அரங்கம்: பயணம்

இங்கேதான் கடைக்குள் இருக்கேன். சொல்லு ஜெஹபர்...
அரங்கம்: பயணம்


காட்சி - 1
இடம் - மூர்த்தி கடை முன்புறம்
மாந்தர் நண்பர்கள் - பள்ளித் தோழர்கள் மூர்த்தி, ஜெஹபர் அலி
மூர்த்தி - காய்கறிக் கடை, ஜெஹபர் - மளிகைக் கடை
இருவரும் நகர எல்லையில் கடைவைத்திருக்கிறார்கள்

ஜெஹபர் அலி - மூர்த்தி... மூர்த்தி..
மூர்த்தி - இங்கேதான் கடைக்குள் இருக்கேன். சொல்லு ஜெஹபர்...
ஜெஹபர் - தொழுகைக்கு கடை பின்புறம் போறேன். சித்தே பார்த்துக்கறியா ?
மூர்த்தி - பேஷாக .. நான் பார்த்துகறேன். கல்லா பெட்டியை மட்டும் பூட்டி சாவியை மறந்துடாம எடுத்துப் போ.. நான் சமாளிச்சுக்கிறேன்.
(ஜெஹபர் கடையின் பின்புறம் சென்று விரிப்பில் அமர்ந்து தொழுகையை ஆரம்பிக்கிறார். )

மளிகைக் கடை வாசலில் ஒருவர் - எங்கே கடையில் யாரும் இல்லியா?
மூர்த்தி -(தன் கடையில் இருந்து வெளியே வந்து) சொல்லுங்க என்ன வேணும் ?
வந்தவர் - கால்கிலோ கடலை பருப்பு.. ஒரு நல்லெண்ணெய் பாக்கெட் ஒரு லிட்டர்.
மூர்த்தி - (எடுத்துத் தந்து) முன்னூற்றிஇருபது தாங்க...

(பணம் தந்து விட்டு பொருட்களை எடுத்துச்செல்கிறார்)

சிறிது நேரத்தில் ஒரு பெண்- (காய்கறிக்கடை வாசலில் வந்து நின்று) கடைக்காரரே இஞ்சி தக்காளி மல்லி புதினா கருவேப்பிலை... எங்கே யாரையும் காணோம் ?
மூர்த்தி - (மளிகைக் கடையில் இருந்து தன் கடைக்குள் சென்று) வேறே என்னென்ன வேணும் ?
பெண் - தேங்காய் நல்லதா ஒண்ணு தாங்க.. போனதரம் வாங்கிப் போனது நல்லா அடர்த்தியா பூ நிறைய இருந்திச்சு.
மூர்த்தி - எல்லாவற்றையும் தந்து மொத்தம் அம்பத்தி இரண்டு ஆச்சு, அம்பது கொடுங்க.

(பெண் சென்றதும் ஜெஹபர் வருகிறார்)

மூர்த்தி - ஜெஹபர்.. முன்னூத்தி இருபது கல்லாப் பெட்டி மேல் வச்சிருக்கேம்ப்பா. எடுத்து உள்ளே வை. என்ன வித்தேன்னு விபரம்ன்னா,......
ஜெஹபர் - அதை யாரு கேட்டா ?
(அப்போது தூரத்தில் ஜெஹபர் மனைவி பாத்திமா வருகிறார்)

மூர்த்தி - என்னப்பா.. ஜெஹபர் உன் மனைவி வர்றாங்க ரொம்ப அரிதாச்சே, அவங்க கடை பக்கம் வருவது.
பாத்திமா- வந்து மூர்த்தியிடம் - அண்ணே சவுரியமா ?
மூர்த்தி - நல்லா இருக்கேம்மா என்ன திடீர் விஜயம் ?
பாத்திமா - நல்ல விஷயம்தான்.. தம்பி குவைத்தில் இருந்து வந்திருக்கான்.. எங்க வீட்டுக்காரருக்கு விசா எடுத்து வந்திருக்கான்,
(மாசம் எழுபதாயிரம் சம்பளத்தில் டிரைவர் வேலை.)

ஜெஹபர் - ம்,.... அப்படியா விஷயம். ரகுமான் வந்திருக்காரா விசாவோட. சரி மூர்த்தி, இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கடையைக் கட்டறேன். மைத்துனரிடம் பேச நிறைய விஷயம் இருக்கு. கொஞ்சம் முடிஞ்சா நீயும் கடை கட்டினதும் வீட்டுப் பக்கம் வாயேன்.
மூர்த்தி - கண்டிப்பா வரேன் ஜெஹபர்.

காட்சி 2
இடம் - ஜெஹபர் இல்லம்
மாந்தர் - ஜெஹபர் அலி, ரஹ்மான், பாத்திமா, மூர்த்தி
(மூர்த்தியை வாசலில் பார்க்கிறார் ஜெஹபர்)

ஜஹபர் - வாப்பா மூர்த்தி உள்ளெ வந்து உட்கார்
ஃபாத்திமா மூர்த்தி வந்திருக்கார் சாயா கொண்டுவா.
மூர்த்தி - (ஜெஹபர் மைத்துனர் ரகுமானிடம்) ரகுமான் சார் எப்ப வந்தீங்க ?
ரகுமான் - வந்து ஒரு வாரம் ஆச்சு..ராமநாதபுரம் போயிட்டு இப்போ இங்கே வந்து மைத்துனருக்கு குவைத் டிரைவர் வேலைக்கு விசா எடுத்து வந்தேன். நான் வேலை பார்க்கும் கம்பெனி பெரும் கட்டிடங்கள் கட்டும் கட்டுமானக் கம்பெனி. குவைத் மன்னரின் மிக நெருங்கிய உறவினருடையது.
மூர்த்தி - ஜெஹபர் எவ்வளவு நாள் அங்கே வேலை பார்க்கலாம் ?....இங்கே அவர் நடத்தும் மளிகைக் கடையை யார் கவனிப்பாங்க?
ஜெஹபர் - அது விஷயமாத்தான் மூர்த்தி உன்னிடம் பேசணும்....நான் குவைத் போனதும் உன்னால் என் கடையையும் சேர்த்துப் பார்த்துக்க முடியுமா.... நான் ஒரு வேளை ஓரிரு வருடங்களில் திரும்பி வந்துட்டால் உன்னிடம் இருந்து கடையை நான் தொடர்ந்து நடத்த சவுரியமா இருக்கும்.
மூர்த்தி - என் கிட்டே உறவுக்கார பசங்க இருக்காங்க வச்சு நடத்தறேன் அப்பா. ஆனால் பிள்ளை குட்டிங்களை விட்டு நீ அவசியம் குவைத் போகணுமா.?
ஜெஹபர் - வெளி நாடு போறது தான் எங்க குல வழக்கம். எவ்வளவு நாள் முடியுதோ இருக்கேன். இந்தாப்பா கடை சாவி வச்சுக்கோ. பெட்டியில் ரொக்கம் மூவாயிரத்து சொச்சம் இருக்கு. இது கல்லாப் பெட்டி சாவி. நான் பயணம் போக ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கு.. அதனால் நாளை முதல் நீ பார்த்துக்கப்பா
மூர்த்தி - சரி ஜெஹபர்.
ரகுமான் - அப்போ மச்சான் அடுத்த வாரம் ஞாயிறு இரவு விமானத்தில் இருவருக்கும் டிக்கெட் வாங்கிடறேன்.
(அடுத்த வாரத்தில் ஜெஹபர் வெளி நாடு பயணம் மேற்கொள்கிறார். தன் உறவினர் மகன் காய்கறிக் கடையை கவனிக்க மூர்த்தி மளிகைக் கடையை நடத்துகிறார்..)
(ஒரு மாதம் கழித்து)


காட்சி 3
இடம் - மளிகைக் கடை
காலம் - இரவு மணி எட்டரை மாந்தர் - மூர்த்தி
( ஃபோனில் ஜெஹபர் பேசுகிறார் குவைத்தில் இருந்து)

மூர்த்தி - நல்லா இருக்கியா ஜெஹபர். இங்கே உன் வீட்டில் அனைவரும் நலம். என் மனைவி விஜயா நேற்றுதான் உன் மனைவி ஃபாத்திமாவையும் குழந்தைகளையும் பார்த்து வந்தா . இப்போ அங்கே மணி மாலை ஆறுதான் ஆகுதா..? இரண்டரை மணி கம்மியா உன் ஊரில்.?
ஜெஹபர் - ( ஃபோனில் குவைத்தில் இருந்து) வணக்கம் மூர்த்தி,..... ரகுமான் அவர் முதலாளியிடம் அழைச்சுப் போனார் .... அவருக்கு முதல் பார்வையில் என் மீது நம்பிக்கை வந்து விட்டது. ஒருவாரம் லோடு வண்டி பெரிய லாரி ஓட்டச் சொன்னார் ஓட்டினேன். அப்புறம் என்னையும் ஒரு வங்க தேச டிரைவரையும் ஒரு இண்டர்வியூவுக்கு வரச் சொன்னார்...
மூர்த்தி - எதுக்கு..?
ஜெஹபர் - அவருடைய மனைவி, பிள்ளைகளை பத்திரமாகக் காரில் கொண்டு செல்ல நம்பிக்கையான டிரைவர் தேவை.. அதே சமயம் கார் ரிப்பேர் பார்க்கவும் தெரியணும் என்றார் மேனேஜர்.
மூர்த்தி - நீ தான் ஐடி ஐ ஆட்டோமொபைல் படிச்சவனாச்சே?
ஜெஹபர் - இருவரையும் அழைச்சுப் போனாங்க.
மூர்த்தி - சரி அந்த வங்க தேச டிரைவர் என்ன படிச்சவர்?
ஜெஹபர் - கேளு.. அவரு ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிச்சவராம்.. தன் டூல்ஸ் பெட்டியோட வந்திருந்தார். அங்கே இரண்டு கார்கள் இருந்தன. முதலில் அந்த வங்க தேச டிரைவரை பழுது பார்க்கச் சொன்னார். அவர் தன் வெண்மையான உடைகளைக் களைந்து விட்டு காக்கி டிரஸ் போட்டு கார் அடியில் நுழைஞ்சு பார்க்க ஆரம்பிச்சார்
மூர்த்தி - அப்புறம்?
ஜெஹபர் - என்னை அருகில் இருந்த மற்றொரு காரை பழுது பார்க்கச் சொன்னாங்க. நான் தாமதிக்காமல் உடனே அடுத்த வினாடி அப்படியே காருக்கடியில் போய் என்ன பழுது என பார்த்து பத்து நிமிடத்தில் சரிசெய்தேன். அந்த இன்னொரு டிரைவர் ஐந்தே நிமிடத்தில் முடித்து விட்டார்.
மூர்த்தி - ஓ!.... நீ செலக்ட் ஆகலையா ?
ஜெஹபர் - கேளு . முதலாளி சொன்ன அடுத்த வினாடியே நான் அவர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து என் வெள்ளை உடை அழுக்காவதைப் பற்றிக் கவலைப் படாமல் சர் என கார் அடியில் போனேனா... அந்த கீழ்ப் படிதல் அவருக்குப் பிடித்துப் போச்சு. என்னைவிட படித்த திறமைசாலியான அந்த வங்க தேச டிரைவரை வேணாம்ன்னு சொல்லிட்டார் முதலாளி.
மூர்த்தி - பலே! அப்புறம் என்னாச்சு ?
ஜெஹபர் - இப்போ அவர் வீட்டு தனிப்பட்ட டிரைவர் நான். தங்க தனி இடம், அவர்கள் வீட்டு சாப்பாடு எல்லாம் தர்றாங்க. சம்பளம் இருமடங்கு. பிள்ளைகளை பள்ளிக்குக் கொண்டுவிடறது, வீட்டு பெண்மணிகள் காரில் கடைகளுக்குப் போகவர, இது தான் என் வேலை இப்போ.
மூர்த்தி - இங்கே மளிகைக் கடையில் நல்லா வியாபாரம் நடக்குதுப்பா.. அதில் மட்டும் மாதம் எனக்கு தனியா பத்தாயிரம் கிடைக்குது..நானும் நல்லா இருக்கேன்.. காய்கறிக் கடையும் என் மேற்பார்வையில் நல்லா நடக்குது.. ஓகே ஜெஹபர்.. அடுத்த வாரம் இதே நேரம் கூப்பிடறியா வச்சிடவா. கடைக்கு நாலைஞ்சு பேர் சாமான் வாங்க வந்திட்டாங்க,
(காலச் சக்கரம் விரைவாகச் சுழல்கிறது -நான்கு வருடங்கள் கழித்து -)

காட்சி 4
இடம் - மளிகைக் கடை
மாந்தர் மூர்த்தி, அவர் மனைவி விஜயா
ஜெஹபர் மனைவி பாத்திமா

மூர்த்தி மனைவி விஜயா - வாங்க பாத்திமா அண்ணி. அண்ணன் குவைத்தில் நலமா? போனில் பேசினாங்களா.?
பாத்திமா - ஆமாம் அது விஷயமாதான் வந்தேன். அண்ணி எனக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லை. டாக்டர் பரிசோதித்து விட்டு இரத்த சோகை மாதிரி இருக்குன்னு டானிக், மாத்திரை தெம்புக்கு தந்தாங்க. என்னால் வீட்டு வேலைகள் முந்தி மாதிரி செய்ய முடியலே. பிள்ளைகள் படிப்பதையும் கவனிக்க வேண்டி இருக்கு.
(மூர்த்தியிடம்) அண்ணே.. உங்க நண்பரை குவைத்தில் இருந்து வரச் சொல்லிட்டேன்!....
மூர்த்தி - அப்படியா.. முதலாளி இவன் மேல் ரொம்ப பிரியமாய் இருக்கார். எவ்வளவு வருஷம் வேணுமின்னாலும் இங்கே இருன்னு சொன்னார்ன்னு சொன்னானே....
பாத்திமா - ஆமாம். அப்புறம் என் உடல் நிலையைச் சொன்னதும் முதலாளி அம்மா உடனே அவரை அனுப்பச் சொல்லிட்டாங்களாம். அவருக்கு சேர வேண்டிய சம்பளம், பி எஃப் கிராஜுவிட்டி எல்லாம் என்னவோ அதைக் கணக்கில் போட்டு விட்டாங்களாம். டிக்கெட்டும் எடுத்துத் தந்திட்டாங்களாம். பத்து நாளில் திரும்ப வர்றார்.
மூர்த்தி - ஒரு புறம் அவன் வீட்டோட வரானே என்பதில் சந்தோஷம்மா. வரட்டும் கடையை நடத்திக்கிட்டு நிம்மதியா குடும்பத்தோட இருக்கட்டும்.. போதும் வெளி நாட்டில் சம்பாதிச்சது.

காட்சி 5
இடம் மளிகைக் கடை
மாந்தர் - ஜெஹபர் அலி, மூர்த்தி, பாத்திமா விஜயா

மூர்த்தி - வாப்பா ஜெஹபர்..
ஜெஹபர் - நீ தானே ஓனர் இப்போ.. கடைக்குள் வரலாமா?
மூர்த்தி - இது உன் கடை தானே. என்னப்பா கேள்வி? இந்தாப்பா கடை சாவி..உன்னுடைய கல்லா பெட்டி சாவி பிடி! அப்பா..., என் பாரம் குறைந்தது.
(ஜெஹபர் பெட்டியைத் திறக்க..அதில் அவர் வைத்து விட்டுப் போன மூவாயிரம் ரூபாய் அப்படியே இருப்பதைப் பார்த்து நெகிழ்ச்சியுடன்)
ஜெஹபர் - மூர்த்தி நாணயம் என்பதற்கு நீ தாம்ப்பா இலக்கணம்.
மூர்த்தி - என்னப்பா இது.. உன் கடை உன் சொத்து.. கொஞ்ச நாள் நான் காப்பாளனா பாதுகாத்தேன்.
ஜெஹபர் - இதுக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
மூர்த்தி - ஒண்ணும் வேணாம் நீ ஒரு கூலிங் கிளாஸ், புது கை பேசி வாங்கி வந்து தந்தியே. அதைப் போட்டுக்கிறேன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்..அந்த ஃபோனில். அது போதும்.

(நண்பர்கள் இருவரும் செல்ஃபி எடுத்துக் கொள்வதைப் பார்த்து பாத்திமாவும் விஜயாவும் புன்னகைக்கின்றனர்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com