மரங்களின் வரங்கள்!: ஆரோக்கியம் நிறைந்தவன் - சப்போட்டா மரம்
நான் தான் சப்போட்டா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் அக்ரஸ் சப்போட்டா என்பதாகும். நான் சப்போட்டேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.


குழந்தைகளே நலமா?
நான் தான் சப்போட்டா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் அக்ரஸ் சப்போட்டா என்பதாகும். நான் சப்போட்டேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் தென் அமெரிக்க நாடான மெக்சிகோவின் யுகாட்டான் மாகாணம். நான் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து பிலிப்பைன்ஸ் வழியாக பயணம் செய்து இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு வந்திறங்கினேன். எனக்கு அமெரிக்கன் புல்லி என்ற செல்லப் பெயருமுண்டு. என்னை தமிழில் சீமை இலுப்பைன்னு சொல்லுவாங்க. என் இலை இருபுறமும் ஊசியான அமைப்பைக் கொண்டிருக்கும். அது 4 முதல் 12 அங்குலம் வரை இருக்கும். என் பழத்தின் வெளிப்புற தோலானது பழுப்பு நிறத்திலிருக்கும்.
போர்த்துகீசியர்கள் கடல்வழியே இந்தியாவிற்கு வந்த போது நானும் நுழைந்தேன். இன்று உலக அளவில் சப்போட்டா உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. சப்போட்டா என்ற சொல் தென் அமெரிக்க நாடுகளில் வாழ்ந்த அஸ்டெக் இனமக்கள், நாகவர் மொழியில் பேசப்பட்ட சப்போட்டி எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
குழந்தைகளே, சுவையான சப்போட்டா பழத்தை அக்கால அமெரிக்க பழங்குடி இன மக்கள், நாணயமாகப் பயன்படுத்தியிருக்காங்க. சந்தைகளில் சப்போட்டா பழங்களைக் கொடுத்து, அதற்கு பதில் மீன், முயல் போன்றவற்றை வாங்கியிருக்காங்க. இந்தச் செய்தி அமெரிக்க பழங்குடி இனமக்களின் வாழ்க்கைக் குறித்து எழுதிய ஸ்பானிய பிஷப், டியோக டி லண்டா என்ற அறிஞர் எழுதிய புத்தகத்திலிருக்கு.
குழந்தைகளே, சப்போட்டி என்றால் மென்மையான பழம் என்று பொருள். என்னை மிஸ்பெல் என்று கரீபியல் கடல் பகுதி தீவுகளிலும், பிலிப்பைன்சில் சிக்கோ என்றும், வடஇந்தியாவில், குறிப்பா பஞ்சாபில் என்னை சிக்கு என்றும் அழைக்கிறாங்க. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தான் நான் அதிகமா விளையறேன். என் நிறத்தைப் பார்த்து சிலர் முகம் சுளிப்பாங்க. உருவு கண்டு எள்ளாமை வேண்டும் குழந்தைகளே, ஆற்றலுக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் என்னை விட்டால் வேறு யாருமில்ல.
ஆற்றலுக்கு அடையாளமாக நானிருக்கேன். அந்தக் காலத்தில் விளையாட்டு வீரர்கள் களைப்பினைப் போக்க என் பழத்தை தான் சாப்பிடுவாங்க. ஏன்னா, எங்கிட்ட புரோட்டீன், இரும்புசத்து அதிகமாயிருக்கே. குழந்தைகளே. என் பழத்தில் சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற நுண் சத்துகளும், மாவு சத்து, சர்க்கரை சத்து, நார்ச்சத்து, கொழுப்பு, புரதச்சத்தும் நிரம்பி வழியுது.
என் பழத்திலிருக்கும் வைட்டமின் சி மற்றும் ஏ சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உங்களுக்கு பித்தமா, என் பழத்தைச் சாப்பிட்டு, பின்பு ஒரு ஸ்பூன் சீரகத்தை மென்று விழுங்கினால் எந்தப் பித்தமும் தலைத்தெறிக்க ஓடிவிடும். கொழுப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு என் பழம் அருமருந்து. என் பழத்தில் நார் சத்து உள்ளதால், உங்கள் செரிமான பிரச்னைகளுக்கு குட் பை.
என் பழத்தை அரைத்து, விழுதினை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடியோடு நீங்கிவிடும். என் பழங்கள் உங்கள் உடலுக்கு புத்துணர்வைத் தரும், கண் பார்வையை அதிகரித்து, தோல் பாதிப்படையாமல் பளபளப்பாக்கும்.
குழந்தைகளே, இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா? என் பழத்தை உண்டால் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும். இதனால், மன அழுத்தம், மன அமைதியின்மை, மூளைச்சோர்வு உங்களுக்குக் குறையும். மனதுக்கும் நல்ல அமைதி கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்களும், தாய்ப்பால் கொடுப்போரும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், நல்ல சக்தியும், நுண்ணூட்டமும் அதிகம் கிடைப்பதோடு, சருமமும், கேசமும் மின்னும். எனினும் குழந்தைகளே, சர்க்கரை நோய் உள்ளவர் என் பழத்தை அதிகம் உண்ணக் கூடாதுன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...