பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: பறக்கும் ஆசை 

""முத்து... உன்னோட மாமா உனக்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கார். இப்பதான் கூரியர் ஆபீஸ்லேருந்து வந்து கொடுத்துட்டுப் போனாங்க... வாங்கி வைச்சிருக்கேன்... வந்து என்னன்னு பிரிச்சுப் பாரு...!''
பிஞ்சுக்கை  ஓவியத்திற்கு  ஒரு சின்னஞ்சிறு கதை!: பறக்கும் ஆசை 

""முத்து... உன்னோட மாமா உனக்கு ஒரு பார்சல் அனுப்பி இருக்கார். இப்பதான் கூரியர் ஆபீஸ்லேருந்து வந்து கொடுத்துட்டுப் போனாங்க... வாங்கி வைச்சிருக்கேன்... வந்து என்னன்னு பிரிச்சுப் பாரு...!''
என்று அம்மா சொன்னதும் தோட்டத்தில் பிரம்புக் கூடை பின்னிக் கொண்டிருந்த முத்து வேகமாக ஓடி வந்தான். கூடவே அவனுடைய அக்கா தேவியும் ஓடிவந்தாள். 
மலையடிவாரத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் முத்து ஆறாம் வகுப்பும் தேவி எட்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். 
அவர்களுடைய தந்தை சிவா சுகாதார நிலையத்தில் ஆய்வாளராக இருக்கிறார். மாமா தேசிங்கு விமானப்படையில் அதிகாரியாக இருக்கிறார். 
முத்துவுக்கு மாமாவைப் போலவே விமானப்படையில் சேர வேண்டும், பாராசூட்டில் பறக்க வேண்டும் என்று ஆசை. அதனால் அக்கா தேவியின் உதவியுடன் பறக்கும் பலூன்களை வித விதமாக உருவாக்கிப் பறக்க விட்டு மகிழ்வான். 
தேசிங்கு மாமா சென்ற முறை விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அப்பொழுது அவரிடம் முத்து தனது பள்ளிக்கூடத்தில் நடந்த அறிவியல் கண்காட்சி பற்றியும், அதில் தான் உருவாக்கிய பறக்கும் பலூனுக்கு முதல் பரிசு கிடைத்தது பற்றியும் பெருமையுடன் கூறினான். 
தேசிங்கு மாமா அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து முத்துவைப் பாராட்டினார். அச்சமயம் செய்தித்தாளில் வந்திருந்த ஒரு செய்தியை தேசிங்கு மாமா கூறினார்:  ""மாணவர்கள் உருவாக்கும் விமானம், ஹெலிகாப்டர், பாராசூட் வடிவங்களுக்காக மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி ஒன்று நடக்க இருக்கிறது. அதில் 35 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்க இருக்கிறார்கள். ஆறாம் வகுப்பு முதல் 9 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கு பெறலாம். இதில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் இருவரில் யார் வெற்றி பெற்றாலும் சிறந்த பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைப்பேன்'' என்று ஊக்கம் அளித்து விட்டுச் சென்றார்.  
அதன்படி மாவட்ட அளவில் நடந்த போட்டியில் ஒரு ஆளை சுமந்து செல்லும் வகையில் முத்து சிறப்பாக வடிவமைத்த பறக்கும் பலூன் முதல் இடத்தைப் பெற்றது. ஆனால், அது மாதிரி வடிவம் தானே தவிர அதில் ஆள் ஏறிச் செல்ல முடியாது. உண்மையில் தான் வடிவமைத்த மாதிரி ஒரு நிஜமான பலூன் கிடைத்தால் அதில் ஏறிப் பறந்து பார்க்கலாம் என்று தன் அம்மாவிடம் கூறினான். 
இந்தச் செய்தியை அம்மா பார்வதி தன் அண்ணனிடம் போன் மூலம் தெரிவித்தாள். இதையடுத்து முத்துவுக்கு ஒரு பரிசுப் பொருள் பார்சலில் வந்திருக்கிறது.
அதை ஆர்வத்துடன் பிரித்த முத்து ஆனந்தத்தில் மிதந்தான். அதில் பறப்பதற்குத் தேவையான உயர்ரக பலூனும், ஹைட்ரஜன் வாயு நிரப்பும் கருவியும், வாக்கி-டாக்கி, ரிமோட் மற்றும் அதற்கான செய்முறை விளக்கக் குறிப்புகளையும் தேசிங்கு மாமா அனுப்பியிருந்தார். 
அதன்படி பிரம்புக் கூடையில் மாமா அனுப்பிய பலூனைப் பொருத்தினான் முத்து. தேவி அவனுக்கு உதவிகளைச் செய்தாள். முதலில் முத்து. அடுத்ததாக தேவி பறக்க முத்து உதவி செய்வதாக ஒப்புக் கொண்டான். முத்து பறப்பதற்குத் தயாரானான். அப்போது அப்பா சிவா அங்கு வந்தார். 
""இந்த விலை உயர்ந்த பலூனை விளையாட்டுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டாம். மலைப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க மனிதர்களால் போக முடிவதில்லை. அதுபோன்ற பகுதிகளில் இந்த பறக்கும் பலூன் மூலம் சென்று கிருமி நாசினி தெளிக்கலாம்..!'' 
""இந்த பறக்கும் பலூன் மூலம் குழந்தைகளின் விருப்பமும் நிறைவேறியது... அப்பாவின் வேலையும் எளிமையாக முடிந்தது!'' என்று கூறி அம்மா பார்வதி புன்னகை புரிந்தாள்.

படம் வரைந்தவர் - டி.பூமிகா, 8 - ஆம் வகுப்பு, ஜே.சி.குமரப்பா சென்டினரி வித்யா மந்திர், மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி, பேராவூரணி - 614804.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com