மரங்களின் வரங்கள்!: துப்பாக்கி குண்டு மரம் -  பாலா மரம் 

நான்தான் பாலா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "மனில்காரா ஹெக்ஸான்ட்ரா' என்பதாகும்.
மரங்களின் வரங்கள்!: துப்பாக்கி குண்டு மரம் -  பாலா மரம் 

குழந்தைகளே நலமா?

நான்தான் பாலா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "மனில்காரா ஹெக்ஸான்ட்ரா' என்பதாகும். நான் சபோடசி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது அறிவியல் பெயரிலுள்ள "ஹெக்ஸான்ட்ரா' என்பது என் பூவில் ஆறு மகரந்தத் தண்டுகள் இருப்பதைக் குறிக்கிறது. எனக்கு மஞ்சப் பாலா, உலக்கைப் பாளை என்ற வேறு பெயர்களும் உண்டு. 

இந்தியா, மலேசியா, ஆஸ்திரோலியா முதலிய நாடுகளிலும், பசிபிக் கடலிலுள்ள சில தீவுகளிலும் நான் அதிகம் காணப்படுகிறேன். குறிப்பா, மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதி, குஜராத், காந்தேஷ் பகுதிகளிலுள்ள உலர் காடுகள், தென்னிந்திய தீபகற்பப் பகுதி ஆகிய இடங்களில் என்னை நீங்கள் காணலாம்.  

குழந்தைகளே! உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. ஏன்னா என் பழத்தை நீங்கள் கண்டிருக்கக்கூட மாட்டீர்கள். என் பெருமைகள் உங்கள் தாத்தா, பாட்டிக்குத் தெரியும். அவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில், பள்ளிக்கு அருகில்  என் பழங்களை விற்பார்கள். அதை உங்கள் தாத்தா, பாட்டி வாங்கி  வாங்கி உண்பதைக் கண்டு நான் மகிழ்ந்திருக்கிறேன்.

நான் நம் தமிழ்நாட்டில் வளர்ந்து மக்களுக்குப் பல நன்மைகளை அளித்திருக்கிறேன். காரைக்குடி பகுதியில் மிகுதியாக நான் வளர்ந்திருந்து, அங்கு வாழும் மக்களுக்குப் பல பயன்கள் தந்திருக்கிறேன். ஆனால், இப்போது நினைக்கும்போது அழுகைதான் வருகிறது. 

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை வனப் பகுதியில் நான் அதிகம் காணப்படுகிறேன். அதற்குக் காரணம், அந்த வனப்பகுதி அமைந்திருக்கும் இடம், கடற்கரையோரம் மூன்று திசைகளிலும் கடல் சூழ வெப்ப மண்டல எல்லைக் கோட்டில் அமைந்துள்ளதுதான். வேதாரண்யம் கடற்கரைப் பகுதியிலும் என்னை நீங்கள் காணலாம். அப்பகுதி வாழ் மக்கள் என்னை "அந்தமான் துப்பாக்கிக் குண்டு மரம்' என்று அழைப்பாங்க. 

என் இலைகள் மிகவும் பசுமையாக, தடித்த தோலுடன் முட்டை வடிவத்தில், நுனிப் பகுதி அரை வட்டமாக இருக்கும். என் மரத்தில் நிறைய முடிச்சுகள் இருக்கும். சிறு கிளைகள் உருவாகி, உதிர்ந்த பின் இப்படி முடிச்சுகள் ஏற்படும். நான் டிசம்பர், ஜனவரி மாதத்தில் வெண்மை நிறத்துடன் பூப்பேன். பின்பு, நீண்ட உருளை வடிவில் 1.5 செ.மீ. அளவில் காய்கள் உருவாகும். அவை பழமான பின் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இதுதான் நீங்கள் விரும்பி உண்ணும் பாலா பழமாகும். 

இது இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையைத் தரும். என் பழத்தைக் காய வைத்து உண்டால் சுவை மிகும். பாலா பழம் பழுப்பது அவ்வளவு அரிதானது குழந்தைகளே. அதனால்தான், "நித்தம் பழுக்காது பாலா' என்ற பழமொழி உருவாகிறது. என் பழத்தில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புகளும், சத்துகளும் நிரம்பியுள்ளன. நீர், புரதம், கொழுப்பு, மாவுப் பொருள்கள் ஆகிய சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டின் ஏ-வாக கரோடின், தையாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் சி-யாக அஸ்கார்பிக் அமிலம் உள்ளன. 

நான் நீடித்து உழைக்க கூடியவன் என்பதால் அக்கால மக்கள் உலக்கைகள், கரும்பு அரவைச் செக்குகள், எண்ணெய் செக்குகள், வீட்டு உத்திரம், தூண்கள், இதர கட்டுமானப் பொருள்கள், வேளாண் கருவிகள் செய்ய என்னைத்தான் பயன்படுத்தினார்கள்.    என் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம். இந்த எண்ணெய்யை "ராயன்' எண்ணெய் என்று சொல்வாங்க. என் பட்டையை வெந்நீரிலிட்டு அருந்தினால் காய்ச்சல் பட்டென்று ஓடிவிடும். உடலும் பலம் பெறும். 

என் இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுத்தால்  விரும்பி உண்பாங்க. என் பிசினிலிருந்து மருந்துப் பொருள்கள் தயாரிக்கிறாங்க. என் பட்டையில் 10 சதவீதம் டானின் உள்ளதால், தோல் பதனிட நான் பெரிதும் உதவுகிறேன். நான் இருக்கும் பகுதிகளில் 800 மில்லி அளவு மழைப் பொழிவும் இருக்கும். என் மென் பகுதி, பழுப்பான சிவப்பு அல்லது கருமையாக இருக்கும். வைரப் பகுதி சிவப்பாக இருக்கும். ஒரு கன மீட்டர் மரத்தின் எடை 1119 எடை என்பதை எண்ணும் போது, என் பலத்தை நீங்கள் புரிந்து கொள்ளுங்களேன். 
மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 

(வளருவேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com