மரங்களின் வரங்கள்!: தொல்காப்பியர் நீர்மருது மரம்
நான் தான் நீர்மருது மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் டெர்மினாலியே அர்ஜுனா என்பதாகும்.


குழந்தைகளே நலமா ?
நான் தான் நீர்மருது மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் டெர்மினாலியே அர்ஜுனா என்பதாகும். நான் காம்ப்ரிடேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு நீர்மத்தி என்ற வேறு பெயரும் உண்டு. நானும் ஓர் அரிய மரமாகி விட்டேன். என்னை இப்போ காட்சிப் பொருளா மாத்திட்டாங்க. நான் கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு ரொம்ப பிரபலம்.
நான் பருவக் காலங்களில் வேர்களின் மூலம் நீரினை சேமித்துக் கொண்டு கோடைக்காலங்களில் மரத்திலிருந்து சாரல் மழை போன்று தண்ணீரை ஊற்றுவேன். நன்கு வளர்ந்த மரத்தில் நீங்கள் காது வைத்துக் கேட்டால் என் உடம்பில் ஓடும் நீரோட்டம் உங்களுக்குக் கேட்கும். கோடைக்காலங்களில் என் மரத்தின் அடியில், என் நிழலில் நீங்கள் வந்து நின்றால் உங்களுக்கு குளிர்ந்த காற்றை நான் தருவேன். அது எப்படி இருக்கும் தெரியுமா குழந்தைகளே, அது தென்றல் காற்றைப் போல் இதமா இருக்கும். என் முன்னால் உங்கள் குளிர்சாதன இயந்திரம் நிற்காது. அந்தக் காலத்தில், கோடை வந்தாலே ஏழை, எளிய மக்கள் என் மர நிழலில் வந்து உட்கார்ந்து, கதைகள் பல பேசிடுவாங்க, எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.
குழந்தைகளே, மற்ற ஸ்தலங்களுக்கு சென்றால் தான் முக்தி. ஆனால், திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தின்னு உங்களுக்குத் தெரியுமல்லவா? அந்த பிரபலமான மாவட்டத்திலிருக்கு ஜவ்வாது மலை. இது கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரம் கொண்டது. இந்த ஜவ்வாதுமலை மேல்பட்டு கிராமத்தில் ஆசியாவிலேயே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய நீர்மருது மரம் இருக்கு. செங்கத்திலிருந்து மேல்பட்டு செல்லும் சாலையில், சாலையின் ஓரத்தில் நான் இருக்கேன். என் அகலம் கிட்டத்தட்ட 15 நபர்கள் ஒன்று சேர்ந்து கை பிடித்துக் கொள்ளும் அளவுக்கு அகலம் கொண்டது. சுமார் 20 பெரும் கிளைகளைக் கொண்ட மிக உயரமான பழமையான மரமா நான் காட்சியளித்துக் கொண்டிருக்கேன். இங்கு என் வேர்கள் 800 மீட்டர் தூரம் படர்ந்துள்ளது. தற்போது என்னை சுற்றிலும் ஏராளமான சிறு சிறு நீர்மருது வளருது. ஜவ்வாது மலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் என்னைக் கண்டு ரசித்து, என்னோடு செல்ஃபி, அதான் சுயப்படம் எடுத்துக்குவாங்க. அப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்.
500 ஆண்டுகள் பழமையான நீர்மருது மரம் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் இருக்கு. இது 151 அடி உயரமும், 85 அடி சுற்றளவும் கொண்டது. பழமையான, பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட என்னை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் "தொல்காப்பியர்' என்று பெயரிட்டு அழைக்கிறாங்க. மிக்க சந்தோஷம். ஏன்னா, தமிழ்கூறும் நல்லுலகம் என்ற அச்சான்றோரின் பெயரை என்றும் தாங்கி நிற்கும். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கணம் ஆய்ந்து நமக்குத் "தொல்காப்பியம்' தந்தவர்.
எங்கிட்டேயும் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருக்கு. என் பட்டை இதய நோய், எலும்புருக்கி, ஆஸ்துமா, கல்லீரல் வீக்கம், நுரையிரல் புண், ரணம், சொறி ஆகிய நோய்களுக்கு அருமருந்து குழந்தைகளே. என் இலை பித்த வெடிப்பு, வயிற்று வலி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுது. என் மரத்தால் செய்யப்படும் வீட்டு உபயோகப் பொருட்களை நீங்க தொட்டு பயன்படுத்தி வந்தால் எந்த நோயும் உங்களை அண்டாது, உடலுக்கு சுகத்தையும் தரும்.
இயற்கையின் கொடையாக இருக்கிற என்னை காக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்கக் கிட்ட இப்போ இருக்கு. திருக்கோவில்கள், அரண்மனைகள் போன்றவற்றை பொக்கிஷமா பாதுகாப்பது போல பழமையான மரங்களையும் பொக்கிஷமா பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமையல்லவா? நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...