

காட்சி -1
இடம்: மரக்கிளை
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்
(மரத்தில் அமர்ந்திருந்த இரண்டு காகங்கள் பேசிக் கொண்டிருந்தன.)
காகம் 1: மனிதர்கள் போடறதை சாப்பிட்டு நீயும் மனிதர்கள் போல பாரபட்சம் காட்ட ஆரம்பிச்சுட்டே.
காகம் 2: நான் எப்ப பாரபட்சம் காட்டினேன்?
காகம் 1: சுமதி வீட்டு முற்றத்திலே தட்டிலே வைத்தது எது இருந்தாலும் போய் சாப்பிடறே. ஆனால், மாலதி தட்டிலே எதைப் போட்டு வைத்திருந்தாலும் சாப்பிடறதில்லை. இது பாரபட்சம் இல்லையா?
காகம் 2: நான் சொன்னால் உனக்குப் புரியாது. நாளையிலிருந்து நீ மாலதி வீட்டுத் தட்டுலே போட்டு இருக்கிறதை சாப்பிட்டுப் பார்.
காட்சி - 2
இடம்: மரக்கிளை
காலம்: மறுநாள்
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்
காகம் 1: சாதம் நல்லா வெந்திருந்தது. பதார்த்தம் எதுவும் இல்லை.
காட்சி - 3
இடம்: மரக்கிளை, காலம் : இரண்டாவது நாள்
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்
காகம் 1: ஐய்ய்ய.... சாதம் ரொம்ப பழைய சாதம். தண்ணீரோட இருந்தது. பொரியல் நிறைய வைத்திருந்தாங்க. சாதம் நல்லா இல்லையே! பொரியல் சாப்பிடலான்னு ஆசையா எடுத்தா ஒரே உப்பு. சாப்பிடவே முடியலை.
காட்சி - 4
இடம்: மரக்கிளை, காலம் : மூன்றாவது நாள்
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்
காகம் 1: இன்றைக்கு தட்டிலே சாப்பிட ஒன்றுமே வைக்கலை. தட்டு சாப்பிட்ட தட்டு மாதிரியே இல்லை. நன்றாக துடைத்து வைத்த மாதிரி இருந்தது.
காகம் 2: இப்ப நீ மூன்று நாள் சுமதி வீட்டுத் தட்டில் போட்டு வைத்திருக்கிறதை சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லு.
காட்சி - 5
இடம்: மரக்கிளை
பாத்திரங்கள்: இரண்டு காகங்கள்
நேரம் : மூன்று நாள்களுக்குப் பிறகு காகம் 1: எல்லா நாளும் தட்டிலே சூடான சாதம் இருந்தது. கொஞ்சம் பொரியல், இல்லைனா சாம்பார் இருந்தது. சாப்பாடு நல்லா இருந்தது.
காகம் 2: இப்போ புரியுதா உனக்கு? மாலதி காக்கைக்கு சாப்பாடு போடணுங்கிற எண்ணத்திலே தட்டுலே சாப்பாட்டை வைக்கவில்லை. அவங்க சாப்பிட்டு மிஞ்சிப் போனதை தட்டுல அப்படியே வைக்கிறாங்க.
காகம் 1: அதனாலதான் சில நாளைக்கு சூடான சாப்பாடு, ஒரு சில நாள்களுக்குத் தண்ணீர்விட்ட பழைய சாதம்ன்னு இருக்கா?
காகம் 2: ஆமாம். பொரியலும் நம்ம சாப்பிடணுங்கிற எண்ணத்திலே வைக்கவில்லை. பொரியலில் உப்பு ரொம்ப அதிகம் ஆயிட்டதாலே, யாருமே சாப்பிட்டிருக்க மாட்டாங்க. அதனால எல்லாப் பொரியலையும் தட்டிலே வெச்சிட்டாங்க.
காகம் 2: சுமதி, மிஞ்சிப் போனதை காக்காய்க்குப் போட்டுடலாம்னு தட்டிலே சாப்பாடு வைக்கலை. நாம சாப்பிடறதை இன்னொரு ஜீவனுக்கும் கொடுக்கணுங்கிற தர்ம சிந்தனையில சாதம், பொரியல் அல்லது சாம்பார் காக்காய்க்குன்னு எடுத்து வைத்துவிட்டு அவங்க சாப்பிடறாங்க.
காகம் 1: இப்போ எனக்கு நல்லாப் புரியுது.
காகம் 2: சுமதி செய்யறது தருமம். அதனால அவங்க தட்டிலே போட்டு வைத்திருக்கிறதை சாப்பிட்டா, அவங்க செய்யற தருமத்தோட பலன் அவங்களுக்குப் போகும். அதனாலதான் அவங்க தட்டுல இருக்கிறதை சாப்பிடறேன்.
காகம் 1: நீ சொல்றது சரிதான். மாலதி குப்பைத் தொட்டியிலே போடறதுக்குப் பதிலாக தட்டிலே போட்டு வைக்கிறாங்க. காக்காய்க்கு உணவு போடணும்கிற தர்ம சிந்தனையிலே செய்யலை.
-திரை-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.