கரடி

ஐயா.. எங்க காடு அழிஞ்சிட்டு வருது.. உணவுதேடி ரொம்ப அலையவேண்டியிருக்கு.. அதான், மனிதர்கள்கிட்ட வேலை பார்த்து ஏதாவது வாங்கிட்டுப் போலாம்னு..
கரடி
Updated on
3 min read

அரங்கம்!
 
 காட்சி : 1
 இடம் : வயல் / வடக்குப் பகுதி
 நேரம் : மாலை
 மாந்தர் : வயிரவன், கரடி.
 (வயிரவன் பாத்தி வெட்டிக்கொண்டிருக்கிறார்.)
 
 (குரல்) : ஐயா..!
 (வயிரவன் திரும்பிப் பார்க்கிறார்.)
 
 கரடி : ஐயா.. எனக்கு ஏதவாது வேலை கொடுங்கய்யா.. நல்ல
 விதமா செய்வேன்..
 வயிரவன் : யார் நீ..? எங்கிட்ட ஏன் வந்து வேலை கேட்கிறே..?
 கரடி : ஐயா.. எங்க காடு அழிஞ்சிட்டு வருது.. உணவுதேடி ரொம்ப அலையவேண்டியிருக்கு.. அதான், மனிதர்கள்கிட்ட வேலை பார்த்து ஏதாவது வாங்கிட்டுப் போலாம்னு..
 (வயிரவன் புரியாமல் பார்க்கிறார்.)
 
 கரடி : உங்க சந்தேகம் புரியுது, ஐயா.. நான் பல இடங்கள்ல வேலை செஞ்சிருக்கேன்.. என்னால் உங்களுக்கு உதவ முடியும்..
 வயிரவன் : இதுக்கு முன்னாடி எங்க இருந்தே..?
 கரடி : முத்துமாணிக்கம்னு ஒருத்தர்கிட்ட இருந்தேன்.. அவர் பக்கத்து நாட்டுக்குப் போயிட்டார்.. அதுக்கப்புறம் எங்கெங்கேயோ முயற்சி பண்ணியும்..
 வயிரவன் : சரி.. நாளைக்கு காலையில வா.. ஏதாவது வேலை தர்றேன்..
 (கரடியின் முகம் மலர்கிறது.)
 
 
 காட்சி : 2
 இடம் : வெவ்வேறு இடங்கள்
 நேரம் : வெவ்வேறு நேரங்கள்
 மாந்தர் : வயிரவன், கரடி.
 முதல் மாதம் : கரடி நிலத்தில் உழவு செய்கிறது.
 இரண்டாம் மாதம் : கரடி கிணற்றிலிருந்து நீர் இறைக்கிறது.
 மூன்றாம் மாதம் : வயிரவன் பயிர்களின் இடையே கனையெடுக்கும் கரடியைப் பார்க்கிறார்.
 
 காட்சி : 3
 இடம் : வீடு
 நேரம் : இரவு
 மாந்தர் : வயிரவன், அமுதா.
 (வயிரவன் உணவு சாப்பிடுகிறார்.)
 
 அமுதா : ( கையில் பாத்திரத்துடன்) இன்னொன்னு வெக்கட்டுமா..? ஒண்ணே ஒண்ணு..
 வயிரவன் : இல்ல.. இல்ல.. போதும்.. கரடிக்கு ஏதாவது கொடுத்து விட்டயா.. ?
 அமுதா : வழக்கம்போல் பழங்கள்தான் .. கொடுத்துட்டேன்..
 வயிரவன் : ( கை கழுவியபடி) அந்தக் கரடியைப் பத்தி என்ன நினைக்கிறே.. ?
 அமுதா : நல்லா வேலை செய்யுது.. நாம எதுவும் சொல்லத் தேவையே இல்ல.. ரொம்ப பொறுப்பா இருக்கு..
 வயிரவன் : எனக்கும் அதேதான் தோணுது.. நாம தர்ற கொஞ்சம் உணவுக்காக.. பாவம், எத்தனை வேலை செய்து..!
 அமுதா : ஆமாங்க.. நாம நல்ல நிலைமைக்குப் போறப்போ அந்தக் கரடிக்குனு எதாவது பண்ணணும்..
 (வயிரவன் அமைதியாக இருக்கிறார்.)

காட்சி : 4
 இடம் : வயல் / தெற்குப் பகுதி
 நேரம் : காலை
 மாந்தர் : வயிரவன், கரடி.
 
 (வயிரவன் சோகமாக அமர்ந்திருக்கிறார்.)
 
 கரடி : ஐயா.. எல்லாத்தையும் மூட்டையா கட்டிட்டேன்.. மொத்தம் அறுபது சேர்ந்திருக்கு..
 வயிரவன் : ( கவனிக்காமல் ) என்ன.. ஓ.. முடிச்சுட்டியா.. சரி.. நீ கிளம்பு..
 (கரடி அமைதியாக நிற்கிறது.)
 
 வயிரவன் : ம்ம்ம்ம்..?
 கரடி : ஐயா.. இன்னிக்கு உங்களுக்கு என்ன ஆச்சு..? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?
 வயிரவன் : ( பெருமூச்சு விட்டு ) இந்த வியாபாரம் நமக்குப் போதாது, கரடி.. இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தணும்..
 கரடி : உங்ககிட்ட என்ன யோசனை இருக்கோ அத சொல்லுங்க.. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்..
 வயிரவன் : யோசனைய பத்தி இல்ல.. நிலம் வேணும்.. கூடுதலா பயிர்செய்ய இடம் வேணும்..
 கரடி : நமக்குப் பக்கத்துலயே இவ்ளொ விளைநிலம் இருக்கே.. அதேயே வாங்கிக்கலாமே..
 வயிரவன் : ( சோகமாக) பணம்..?
 (கரடி இமைக்காமல் பார்க்கிறது.)
 
 காட்சி : 5
 இடம் : வயல் / மரத்தடி
 நேரம் : மதியம்
 மாந்தர் : அமுதா , வயிரவன், கரடி.
 
 (அமுதா ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறாள்.)
 
 வயிரவன் : வடகரை கணக்கு மட்டும் எவ்வளவு ஆகுது..?
 அமுதா : இருபதாயிரத்து முந்நூறு.. கொஞ்சம் பரவால்ல..ஆனா, சரியான நேரத்துக்குப் பணம் வந்துருமா..?
 (கரடியின் குரல் உரக்கக் கேட்கிறது.)
 
 கரடி : (குரல்) ஐயா.. ஐயா.. ஐயா..
 வயிரவன் : ( பதறி எழுந்து ) என்ன.. என்ன கரடி.. என்ன விஷயம்..?
 கரடி : (மூச்சிரைக்க) ஐயா.. அம்மா.. நான்.. நான் மண்ணை உழுறப்போ.. இதோ.. இது கெடச்சுது..
 (கரடி ஒரு கல்லை நீட்டுகிறது.)
 வயிரவன் : (ஆச்சர்யமாக) என்ன கல் இது..?
 அமுதா : (கையில் வாங்கி ) ஏதோ கல்.. இது.. ஏதாவது மதிப்புமிக்க கல்லா இருக்கலாம்..
 வயிரவன் : ( மகிழ்ச்சியாக) அப்படியா..? அப்ப நாம இப்ப யாராவது ரத்தின வியாபாரியைச் சந்திக்கணும்..
 (கரடி அமைதியாகப் பார்க்கிறது.)
 
 காட்சி : 6
 இடம் : துறைமுகம் / மேற்குப் பகுதி
 நேரம் : முற்பகல்
 மாந்தர் : ரத்தின வியாபாரி , வயிரவன்.
 (ரத்தின வியாபாரி கல்லைச் சோதனைசெய்து பார்க்கிறார்.)
 வயிரவன் : கொஞ்சம் பார்த்துக் குடுங்க, ஐயா..
 ரத்தின வியாபாரி : நல்ல கல்லுதான்.. இது உங்களுக்கு எப்படிக் கெடச்சுது..?
 வயிரவன் : ( அமைதியாக இருந்துவிட்டு) நிலத்தை உழவு பண்ணும்போது கிடைச்சது..
 (ரத்தின வியாபாரி சிறிது நேரம் வயிரவனைப் பார்க்கிறார்.)
 
 வயிரவன் : ஐயா..?
 ரத்தின வியாபாரி : பொய்.. அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்ல.. உண்மையைச் சொல்லுங்க..
 வயிரவன் : ( அதிர்ந்து ) ஐயா.. நான் சொல்றது உண்மைதான்..
 ரத்தின வியாபாரி : உண்மை என்னன்னா.. இந்த அரிய ரத்தினக் கல்லை எங்கிட்ட வேலைசெஞ்ச ஒரு கரடிக்குத்தான் கொடுத்தேன்.. அதை நீங்க எப்படியோ ஏமாத்தியிருக்கீங்க..
 வயிரவன் : ( சிந்தனைக்குப் பிறகு) நீங்க.. உங்க பேர்.. முத்துமாணிக்கமா..?
 ரத்தின வியாபாரி : ( வியப்பாக) ஆமா.. உங்களுக்கு எப்படித் தெரியும்..?
 (வயிரவனின் கண்கள் அகல விரிகின்றன.)
 
 காட்சி : 7
 இடம் : வயல் / கிழக்குப் பகுதி
 நேரம் : மாலை
 மாந்தர் : அமுதா, வயிரவன், கரடி.
 
 (அமுதாவின் கைநிறைய பணம் இருக்கிறது.)
 
 அமுதா : நாம நெனைச்ச மாதிரியே விளைச்சலுக்கான நிலத்தை வாங்கிடலாம்.. அதிகமாவே பணம் இருக்கு..
 வயிரவன் : ( திரும்பி ) என்ன கரடி.. அதிர்ஷ்டம் தான்னில்ல..?
 கரடி : (தடுமாறி) ஆமா, ஐயா..
 வயிரவன் : நன்றிக்காக உனக்கு ஒன்னு கொண்டுவந்திருக்கேன்.. (கொடுத்து) இந்தா..
 கரடி : ( அதிர்ந்து) எப்படி..?
 (கரடியின் கையில் ரத்தினக் கல் இருக்கிறது.)
 
 வயிரவன் : முத்துமாணிக்கம்தான் கொடுத்தார்.. உன்னோட பழைய முதலாளி . .
 (கரடி அமைதியாக இருக்கிறது.)
 
 அமுதா : (புரியாமல்) இங்க என்ன நடக்குது..?
 (வயிரவன் விரிவாகச் சொல்கிறார்.)
 
 வயிரவன் : துறைமுகத்துக்குப் போறப்போ கரடியோட நேர்மையப் பாராட்டி அவர் கொடுத்துட்டுப் போனதுதான் இந்தக் கல்.. விலை மதிப்பானது..கரடி நமக்கு உதவி பண்றதுக்காக ..
 அமுதா : (இடைமறித்து) புரியுதுங்க.. எதையும் எதிர்பார்க்காம கொண்டுவந்து கொடுத்திருக்கு.. ரொம்பப் பெரிய மனசு..
 கரடி : ( சட்டென்று) ஐயா.. கல்லைத் திருப்பிக் கொடுத்துட்டீங்க.. அப்றம் பணம் மட்டும்.. எப்படி வந்துச்சு..?
 வயிரவன் : ம்ம்ம்.. எல்லாம் அந்த வியாபாரி கொடுத்ததுதான்..
 அமுதா : ( அதிர்ந்து) ஐயோ.. கடனா..?
 கரடி : திருப்பிக் கட்டுறது கஷ்டமாச்சே..
 வயிரவன் : (சிரிப்புடன்) கடன் இல்ல.. முதலீடு.. விளைச்சல்ல வர்ற லாபத்துல அவருக்கும் ஒரு பங்கு.. மூணுல ஒரு பகுதி..
 அமுதா : மூணுலயா.. ? அப்போ மீதி..?
 வயிரவன் : நமக்கு ஒரு பகுதி.. கரடிக்கு ஒரு பகுதி..
 கரடி : ( வியப்பாக) ஐயா, எனக்கா..?
 வயிரவன் : ஆமா, கரடி.. உன்னோட நல்ல மனசுக்காகத்தான் அவர் இந்த உதவியைச் செய்யறதா சொன்னார்..
 அமுதா : உன் நேர்மையைப் பாராட்ட என்ன வேணாலும் பண்ணலாம், கரடி..
 (கரடி அமைதியாகப் புன்னகை செய்கிறது.)
 
 (திரை)
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com