செய்தித் தோட்டம்! செய்திச் சிட்டு!
ராமு, பாலா, லீலா, மாலா எல்லோரும் தோட்டத்தில் விளையாடிவிட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். விர்ர்ர்ர்ரென்று ஒரு குருவி வந்து அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது!


ராமு, பாலா, லீலா, மாலா எல்லோரும் தோட்டத்தில் விளையாடிவிட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். விர்ர்ர்ர்ரென்று ஒரு குருவி வந்து அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது!
கீச்சுக் குரலில், ""என்ன நல்லா ஆட்டம் போட்டாச்சா?'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டது! எல்லோருக்கும் ரொம்ப ஆச்சரியமாகிவிட்டது!
பாலா, ""அட! குருவி பேசுதே!...'' என்றான்.
""இதென்ன ஆச்சரியம்!'' என்றாள் லீலா.
""உங்களைப் பார்த்ததுலே ரொம்ப மகிழ்ச்சி... நான் பேசறது உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம்... அதோட வேற விஷயம் ஒண்ணு இருக்கு! இனிமே வாராவாரம் இந்தத் தோட்டத்துக்கு நான் வருவேன்... எனக்குப் பாஸ்போர்ட் கிடையாது... விசா கிடையாது... அதனாலே நான் உலகமெல்லாம் சுத்துவேன்... உங்களுக்கு வாராவாரம் ஒரு புது செய்தியை இங்கே கொண்டுவந்து தருவேன்!''
""அதென்ன இந்தத் தோட்டத்தை செலக்ட் பண்ணியிருக்கே?'' என்று கேட்டான் பாலா.
""இங்கேதான் அதோ அந்தக் கொய்யா மரத்திலே ஒரு கூட்டிலே நான் பிறந்தேன். அதனால், அடிக்கடி இங்கே வருவேன். அது போகட்டும்... உங்களுக்கு ஒரு புது செய்தி சொல்லவா?''
குழந்தைகள் எல்லோரும் ரொம்ப ஆர்வமாகக் கவனித்தார்கள்.
""இப்போ மின்சாரத்திலே ஓடுற வாகனம் வந்திருக்கு இல்லையா...''
""இது ஒரு செய்தியா? ரொம்பப் பழசு... எங்கத் தெருவிலே குப்பை வண்டிகூட மின்சாரத்திலே வந்திடுச்சு!'' என்றாள் லீலா.
""அதில்லை... இப்போ மின்சாரத்திலேயே "யாரா பிர்க்லேண்ட்' அப்படீங்கிற கப்பல் ஓடுது!''
""ஆச்சரியமா இருக்கே எங்கே?'' என்றான் ராமு.
""நார்வேயிலே. அங்க "யாரா' ன்னு ஒரு உரம் தயாரிக்கிற கம்பெனி இருக்கு. யாரா என்கிறவர் அதோட சொந்தக்காரர். அவரு "வார்ட்' அப்படீன்னு ஒரு கப்பல் கம்பெனியோட சேர்ந்து கப்பல் தயாரிக்கிற தொழிலிலும் ஈடுபட்டிருந்தாரு. அவரு "கோங்பெர்க்' அப்படீங்கிற தொழில்நுட்பக் கம்பெனியோட சேர்ந்து இந்தக் கப்பலை உருவாக்கியிருக்காங்க...''
""மின்சாரக் கப்பல் தண்ணியிலே ஓடினா ஷாக் அடிக்குமா?'' என்று அப்பாவியாய்க் கேட்டாள் லீலா.
""அதெல்லாம் அடிக்காது. அது மட்டுமில்லே சுமார் 120 கன்டெய்னரை "யாரா பிர்க்லேண்ட்' கப்பல்லே ஏத்திடலாம்!'' என்றது குருவி.
""அவ்வளவு பெரிய கப்பலா?'' என்று வியந்தான் பாலா.
""புதுக் கப்பலாச்சே... அதோட மாலுமி?'' என்று இழுத்தான் ராமு.
""அதுவா? அந்தக் கப்பல் கம்ளீட்லி ஆட்டோமேஷன் செய்யப்பட்டது. அதாவது தானியங்கிக் கப்பல்!''
""அடேங்கப்பா! ரொம்ப இன்ட்ரஸ்டிங்காத்தான் இருக்கு!'' என்று லீலா ஆச்சரியப்பட்டாள்.
""அது மட்டுமில்லே... கன்டெய்னரை ஏற்றுவது, இறக்குவது எல்லாம் கப்பல் தானாவே செய்யும். டீசல் கப்பல்களாலே வருடத்திற்கு 1 லட்சம் கிலோ கார்பன் வெளியாகுது. இது சுற்றுச் சூழலுக்குக் கேடானது. இந்தக் கப்பலில் புகையே வராது. சுற்றுச் சூழலுக்கு நண்பன்! இந்த மாதம் 18-ஆம் தேதி முதல் முறையா நார்வேயின் ஹோர்டன் துறைமுகத்திலேயிருந்து ஓஸ்லோ துறைமுகத்துக்குக் கப்பல் சென்றது. சிறிய தூரம்தான் சுமார் 100 கி.மீ. இந்த தூரத்திற்குக் கன்டெய்னர்கள் சாலை வழியாத்தான் பயணிக்கும். இந்தக் கப்பலாலே வருடத்திற்கு 40,000 சாலை வழிப் போக்குவரத்தும் குறைகிறதாம்! உலகெங்கும் இந்தப் புதிய கப்பலை ஆச்சரியமா பார்க்கிறாங்க...''
(லேசான தூரலுடன் மழை ஆரம்பிக்கிறது)
""ரொம்ப சுவாரசியமான செய்தியைத்தான் சொல்லியிருக்கே... உன் பேர் என்ன?''
""சிட்டு! மழை வருது கிளம்புங்க!'' என்று கூறிவிட்டுப் பறந்துவிட்டது சிட்டு.
""வாடா வீட்டுக்குப் போலாம்!'' என்றாள் லீலா.
""நான் கப்பல் செஞ்சு தர்றேன். எல்லோரும் மழைத் தண்ணியிலே விடலாம்!'' என்றான் பாலா.
""ஆட்டோமேட்டிக் கப்பலா?'' என்று கிண்டலடித்தாள் மாலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...