வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கருவூலம்: கோவா மாநிலம்!

கோவா மாநிலம் இந்தியாவில் உள்ள மேற்குக் கடற்கரை பகுதியிலுள்ள கொங்கன் மண்டலத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம்.

News image
Updated On :20 மார்ச் 2021, 12:30 am


மாணவர்களே கோவா மாநிலம் பற்றித்தெரிந்து கொள்வோமா?

கோவா மாநிலம் இந்தியாவில் உள்ள மேற்குக் கடற்கரை பகுதியிலுள்ள கொங்கன் மண்டலத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். மேலும் மிகக் குறைந்த மக்கள் தொகை உடைய மாநிலம். கொங்கணி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர இந்தி மற்றும் போர்ச்சுகீசிய மொழியும் இங்கு பேசப்படுகிறது.

வடக்கில் மகாராஷ்டிரா மாநிலமும், கிழக்கில் கர்நாடகா மாநிலமும், மேற்றிக் அரபிக் கடலும் இம்மாநிலத்தின் எல்லையாகும்.

கோவாவின் பரப்பளவு 3702 ச.கி.மீ. ஆகும். நிர்வாக வசதிக்காக வடக்கு கோவா, தெற்கு கோவா என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத் தலைநகரம் "பனாஜி' ஆகும். "வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும்.

இம்மாநிலத்தில் உள்ள மார்கோ நகரம் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாகும். 16 - ஆம் நூற்றாண்டில் வியாபாரியாகக் குடிபுகுந்து விரைவில் நாட்டையே கைப்பற்றிய போர்ச்சுகீசியர்களின் கலாசாரம் செல்வாக்கு பெற்றிருந்ததை தற்பொழுதும் வெளிப்படுத்துவதாக மார்கோ நகரம் உள்ளது. கோவா 1961 - இல் இந்தியாவோடு இணைக்கப்படும் வரை போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக நீடித்தது.

கோவாவின் வரலாறு கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் கி.மு. 3 - ஆம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன. மெளரியப் பேரரசின் ஒரு பகுதியாக கோவா இருந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள் டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள், என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

1947 - இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு போர்த்துகல் ஆட்சி, இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் உரிமையை திரும்பப் பெறுவதற்கான இந்தியாவுடனான உடன் படிக்கையை ஏற்க மறுத்தது.,

இந்திய ராணுவம் 1961 டிசம்பர் 12 - இல் மேற்கொண்ட "ஆபரேஷன் விஜய்' என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களைக் கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தது.

கோவா மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட யூனியன் பிரதேசமாக மாறியது. அதன்பின் 1987 - ஆம் ஆண்டு மே 30 - ஆம் தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா இந்தியாவின் 25 - ஆவது மாநிலமாக மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசமாகத் தொடர்கிறது.

கோவாவின் அமைவிடச் சிறப்புகள்!

கடலோரப் பிரதேசமான கோவா நேர் செங்குத்தான மலைச்சரிவு மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரை நீடிக்கிறது. மண்டோலி, சுஹாரி, தெர்கோல் சோப்ரா, சல் ஆகியவை கோவா மாநிலத்தின் முக்கிய ஆறுகள்.

மர்மகோவா துறைமுகம் சுஹாரி ஆற்றின் வாய்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவின் மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகங்களுள் ஒன்றாகும். சுஹாரி, மண்டோலி ஆறுகள் கோவாவின் பாதுகாப்பு ஆரண்களாகத் திகழ்கின்றன. இவற்றின் கிளையாறுகள் கோவாவின் நிலப்பரப்பில் 69 % பகுதியை வளப்படுத்துகின்றன.

கோவா 40 - க்கும் மேற்பட்ட கழிமுகங்களையும், எட்டு கடல் துருத்துகளையும், தொண்ணூறு ஆற்றிடை துருத்துகளையும் கொண்டுள்ளது. (துருத்துகள் - நீரால் முன் தள்ளப்பட்ட மேட்டுப் பகுதி) கோவா ஆறுகளின் மொத்த பயணத்தொலைவு 253 கி.மீ. ஆகும். கோவாவில், "கடம்பா' அரச மரபினரால் கட்டப்பட்ட 300 - க்கும் மேற்பட்ட பழமையான குளங்களும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணம் வாய்ந்த நீரூற்றுகளும் உள்ளன.

கோவாவின் பெரும்பகுதி மண்ணானது இரும்பு, அலுமினியம் கலந்த கூட்டுப்பொருளால் ஆன சிவந்த நிறமுடைய களிமண்ணாகும். எஞ்சியுள்ள நிலப்பகுதி மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் பெரும்பாலும் வண்டல்மண் மற்றும் செம்மண் ஆகியவை உள்ளன.

இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான பாறைகள் சில கர்நாடகாவுடன் இணைந்த கோவாவின் எல்லைப் பகுதிகளான "மோலெம்' மற்றும் "அன்மோட்' இடையே கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் 3600 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த டிராண்ட் ஜெமிடிக் கடினப் பாறைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கோவா தன் புவிப்பரப்பில் 33- க்கும் மேற்பட்ட பகுதியில் அரசாங்கக் காடுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் ஏறத்தாழ 62% பகுதிகள் வனவிலங்கு சரணாலயங்கள் ஆகும். கோவா மாநிலத்தின் "போண்டிலா' வனவிலங்கு சரணாலயம், "மொலம்' வனவிலங்கு சரணாலயம், "கோட்டிகோ' வனவிலங்கு சரணாலயம், "மேடி' வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. மேலும், சோரோ தீவில் சலீம் அலி பறவைகள் சரணாலயம் உள்ளது.

இவை தீவிர கணிசமான நிலப்பரப்பில் தனியாருக்குச் சொந்தமான காடுகள் மற்றும் முந்திரி, மாமரம், தென்னை மரங்கள் அடங்கிய பரந்த நிலப்பரப்பும் உள்ளது. மொத்த புவிப்பரப்பில் 56.6 % காடுகள் மற்றும் தோப்புகளாகவே உள்ளன.

சுற்றுலா!

கோவா சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகும். அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளில் 12 % பேர் கோவாவிற்கே வருகின்றனர். 125 கி.மீ. நீளமுள்ளஅழகிய கடற்கரைப் பகுதியும், அடர்ந்த காடுகளும், சரணாலயங்களும், தோப்புகளும் அவர்களை வசீகரிக்கின்றன. முக்கியமாக "கலக்குட்' கடற்கரை மற்றும் "கண்டோலிம் கடற்கரை மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

சுரங்கங்கள்!

கடற்கரை நீங்கிய பிற நிலப்பரப்பில் கிடைக்கும் கனிம வளம் நிறைந்த சுரங்கங்கள் இரண்டாவது பெரிய தொழிலாகும். இரும்புதாதுக்கள், பாக்சைட், மாங்கனீசு, களிமண், சுண்ணாம்புக்கல் மற்றும் சிலிக்கா ஆகியவை முக்கிய கனிம வளங்களாகும்.

அகுவாடா கோட்டை!

இக்கோட்டை 1613 - ஆம் ஆண்டில் கட்டப்பட்ட போர்ச்சுகீசியக் கோட்டை ஆகும். "சிங்கு வெரிம்'கடற்கரை அருகே "மண்டோலி' ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ளது. டச்சு மற்றும் மராட்டியப் படைகளிடமிருந்து பாதுகாக்கவும், இக்கோட்டை கட்டப்பட்டது. கோட்டையின் மேற்குப் பகுதியில் உள்ள நன்னீர் ஊற்றின் மூலம் கப்பல்களுக்கு நீர் வழங்கினர். இதனாலேயே இக்கோட்டைக்கு, "அகுவாடா' என்ற பெயர் ஏற்பட்டது. "அகுவா' என்பது நீரைக்குறிக்கும் சொல். இங்கு ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது. 2, 376, 000 காலன் தண்ணீரைச் சேமிக்கும் வசதி இக்கோட்டையில் இருந்தது. அகழி, வெடிமருந்துக் கிடங்கு பீரங்கிகள் மற்றும் ரகசிய சுரங்கப் பாதையும் கொண்ட கோட்டை இது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

பனாஜி!

கோவா மாநிலத்தின் தலைநகர். 1961 முதல் 1987 ஆம் ஆண்டுவரை இந்திய ஆட்சிப்பகுதியாக (யூனியன் பிரதேசம்) இருந்த கோவாவின் தலைநகரமாகவும், பிறகு கோவா மாநிலமாக ஆக்கப்பட்ட பிறகு அதன் தலைநகரமாகவும் விளங்குகிறது.

சப்போராக் கோட்டை

இக்கோட்டை கோவாவில் உள்ள பர்தேசு பகுதியில் உள்ளது. 1617 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சப்போரா ஆற்றின் கரையில் உள்ளது.

திராக்கோல் கோட்டை!

திராக்கோல் ஆற்றின் கழிமுகத்திற்கு அருகில் உள்ளது. 17 - ஆம் நூற்றாண்டில் சாவந்த்வாடி மன்னர்"கென்சாவந்த் போன்சுலே' என்பவரால் கட்டப்பட்டது. ஆற்றின் வடகரையில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. 1746 - ஆம் ஆண்டு இது போர்ச்சுகீசியர் வசம் வந்தது. 1825 - இல் போர்ச்சுகீசியருக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் இக்கோட்டையில் நடந்தது. தற்போது இக்கோட்டை ஒரு சுற்றுலா விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.

கோல்வா கடற்கரை!

தெற்கு கோவாவில் வெண்மணலுடன் காணப்படும் கடற்கரை இது. 2.4 கி.மீ தூரம் கொண்டது.

அகோண்டா கடற்கரை தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை இது. அகோண்டா குன்றின் அருகில் உள்ளது. 2011 - ஆம் ஆண்டு, இந்திய அரசு ஆமைகள் பாதுகாப்பிற்காக நான்கு தளங்களை அறிவித்துள்ளது. அந்த நான்கு தளங்களில் அகோண்டா கடற்கரையும் ஒன்று. அகோண்டா குன்றின் மறுபுறம் "கோலா கடற்கரை' என்ற பெயரில் மற்றொரு கடற்கரையும் உள்ளது. இங்கு ஒரு உப்பங்கழியும் இருக்கிறது. அமைதியான எழில் மிகுந்த கடற்கரை இது.

தொடரும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.