள் வச்சிருக்கே.. அதுக்கே தண்ணீர் சமயத்தில் நான் ஊத்தறேன்.
மாலதி - இணையத்தில் யூ ட்யூபில் ஒரு வேளாண்மை பட்டதாரி பெண் சிக்கனமா மண் இல்லாமல் மாடித் தோட்டம் தண்ணீர் பாட்டில்கள் பால் கவர்களில் எப்படி வளர்க்கிறதுன்னு செஞ்சு காட்டினாங்க.. அது மாதிரி இந்த கோடையில் நாங்க எல்லோரும் செய்ய திட்டம் போட்டிருக்கோம் தேர்வுகள் முடிஞ்சதும்.
சுந்தரம் - சரி நல்ல திட்டம் தான்.. ஆனால் ஒரு நிபந்தனை என்னை தொந்தரவு பண்ணக்கூடாது..எனக்கு ஆபீஸ் வேலை அதிகம்.
மாலதி - நீங்க விதை உரம், எறும்பு மருந்து வேப்பெண்ணெய், வேப்பம் பிண்ணாக்கு, எள்ளு பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு மட்டும் வாங்கித் தாங்க போதும்.
சுந்தரம் - என்ன லிஸ்ட் நீண்டுகிட்டே போவுதே. சரி ஒரு தடவையா கேட்டு வாங்கிக்கோ. விதை பூச்சிமருந்துகள் விற்கும் கடை ரொம்ப தூரத்தில் இருக்கு
காட்சி - 2
இடம் - மாடி
மாந்தர் - மாலதி, ராம், ப்ரியா
(மாலதி குழந்தைகள் ராம், பிரியா இருவரையும் பால் கவர்கள் தண்ணீர் காலி பாட்டில்களில் மண் மரத் தூள் இலை மக்கிய தூள் இவற்றை நிரப்பச் சொல்கிறாள்)
ராம் - அம்மா இந்த பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை எப்படி இரண்டா வெட்டினீங்க
மாலதி - கத்தியால் அங்கங்கே கோடு போட்டு விட்டு ஒடித்தால் இரண்டாக வந்திடும்.
ப்ரியா - அம்மா தண்ணீர் தெளிச்சிட்டேன் மண்ணில்...
மாலதி - இந்தக் கீரை விதைகளை நான் தெளிக்கறேன். முளைக்கும் வரை சுற்றிலும் எறும்பு மருந்து தூவறேன்.
ராம் - அம்மா மாடியில் இது மாதிரி தோட்டம் அமைத்தால் ஒழுகும் தண்ணீர் கட்டடத்தின் மேற்கூரை பழுதாகி விடும்ன்னு என நண்பனின் அப்பா ஒரு கட்டட பொறியாளர் சொன்னதாக ஞாபகம்
மாலதி - அதுக்கு தான் தண்ணீரை நாம் சொட்டு முறையில் விடப் போறோம். தண்ணீர் மாடியில் இறங்கறதுக்கு வழியே இல்லை. இரு செங்கற்களுக்கு மேல் தொட்டிகளை வைப்பதால் அப்படியே சொட்டினாலும் செங்கல் உறிஞ்சி விடும் இடைவெளி இருப்பதால் சீக்கிரம் ஆவியாகிவிடும். மாடி தளம் உலர்ந்தே இருக்கும். பயமில்லை நமக்கு.
காட்சி 3
இடம் - வீட்டின் மொட்டை மாடி
மாந்தர் - அம்மா மாலதி, ராம், ப்ரியா,
அப்பா சுந்தரம், பக்கத்து வீட்டு அலமேலு
சுந்தரம் - என்ன அழகாக இந்த கீரை முளைச்சிருக்கு.
மாலதி - இன்னிக்கு கீரை கூட்டு சப்பாத்தி செய்யப் போறேன்.
ராம் - ரொம்ப சுவையா இருக்குமே.
ப்ரியா - அம்மா பக்கத்து வீட்டுக்கு நீங்க தந்த ஒரு கட்டு கீரை நாலு கத்தரி பிஞ்சுகள், வெண்டைக்காய் தந்ததும் அந்த ஆண்ட்டி ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. சமைக்க காய் கிடைக்கலியேன்னு கவலையா இருந்தாங்களாம்.
மாலதி - கிராமத்து மக்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க வீட்டுத் தோட்டம் தான் முக்கியக் காரணம். கொல்லை கொஞ்சம் இடம் இருந்தால் போதும்.. அவரை, புடலை, பீர்க்கு, மிளகாய் கத்தரி வெண்டை எல்லாம் பயிராக்கிடுவாங்க. வாசலில் ஒரு முருங்கை மரம் காய்த்திருக்கும். கீரை, காய் கிடைச்சிடும். பின்புறம் வாழை போட்டிருப்பாங்க. வாழைக்காய், வாழைப் பூ எல்லாம் பயன் படும். தவிர கொஞ்சம் இடம் கூடுதலாக இருந்தால் மா பலா பயிரிடுவாங்க. பருவத்தில் மாங்காய்கள் காய்த்துத் தள்ளிவிடும். பலா பிஞ்சுகளைப் பறித்து குருமா செய்தால் அத்தனை சுவையாக இருக்கும்.
சுந்தரம் - நம் மாடித் தோட்ட த்தில் குழந்தைகளின் கவனமான பராமரிப்பால் எல்லாமே நல்லா முளைச்சிருக்கு. எல்லா வகை காய்கறிகளும் இப்போ நமக்குக் கிடைக்கும். என் நண்பரிடம் இதை வீடியோ எடுத்து வாட்ஸப் மூலம் அனுப்பினேன். அவர் யூ ட்யூப் சேனலில் போட்டிருக்கார். ஒரு தொலைக் காட்சியிலும் அதை ஒளி பரப்பி இருக்காங்க. அதைப் பார்த்த பலரும் மாடித் தோட்டம் அமைக்க ஆர்வம் காட்டறாங்கன்னு சொன்னார். மாலதி நீ உன் கருத்துக்கள் ஆலோசனைகளை ஒரு வீடியோவாகப் பதிவு செய் பலருக்கும் உபயோகமாக இருக்கும்.
மாலதி - சரிங்க.. அடுத்து நாட்டு மருந்து மூலிகைகளை ஒரு பக்கம் பயிரிட திட்டம் இருக்கு
சுந்தரம் - அப்படியா என்னென்ன போடப் போறே?
மாலதி - கற்பூரவல்லி, சித்தரத்தை, கருஞ்சீரகம், ஓமவல்லி, துளசி வெற்றிலைக் கொடி ஏற்கெனவே இருக்கு. இஞ்சி, மஞ்சள், எல்லாம் வைக்கப் போறேன். இவை எல்லாம் கஷாயம் போட உதவும். சளி, இருமல் இவற்றுக்கு உபாதைகளைக் குறைக்கும். பனங்கல் கண்டு சேர்த்து அதிமதுர வேர் தட்டி போட்டு மிளகு சீரகத்துடன் இந்த இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்தால் மிகச் சிறந்த கிருமி போக்கும் மூலிகை கஷாயம் கிடைக்கும். உடல் வலிக்கும் அற்புத நிவாரணம் தரும். பக்க விளைவுகள் இல்லாத மருந்து. குழந்தைகள் விரும்பி குடிப்பாங்க. லேசான காய்ச்சல், செரிமானக் கோளாறு இருமலுக்கும் நல்ல பயனளிக்கும். எல்லாம் அந்தக் காலத்து பாட்டி வைத்தியம் தான்.. இப்போ மக்கள் மீண்டும் இந்த கஷாய மகிமையை உணர ஆரம்பிச்சிட்டாங்க.
(அப்போது பக்கத்து வீட்டுப் பெண்
அலமேலு வருகிறாள்)
மாலதி - வாங்க அலமேலு என்ன வேணும் ?
அலமேலு- பிரண்டை கொடி கொஞ்சம் வேணும்
மாலதி - அதோ அந்தத் தொட்டியில் படர்ந்திருக்கு பறிச்சுக்குங்க
(அலமேலு சென்றதும்)
சுந்தரம் - பிரண்டை எதுக்கு மருந்து
மாலதி - துவையால் அரைத்து சாப்பிட்டால் வயிறுக் கோளாறு, சளி போகும். அதன் சாறை அப்பள மாவுடன் சேர்த்துப் பிசைவார்கள். இப்போ அலமேலு வாங்கிப் போறாங்களே அவங்க கணவர் ஒரு ஆங்கில எம் டி படிச்ச மருத்துவர். ஆண்டிபயாடிக் மாத்திரைகளால் பக்க விளைவுகள் வரும்ன்னு அவர் எப்போதும் நம் நாட்டு மருந்துகளைத் தான் சாப்பிடுவார்.
சுந்தரம் - ஆச்சரியமா இருக்கே!
(சுந்தரம் தன் செல் போன் கேமிராவில் மருத்துவக் குறிப்புகளை மாலதி சொல்லச் சொல்ல அந்தந்த செடிகளின் இலைகளைக் காட்ட படமாக்குகிறார்.)
காட்சி 4
இடம் - வீடு
மாந்தர் - மாலதி, சுந்தரம், சில மனிதர்கள் நிறைய கூட்டம்
(மாலதியின் யூ ட்யூப் சேனல் நாட்டு வைத்திய கஷாயம் மற்றும் மூலிகை வைத்திய முறை பிரபலம் ஆகிறது)
ஒருவர் - மாலதி அம்மா, நாட்டு வைத்தியம் நல்ல பலன் அளிக்குது....கொஞ்சம் சித்தரத்தை இலை வாங்கிப் போக வந்தேன்.
மற்றவர் - கருஞ்சீரகம் வாங்கிப் போகலாம்ன்னு வந்தேன் நான்
(எல்லோருக்கும் அவரவர் தேவைக்கு தந்தபின்)
சுந்தரம் - என்ன மாலதி, வர வர நம்ம வீடு ஒரு நாட்டு மருந்து வைத்தியர் இல்லமா ஆகிக் கிட்டே போகுது?
மாலதி - நான் என்ன பண்றது. எல்லாமே நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் என்றாலும் நம் வீட்டுக்கு வந்து வாங்கிப் போறாங்க. ஏன்னு தெரியலே...
சுந்தரம் - எப்போதும் புதியதாக இலைகளைப் பறித்து செய்யும் கஷாயத்துக்கு வீரியம் அதிகமாம். நல்ல குணம் கிடைக்குதாம். கடையில் இருக்கும் பொட்டலங்கள் எப்போதோ காய வைத்து மடித்தது தானே ஆற்றுப் போய் இருக்கும்.
வர்றவங்க நமக்கு சிரமம் இருக்கக் கூடாதுன்னு மேஜையில் நூறு ரூபாய்க்குக் குறையாமல் பணம்
வச்சிடறாங்க.
மாலதி - நான் இலவசம்ன்னு சொன்னாலும் இலவச மருந்து பலிக்காதுன்னு பணம் வச்சிடறாங்க.. சுத்தமான தேன், பனங்கல்கண்டு கருப்பட்டி வாங்க உதவுது. காய்கறித் தோட்டமா இருந்த நம் மாடி இப்போ மூலிகைத் தோட்டமா மாறிட்டுது. காய்கறிகள் கடையில் எளிதில் கிடைக்குதாம். இந்த மருந்துச் செடிகள் தான் இப்போ தேவைன்னு மக்கள் தேடுவதால் அவற்றைப் பயிர் பண்றேன்.
சுந்தரம் - நல்ல வேளை நாம் நகரின் நடுவில் இருக்கோம். கிராமத்தில் இருந்தால் ஒரு பெரிய மூலிகைப் பண்ணையே வச்சிருப்பே.. ஆலமரம் வேப்பமரம் பனை மரம் எல்லாம் அங்கே பயிராகி இருக்கும். மாடியில் அவற்றை வளர்க்க முடியாது என்பதால் அவை இல்லை!
(மாலதியும் குழந்தைகளும் சிரிக்கிறார்கள்.)
திரை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...