
கிராமப்புற குளம் ஒன்றில் தவளைகள் கூட்டமாக வசித்து வந்தன. ஒரு நாள் அந்தத் தவளைகள் குளத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வயல் வெளிக்குச் சென்றன. அங்கு சில எருமை மாடுகள் கூட்டமாக நின்று புல் மேய்ந்து கொண்டிருந்தன.
பெரிய வயிறு, கொம்புகளுடன் கூடிய தலை ஆகிய தோற்றத்துடன் இருந்த எருமைகளைப் பார்த்து தவளைகள் பயந்து போயின. அடேங்கப்பா... இவ்வளவு பெரிய உருவமா? அதற்கு இவ்வளவு பெரிய வயிறா? என்று தவளைகள் அதிசயித்தன.
பின்னர் அந்தத் தவளைகள் தங்களின் குளத்துக்குத் திரும்பின. அங்கிருந்த மற்ற தவளைகளிடம் புல்வெளியில் தாங்கள் பார்த்த எருமை மாடுகள் குறித்து அதிசயமாகப் பேசிக்கொண்டன.
ஒரு தவளை சொன்னது. "அட, எவ்வளவு பெரிய உருவம்... அதன் கொம்புகள் பயமுறுத்தும் வகையில் இருந்தது'
உடனே இன்னொரு தவளை, "ஆமாம் ... நீ சொல்வது சரிதான்... அந்த எருமைகளுக்கு முன்பு நாம் ஒரு கொசுவைப் போல ரொம்ப சாதாரணமாக இருக்கிறோம்'.
அப்போது ஒரு தவளை மற்ற தவளைகளைப் பார்த்து "நீங்கள் நினைப்பது போல நாம் குறைந்தவர்கள் அல்ல. அந்த எருமையைப் போல பெரிய உருவத்தை என்னால் எடுக்க முடியும்' என்று ஆணவத்துடன் கூறியது.
அதோடு நில்லாமல் தனது வயிறு நிறைய காற்றை நிரப்பி, பெரிதாக்க முயன்றது. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றில் காற்றை நிரப்பி பெரிதாக்கிக் கொண்டே இருந்தது அந்தத் தவளை.
ஒவ்வொரு முறையும் அந்தத் தவளை தனது வயிற்றை பெரிதாக்கும் போதும், எருமை மாட்டின் வயிறு இந்த அளவு இருக்குமா?' என்று கேட்டது. அதற்கு மற்ற தவளைகள், "இல்லை... இதைவிட பெரியதாக இருக்கும்' என்று கூறின. இதனால் அந்தத் தவளை மேலும் மேலும் காற்றை தனது வயிற்றில் நிரப்பியது. அப்போது அதன் வயிறு திடீரென வெடித்து, அந்தத் தவளை பரிதாபமாக இறந்தது.
நீதி : இயற்கைக்கு விரோதமாக தன்னை மாற்ற முயன்றால் அது ஆபத்தில்தான் போய் முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.