தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கெட்டிக்காரக் குட்டித் தவளை!

ஊரின் நடுவில் ஒரு குளம் இருந்தது. அதில் நீர் நிரம்பி இருந்தது. குளத்தில் அல்லி, தாமரை போன்ற மலர்கள் பூத்துக் குலுங்கின. வெவ்வேறு ஊர்களிலிருந்து குளத்திற்குப் பறவைகள் வந்திருந்தன.

News image
Updated On :26 செப்டம்பர் 2020, 12:30 am

DIN

ஊரின் நடுவில் ஒரு குளம் இருந்தது. அதில் நீர் நிரம்பி இருந்தது. குளத்தில் அல்லி, தாமரை போன்ற மலர்கள் பூத்துக் குலுங்கின. வெவ்வேறு ஊர்களிலிருந்து குளத்திற்குப் பறவைகள் வந்திருந்தன. அவை தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தன. இவற்றை வேடிக்கை பார்க்க, ஊர் மக்கள், தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்தனர். மொத்தத்தில் அந்த இடம் அழகாகக் காட்சி அளித்தது.
அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அன்று மாலை புதிதாக ஓர் அல்லிப்பூ மலர்ந்தது. அந்த அல்லிப்பூ தன் பவள வாயைத் திறந்து, ""வணக்கம் நண்பா!'' என்று குளத்திடம்  சொன்னது.
குளம் பதில் சொல்வதற்குள் அங்கே ஒரு பறவை கோபத்துடன் அல்லியைப் பார்த்து, ""யாரைப் பார்த்து நண்பன் என்கிறாய்?..... குளம் எங்களுக்குத்தான் நண்பன்!...'' என்றது. 
பூக்கள் சும்மா விடுமா?.... பூக்கள் ஒன்று சேர்ந்து, ""அதெல்லாம் கிடையாது!.... குளம் பூக்களாகிய எங்களுக்குத்தான் நண்பன்!'' என்றன.
பறவைகளும் பூக்களும் சண்டை போட ஆரம்பித்தன. குளம் யாரை நண்பன் என்று சொல்வது என்று தெரியாமல் விழித்தது.
அப்போது, ""கிர்ரக்.... கிர்ரக்'' என்று ஒரு குரல் கேட்டது. ஒரு குட்டித் தவளை! பாறை மறைவிலிருந்து எட்டிப் பார்த்தது அது! 
""என்ன சத்தம்?'' என்று கேட்டது.
குளம் தவளையை அலட்சியம் செய்துவிட்டு, அங்கு  நீந்திக்கொண்டிருந்த தங்க மீனிடம், "" தங்க மீனே!... என்  உண்மையான நண்பர்கள், பூக்களா?... இல்லை பறவைகளா?...ஒரு நல்ல பதில் சொல்லேன்'' என்று கேட்டது. 
தங்க மீனோ, ""எனக்கு அதெல்லாம் தெரியாது!'' என்று கூறிவிட்டுத் தண்ணீரில் மூழ்கி மறைந்தது.
குட்டித் தவளை, ""நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டது.
குளம் தவளையை  மதிக்காமல் அருகில்  இருந்த ஓர் அணிலைப் பார்த்து, ""அணிலே!.... என் உண்மையான நண்பர்கள், பறவைகளா?.... அல்லது பூக்களா?.... இதற்கு ஒரு நல்ல விடை சொல்லேன்!'' என்றது. 
""எனக்கு என்னமோ இருவருமே உன் நண்பர்கள் என்றுதான் தோன்றுகிறது!.... '' என்று கூறிவிட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.
அதற்கும் பறவைகளுக்கும் பூக்களுக்கும் இடையிலான சண்டை , உச்சத்தை எட்டிவிட்டது. அதனைக் கண்டு குளம் கலக்கம் அடைந்தது. வேறு வழியின்றி, ""குட்டித் தவளையே,..... என் உண்மையான நண்பர்கள் பூக்களா?.... இல்லை பறவைகளா?.... இந்தப் பிரச்னைக்கும் ஒரு நல்ல தீர்ப்பு சொல்!'' என்று கேட்டது.
தவளை உடனே குளத்தைப் பார்த்து, ""நண்பா!.... இப்போது மழைக்காலம்.... அதனால் நீ மூழுவதும் நீருடன் இருக்கிறாய்!.... இதுவே கோடைக்காலத்தில் தண்ணீர் இன்றி வரண்டு இருந்தாய்.... அப்போது இந்தப் பறவைகளும், பூக்களும் எங்கே இருந்தனர்?....'' என்று கேட்டது.
சற்று யோசித்த குளம், ""பறவைகள் வரவில்லை. பூக்களின் கொடிகள், கருகி, என்னுடன் மண்ணுக்கு அடியில் புதைந்து இருந்தன''. என்று பதில் கூறியது.
""சரியான பதில்!'' என்று பாராட்டிய தவளை, ""உன்னிடம் தண்ணீர் இல்லாதபோது பறவைகள் உன்னை விட்டு விலகி, வேறு எங்கு நீர் இருக்கிறதோ, அங்கு சென்று விட்டன. ஆனால், அப்போதும், இந்தப் பூங்கொடிகள், உன்னுடனே இருந்தன, வெயிலில் கருகி, மண்ணில் புதைந்து இருந்தன. நல்ல நண்பர்கள் நம்முடைய மகிழ்ச்சியிலும், வருத்தத்திலும் நம்மை விட்டு விலகாமல் உடன் இருப்பார்கள். அந்த வகையில், பூக்கள்தான் உன்னுடைய உண்மையான நண்பர்கள்!'' என்று சொன்னது.
இதைக் கேட்ட குளம், ""அருமையான தீர்ப்பைச் சொன்ன நண்பனே,.... உனக்கு நன்றி!... வயதில் இளையவன்!.... இருப்பினும் நீ கெட்டிக்காரன்!'' என்று தவளையைப் பாராட்டியது.
""நண்பர்களுக்குள் நன்றி எதற்கு?.... நாளை பார்க்கலாம்!... கிர்ரக்...கிர்ரக்...'' என்று பாறையிலிருந்து குளத்து நீரில் பாய்ந்தது அந்தக் கெட்டிக்காரக் குட்டித் தவளை!
-துரை ஆனந்த் குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.