அரங்கம்: வானம்பாடியும் மாயாவும்!

வானம்பாடி: நான் வானம்பாடி! சிறுவர்களின் நண்பன்!
அரங்கம்: வானம்பாடியும் மாயாவும்!

காட்சி 1
இடம்: மாயா வீட்டுக் கொல்லை    
நேரம்: காலை நேரம்

கதாபாத்திரங்கள்: பன்னிரெண்டு வயதுச் சிறுமி மாயா மற்றும் வானம்பாடி

(தனது வீட்டுக் கொல்லையில் மாயா வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறாள்; அந்த வழியாகப் பறந்து சென்ற வானம்பாடி பறவை ஒன்று 
அவளிடம் வருகிறது.)

வானம்பாடி: நான் வானம்பாடி! சிறுவர்களின் நண்பன்!
மாயா: ஹாய்! (மாயாவின் குரலில் உற்சாகமில்லை)
வானம்பாடி: நீ ஏன் சோகமா இருக்குற! உனக்கு என்னப் பிரச்னை? (மாயா பதில் சொல்லாமல் மவுனமாக இருக்கிறாள்.)
வானம்பாடி: என்னப் பிரச்னைனு சொன்னேனா என்னால ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்கலாம்! (மாயாவிற்கு வானம்பாடியின் மீது நம்பிக்கை பிறக்கிறது.)
மாயா: நான் என் பிரெண்ட்ûஸ ஜெயிக்கனும்! அதுக்கு நீ ஏதாவது உதவி செய்ய முடியுமா வானம்பாடியே?
வானம்பாடி: நீ எதுக்காக உன் பிரெண்ட்ûஸ ஜெயிக்கனும்?
மாயா: அவங்க எல்லாரும் ஏதாவது ஒரு விதத்துல திறமையா இருக்காங்க! ஒருத்தி நல்லாப் பாடுறா! ஒருத்தி நல்லா டான்ஸ் ஆடுறா! இன்னொருத்திக்கு நல்லா படிப்பு வருது! ஆனா எங்கிட்ட மட்டும் இந்த மாதிரி எந்தத் திறமையும் இல்ல! அவங்க எல்லாரும் இப்படித் திறமையா இருக்குறகுதுனால் என்னைய மதிக்குறதே இல்லை! எனக்கு அவமானமா இருக்கு! நான் திறமைசாலியா ஆகனும்! உன்னால எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா வானம்பாடி?
வானம்பாடி: உனக்கு என்னவா ஆகனும்னு ஆசை!
மாயா: நீ வானில் பறக்கும்போது உற்சாகமா இனிமையா பாடிக்கிட்டே பறந்து போவியாமே? உன்னை மாதிரி எனக்கும் இனிமையாப் பாடனும்னு ஆசை!
வானம்பாடி: நல்ல விஷயம்தான்! நீ சங்கீதம் கத்துக்கோ!
மாயா: அதுக்குலாம் நேரம் இல்ல! இப்பவே நான் உடனடியா திறமைசாலியா ஆகனும்! என் பிரெண்ட்ûஸ ஜெயிக்கனும்! அதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லு! (வானம்பாடி யோசிக்கிறது. அது தனது கழுத்தில் இருந்த ஒரு வளையத்தைக் கழட்டி அவளிடம் தருகிறது.)
வானம்பாடி: இந்த வளையத்தை நீ கையிலே மோதிரமாப் போட்டுக்கோ! உனக்கு உடனடியா சங்கீத ஞானம் கிடைக்கும்! நல்லாப் பாட வரும்! மகிழ்ச்சியா இரு! (வானம்பாடி போய் விடுகிறது. மாயா இடதுகை மோதிரவிரலில் தான் அணிந்துகொண்ட அந்த வளையத்தைப் பார்த்தபடி நிற்கிறாள்)


காட்சி: 2
இடம்: வகுப்பறை, நேரம்: பிற்பகல்
கதாபாத்திரங்கள்: மாயா தோழியர் 
மற்றும் இசை ஆசிரியர்
(உணவு இடைவேளை நேரம். மாயா ஒரு திரைப்பாடலைத் தன்னுள் முணுமுணுக்கிறாள்)

தோழியர்: ஏய், மாயா! ரொம்ப அழகாப் பாடுற! எங்க சத்தமாப் பாடு பார்ப்போம்! (மாயா பாடலைச் சத்தமாகப் பாடிக் காட்டுகிறாள்.)
தோழியர்: இத்தனை நாளா இந்தத் திறமைய எங்க ஒளிச்சு வைச்சிருந்த மாயா? (அனைவரும் கரவொலி எழுப்பி அவளைப் பாராட்டுகிறார்கள். அப்போது இசை ஆசிரியை அங்கு வருகிறார்.)
தோழியர்: மிஸ்! மாயா நல்லாப் பாடுறா மிஸ்!
ஆசிரியை: (ஆச்சரியத்துடன்) அப்படியா! எங்க பாடு பார்ப்போம்! (மாயா வேறு ஒரு திரைப்பாடலை பாடிக் காட்டுகிறாள்.)
ஆசிரியை: திரைப்பாடல் வேண்டாம்! நான் ஒரு ராகம் சொல்றேன்! நீ அதப் பாடிக்காட்டு! (ஆசிரியை ராகம் ஒன்றின் பெயர் சொல்கிறார். மாயா அந்த ராகத்தை அவர் எதிர்பார்த்ததை விட கூடுதல் சங்கதி
களுடன் மிக நுட்பமாகப் பாடுகிறாள்.)
ஆசிரியை:  என்னாலயே நம்ப முடியல மாயா! அற்புதமாப் பாடுற! உன்கிட்ட கலைமகள் தாண்டவமாடுறா! எப்படி குறுகிய காலத்துல இப்படி ஒரு திறமைய வளர்த்துக்கிட்ட? யார்கிட்ட சங்கீதம் கத்துக்குற? (ஆசிரியை மாயாவை அரவணைத்து உச்சி மோர்கிறார்.)
மாயா: என் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு மியூசிக் டீச்சர்கிட்ட கத்துக்கிட்டேன்! (மாயா பொய் சொல்கிறாள்.)

காட்சி: 3
இடம்: மாயாவின் வீடு    நேரம்: மாலை நேரம்
கதாபாத்திரங்க்ள்: மாயா, அவளின் அம்மா மற்றும் இசை ஆசிரியர்


ஆசிரியை: இவ போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்க ஆரம்பிச்சுட்டா! இவளோட திறமை பளிச்சுனு இருக்கு! இதை வளர்த்துக்குறதுக்கு நீங்க இவளை நகரத்துக்குக் கூட்டிட்டுப் போகணும்! அங்கதான் இவளுக்கு பெரிய மேடைகள்ல பாட வாய்ப்புக் கிடைக்கும்! நட்சத்திரமா ஜொலிக்கலாம்!
மாயாவின் அம்மா: ஒரு பக்கம் ஆச்சரியமா இருக்கு எப்படி இவளுக்கு திடீர்னு இப்படி ஒரு குரல்வளம் வந்ததுன்னு! இன்னொரு பக்கம் இவ இப்படி திறமையா இருக்குறத நினைச்சுப் பெருமையா இருக்கு! (ஆசிரியை சிறிது நேரம் அளவளாவி விட்டுக் கிளம்பிச் சென்றார்.)
மாயா: (மனதிற்குள்) நல்லவேளை! நீ எந்த மியூசிக் டீச்சர்கிட்ட படிச்சன்னு அம்மா முன்னாடி மிஸ் கேட்கல! கேட்டுருந்தா குட்டு உடைஞ்சு போயிருக்கும்! (மாயா பெருமூச்சு விடுகிறாள்.)

காட்சி: 4
இடம்: ஆற்றங்கரை நேரம்: காலைப் பொழுது
கதாபாத்திரங்கள்: மாயா மற்றும் மாயாவின் அம்மா
(ஆற்றில் குளித்து விட்டு தலை துவட்டும் போதுதான் மாயா தன்கையில் வளையம் இல்லாததைக் கவனிக்கிறாள்)


மாயா: (பதறியபடி அம்மாவிடம்) அம்மா!... என்னோட மோதிரம் தண்ணிக்குள்ள விழுந்துருச்சு! 
(ஓடி வருகிறாள்)
அம்மா: இரு பதறாத! நான் தேடுறேன்! (அவர்கள் குளித்த இடத்தில் அவர் மோதிரத்தைத் தேடிப் பார்க்கிறார். தென்படவில்லை)
அம்மா: நிக்குற தண்ணீனா பரவாயில்லை! ஓடுற தண்ணீல எப்படி கிடைக்கும்! அது ஆத்தோட போயிருக்கும்! (மாயா தேம்பி அழ ஆரம்பிக்கிறாள்.)
அம்மா: அந்த   வளையம்   உனக்கு யார் கொடுத்தா எப்படிக் கிடைச்சதுன்னு தெரியலை! ஒரு சாதாரண வளையத்துக்குப் போயி எதுக்கு இப்படித் தேம்பி அழற!
மாயா: (உடைந்த குரலில்) அந்த வளையத்தை எனக்கு ஒரு வானம்பாடி பறவை கொடுத்துச்சு! அது மந்திர வளையம்! அது இல்லைனா என் திறமையும் இல்லை! என்னால பாட முடியாது! (உண்மையைச் சொல்கிறாள்)
அம்மா: (அதிர்ச்சியாகி பின் சுதாரித்தபடி) விட்டுத் தள்ளு! திறமைங்குறது ஒன்னும் கடைல வாங்குற பண்டம் கிடையாது! இடையில வந்தது இடையிலயே போயிருச்சு! இப்படி பொய்யான ஒரு திறமை உனக்குத் தேவையில்லை!
மாயா: (சமாதானம் ஆகாமல்) என்னால திரும்பவும் நல்லாப் பாட முடியாமப் போயிருச்சுன்னா என் பிரெண்ட்ஸ்லாம் என்னை கேலி பண்ண மாட்டாங்களா? அவங்களை நான் எப்படி சமாளிப்பேன்! (மாயாவிற்கு தன்னால் இனி பாட முடியாது என்பதை எண்ணி எண்ணி சுரம் வந்துவிட்டது.)

காட்சி: 5
இடம்: மாயாவின் வீடு    நேரம்: மாலை நேரம்
கதாபாத்திரங்கள்: மாயா மற்றும் இசை ஆசிரியை
(உடல் நலமில்லாமல் இருக்கும் மாயாவைப் பார்க்க ஆசிரியர் வருகிறார்.)

ஆசிரியை: என்ன மாயா! எப்படி இருக்க? நீ ஸ்கூலுக்கு வந்து இரண்டு வாரம் ஆச்சு! (அவளின் தலையை பரிவுடன் வருடியபடி கேட்கிறார்.)
மாயா: நல்லா இருக்கேன் மிஸ்! இப்பக் காய்ச்சல் குறைஞ்சிருக்கு!
ஆசிரியை: அம்மா எல்லாம் சொன்னாங்க! நீ உன் பிரெண்ட்ஸப் பத்திலாம் தேவை இல்லாமக் கவலைப்பட வேண்டாம்! உடம்பு சரியில்லாம இருந்ததுனால குரல்வளம் கெட்டுப் போச்சுனு சொல்லிக்கலாம்! (மாயா பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்கிறாள்.)
ஆசிரியை: (தொடர்ந்து) பிறக்கும்போது யாரும் திறமையாப் பிறக்குறதுல்ல! அது ஆர்வம் பயிற்சி முயற்சில வர்றது! நீ இதை அனுபவமா  தெரிஞ்சுக்கனும்தான் வானம்பாடி உனக்குப் பாடம் நடத்திருக்கு!
மாயா: ஆமா மிஸ்! நான் குறுக்கு வழியில் பேர் வாங்கனும்னு நினைச்சது ரொம்பத் தப்புன்னு இப்பப் புரிஞ்சிக்கிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க மிஸ்!
ஆசிரியை: உடம்பு தேறுன பின்னாடி நீ என்கிட்ட வா! நான் உனக்குப் பாட்டுச் சொல்லித் தர்றேன்! (தான் கொண்டு வந்த பழங்களைத் தந்து விட்டு ஆசிரியை விடை பெறுகிறார்.)

காட்சி: 6
இடம்: மாயா வீட்டுக் கொல்லை  
நேரம்: அந்திப் பொழுது
கதாபாத்திரங்கள்: மாயா மற்றும் வானம்பாடி
....ஆறு மாதங்களுக்குப் பின்னால்.....
(மாயா தன்வீட்டுக் 
கொல்லையில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்கிறாள். மிகவும் மகிழ்ச்சியாக 
இருக்கிறாள். வானம்பாடி அங்கே வருகிறது.)

வானம்பாடி: எப்படி இருக்க மாயா?
மாயா: நல்லா இருக்கேன் வானம்பாடி! உனக்குத் கெரியுமா நான் இப்ப நல்லாப் பாடுவேன்! பாட்டுக் கத்துக்கிட்டேன்! (பாடிக் காட்டுகிறாள்)
வானம்பாடி: ஒரு விஷயத்தைக் கத்துக்குறதுதான் திறமைசாலியா ஆகுறதுக்கான முதல்படி! இந்தத்திறமை இப்ப உன்னை விட்டு எங்கயும் போயிராது! இதை யாரும் உங்கிட்ட இருந்து பறிச்சிரவும் முடியாது! இப்பப் புரியுதா எது உண்மையான திறமைன்னு!
மாயா: நல்லாப் புரிஞ்சது வானம்பாடி! ஒரு நிமிஷம்... அது என்ன உன் கழுத்துல? நான் தொலைச்ச வளையம் எப்படி திரும்ப உன்கிட்ட வந்துச்சு?
வானம்பாடி: (அதற்குப் பதில் சொல்லாமல் கண்களைச் சிமிட்டியபடி)  நீ திறமைசாலியா மாறிட்ட! இனிமே என்னோட உதவி உனக்குத் தேவைப்படாது! நான் உன்னைப் பார்க்க வரமாட்;டேன்! குட் பை மாயா! (வானம்பாடி பறந்து செல்கிறது. மாயா அது பறந்து சென்ற திசையைப் பார்த்தபடி  நிற்கிறாள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com