வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: சிக்கிம் மாநிலம்!

கஞ்சன்ஜங்கா மலைத்தொடரில், உலகில் உயரமான இடத்தில், அமைந்துள்ள புனிதமான ஏரி இது. கடல் மட்டத்திற்கு 17, 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2020, 1:22 pm

சென்ற இதழ் தொடர்ச்சி....


குருடோங்மர் ஏரி!

கஞ்சன்ஜங்கா மலைத்தொடரில், உலகில் உயரமான இடத்தில், அமைந்துள்ள புனிதமான ஏரி இது. கடல் மட்டத்திற்கு 17, 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த ஏரி உறைந்து இருக்கும். மிகவும் உயரமான இடத்தில் இருப்பதால் இங்கு ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். மே, ஜூன் மாதங்கள் இங்கு செல்ல ஏற்ற காலமாகும்.

யும்தாங் பள்ளத்தாக்கு - மலர்கள் சரணாலயம்!

இந்த மலர்கள் பள்ளத்தாக்கு வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ளது. காங்டாங் நகரத்திலிருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 3564 மீ. உயரத்தில் இச்சரணாலயம் உள்ளது. ஆறுகள், வெப்ப நீரூற்றுகள், காட்டெருமைகள், புற்கள் நிறைந்த பசும்புல் மேய்ச்சல் நிலங்கள் என இயற்கை அழகு மிகுந்துள்ளது. 

"ரோடோடென்ட்ரான்' என்று ஒரு மரம் உள்ளது. இம்மரங்கள் 24 வகைகளில் இங்குள்ளன. இம்மரங்களில் பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை அடர்த்தியாக பூக்கள் மலரும். இம்மலர்கள் இப்பள்ளத்தாக்கை அலங்கரிக்கும். யும்தாங் ஆற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்று இப்பள்ளத்தாக்கிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. சில்வர் ஃபிர், பைன் போன்ற மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியும் இங்குள்ளது. மேலும் நீர்வீழ்ச்சிகளும், நீரோடைகளும் நிறைந்த இடம் இது!

நாதுலா கணவாய்!

இமயமலையில் அமைந்துள்ள "நாதுலா' கணவாய் இந்தியாவை திபெத்துடன் இணைக்கிறது. யாக் என்னும் எருது சவாரி, இந்தியா மற்றும் சீனாவின் எல்லை வாயில்கள், அழகாகக் கட்டப்பட்ட போர் நினைவுச் சின்னம், மவுண்ட் ஜோமால் பாரி எனப் பல இடங்கள் கண்களைக் கவரும்.

யுக்சோம் நகரம்!

"யுக்சோம்' ஒரு பழமையான வரலாற்று நகரமாகும். இங்கு "நோர்பு காங் பூங்கா' அரண்மனை, பழமையான துப்டி சோம்பா மடம், காங்சென்ட்லோங்கா தேசியப்பூங்கா, கோச்சலா மலையேற்றப் பாதை எனப் பல இடங்கள் இங்குள்ளன.

மூன்று முக்கிய இடங்கள்!

லாச்சுங், லாச்சென் மற்றும் "தங்கு' பள்ளத்தாக்கு!

லாச்சுங் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள திபெத்திய மற்றும் பூட்டியா மக்களின் கிராமமாகும். லாச்சென் என்பது வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமம். திபெத்திய பழங்குடியினரின் குளிர்கால வசிப்பிடம் ஆகும். "தங்கு' என்பது பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகான மலையேற்றப் பள்ளத்தாக்கு. இம்மூன்று இடங்களும் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள். லாச்சுங் கோம்பா பெளத்த ஆலயம், லாச்சுங் மடாலயம் ஆகியவை பார்க்கத்தகுந்த இடங்கள்! இவ்விடங்கள் ஆண்டுதோறும் பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும்.

த்சோ லாமா ஏரி!

குரு டோங்மர் ஏரியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இந்த ஏரி உள்ளது. 5350 மீ. இந்தியாவில் மிக உயரத்தில் உள்ள ஏரி இது! பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட இந்த ஏரி அனைவரையும் வசீகரிக்கும்! திபெத்திலிருந்து 2 கி.மீ. தூரத்திலிருப்பதால் உரிய அனுமதி பெற்றே இந்த ஏரிக்குச் செல்ல முடியும்!

சோப்தா பள்ளத்தாக்கு!

குரு டோங்மர் ஏரிக்குச் செல்லும் வழியில் 4023 மீ. உயரத்தில் பரவியுள்ளது. பைன் மரக்காடுகளால் சூழப்பட்ட அமைதியான இடம்.

லோனக் பள்ளத்தாக்கு!

சிக்கிமில் உள்ள பிரபலமான மலையேற்ற இடம் இது. இந்தப் பள்ளத்தாக்கு இந்திய ராணுவத்தால் தொடர்ந்து விழிப்புடன் பாதுகாக்கப்படுகிறது. 

சோலமு ஏரி!

5330 மீ. உயரத்தில் இந்திய - திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்றே இந்த ஏரியைப் பார்க்க முடியும். 

ராவங்லா

மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. கதகதா சால் என்னும் புத்த பூங்கா, மலையேற்றப்பாதை எனப் பல சிறப்பு மிக்க இடங்கள் இங்குள்ளன.

நம்ச்சி!

தெற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது நம்ச்சி. பனி மூடிய மலைப்பகுதி, வனப்பகுதி, பள்ளத்தாக்குகள் சூழ்ந்த அழகிய இடம்.

ஜூலுக்!

ஜுலுக் ஒரு சிறிய கிராமம். இந்த வழியாகத்தான் பண்டைய "பட்டுப் பாதை' செல்கிறது. இங்குள்ள "தம்பி' காட்சி முனை, கஞ்சன்ஜங்கா, நாக் கோயில் ஆகியவை பயணிகளை ஈர்க்கும் இடங்களாகும்.

டீஸ்டா நதி!

இந்த நதி குளிர்காலத்தில் உறைந்திருக்கும். கோடையில் ராஃப்டிங் படகு சவாரி போன்ற சாகச விளையாட்டுகள் இங்கு பிரபலமானவை. ரங்கீத் எனும் நதியுடன் டீஸ்டா நதி சங்கமிக்கும் இடத்தையும் பார்க்கலாம்.

போடோங் மடாலயம்!

கேங்டாக்கிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள ஃபோடாங் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த மடாலயம்! அழகிய சுவரோவியங்கள் கொண்டது.

கோச்சலா!

கோச்சலா 4940 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. மலையேறித்தான் இந்த இடத்தை அடைய முடியும். சிக்கிமின் பிரபலமான இடங்களில் ஒன்று இது. 

டெண்டோங் மலை!

தெற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது டெண்டோங். டம்தாங்கிலிருந்து 8530 அடி உயரத்தில் டெண்டோங் மலை உள்ளது. இங்கிருந்து சிங்கலியா, காங்டாங், நாதுலா கணவாய், டார்ஜிலிங் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் சமவெளி ஆகியவை தெரியும்! தியானத்திற்கும் ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. 

கணேஷ் டோக்!

கணேஷ் டோக் 6500 அடி உயரத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயில் ஆகும். தாஷி பாயிண்டிற்கு அருகில் இருப்பதால் சிக்கிமின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக இது திகழ்கிறது. 

சிக்கிம் - இமயமலை விலங்கியல் பூங்கா!

இப்பூங்கா வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் 230 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. பசுமையான வனப்பகுதி. 

ஜவாஹர்லால் நேரு தாவரவியல் பூங்கா!

இப்பூங்காவில் பல்வேறு மலர் வகைகளைப் பார்த்து ரசிக்கலாம்! யும்தாங் பள்ளத்தாக்கில் உள்ளது.

தாஷிடிங் மடாலயம்!

தாஷிடிங் மடாலயம் இப்பகுதியில் உள்ள மிகப் பழமையான மடாலயங்களில் ஒன்றாகும். 17 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

ஜெமு பனிப்பாறை!

இந்தப் பனிப்பாறை 26 கி.மீ. நீளம் கொண்டது. இது டீஸ்டா நதிக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. 

பசுமை ஏரி!

இது கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் உருவான ஏரி இது. 

ஜீரோ பாயிண்ட்!

ஜீரோ பாயிண்ட் சிக்கிமின் மிகவும் பிரபலமான இடம். 4724 மீ. உயரத்தில் உள்ளது. லாச்சுங் பள்ளத்தாக்கிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கிருந்து பனிப் பள்ளத்தாக்குகள், மற்றும் நீல வானில் மேகங்கள் சூழ்ந்த அற்புதமான காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

வெந்நீர் ஊற்றுகள்!

சிக்கிமில் பல வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. இந்த ஊற்றுகள் நோய் தீர்க்கும் சக்தியைப் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. 

அரிதர்!

இந்த நகரம் கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரிதர், கோயில் மற்றும் மடங்களுக்குப் பிரபலமானது. காடுகள், ஏரி, மற்றும், நீரோடைகளால் சூழப்பட்டுள்ளது. 

பனி மூடிய மலைகள், பள்ளத்தாக்குகள், நீரோடைகள், ஏரிகள், அருவிகள், வெந்நீர் ஊற்றுகள் பூங்காக்கள், வனங்கள் எனத் திகட்டாத எழில் கொஞ்சும் மாநிலம் சிக்கிம்!

நிறைவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.