92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சந்திப்போம்...

தங்கங்களே வருக, வரங்கள் பல பெறுக!

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 3:06 pm

DIN


தங்கங்களே வருக, வரங்கள் பல பெறுக!
குழந்தைகளே நலமா?
ஒரு குட்டிக் கதையோடு உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன்!
நான் பூத்துக் குலுங்கி, காய், கனி தரும் ஓர் அழகிய மரமாக இருந்தபோது நடந்தது இது.
என் மரத்தின் கீழ் "அன்பு' என்ற பெயர்கொண்ட சிறுவனும், அவன் நண்பர்களும் அடிக்கடி வந்து விளையாடுவாங்க. அவன் அவ்வப்போது ஓய்வு நேரங்களில் என்னிடம் வந்து பேசுவான்.
ஒரு நாள், "எது வெல்லும், எது நிலைக்கும்?' என்று கேட்டான், நான், "வாய்மையே வெல்லும், நேர்மையே நிலைக்கும்' என்றேன். "பழக்க வழக்கங்களில் எது அழகியது?' என்றான். "நல்ல ஒழுக்கமே' என்றேன். "ஒரு தாளின் இரு பக்கங்கள் எவை?' என்றான். "ஒற்றுமையும், நட்பும்' என்றேன். "தங்கத்தைவிட விலை உயர்ந்த பொருள் எது?' என்றான். நான் "சத்தியம்' என்றேன்.
"எதைச் செய்யக் கூடாது?' என்றான். "பழிச் செயலையும், பாவச் செயலையும் செய்யக் கூடாது' என்றேன். "இறைவன் உறையும் இடம் எது?' என்றான். "உன் மனம்' என்றேன். "எது தெய்வீகம்?' என்றான். "அன்பே தெய்வீகம்' என்றேன். திகைத்து நின்றான் அன்பு.
அன்புவிடம் பல நற்பண்புகள் இருந்ததால், எனக்கு அவன் மீது கொள்ளைப் பிரியம். அவனும் என் மீது அன்பு காட்டினான். அவனுக்கு என் மீது ஏறி விளையாட ஆசை. அவன் ஆசையை அறிந்த நான் "வா அன்பு, என் மீது ஏறி விளையாடு' என்றேன். உடனே ஏறி விளையாடி, நான் தந்த காய், கனிகளைக் கடித்து, சுவைத்து உண்டான்.
அப்போது நான் மகிழ்ந்தேன். சில நேரங்களில் என் மர நிழலில் படுத்து உறங்குவான். அப்போதெல்லாம், அன்பு என்னிடம், "அழகிய மரமே! நீங்கள் எங்களுக்கு உண்டி, உடை, உறையுள், உறக்கம் மட்டும் கொடுக்கவில்லை. பிராண வாயு எனப்படும் உயிர்ச் சத்தையும் கொடுக்கிறீர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எங்களைக் கரம் பிடித்து இழுத்துச் செல்வது நீங்கள்தான் தாயே, நன்றித் தாயே' என்பான். என்னை அவன் "தாயே' என்று அழைத்தது என் இதயத்தைத் தொட்டது. இப்படிப் பல வருடங்கள் கடந்தோடின. நான் என் மகனைக் காணாமல் தவித்தேன்.
ஒரு நாள், பெரிய பையன் என்னருகில் வந்தான். அந்தப் பெரிய பையன் வேறு யாருமல்ல, நம் அன்புதான். நான் என் இலைகளை அசைத்து அவனுக்கு ஆசி தெரிவித்தேன். ஆனால் அவன் கவலையுடன் காணப்பட்டான்.
"மகனே, அன்பு ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? வா, என் மீது ஏறி விளையாடு' என்றேன். "தாயே, நான் என்ன இன்னும் சிறுவனா உன் மீது ஏறி விளையாட? எனக்குச் சில விளையாட்டுப் பொருள்கள் வாங்க வேண்டும், பணம் தேவை' என்றான்.
"ஓ அவ்வளவுதானா, என் காய்களையும், கனிகளையும் பறித்துக்கொள், விற்று பணம் சேர். ஆனாலும், ஒன்றை நினைவில் கொள். ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற புத்தரின் அருள் வாக்கை மறந்துவிடாதே' என்றேன். உடனே அவன், மரத்தில் காய்த்திருந்த பழங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டு சென்றான். பின் திரும்பி வரவேயில்லை. பல வருடங்கள் கழித்து ஒருவர் என் அருகில் வந்து நின்றார்.
நான் அவரை வியப்புடன் பார்த்தேன். அவர் முகத்தில் கவலை ரேகைகள் படித்திருந்தன. "நீங்கள் யார்?' என்று அவரிடம் கேட்டேன். "தாயே, என்னைத் தெரியவில்லையா? நான்தான் உங்கள் மகன் அன்பு' என்றார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் மீண்டும் பழைய ஞாபகத்திலேயே "விளையாடுவோமா?' என்று கேட்டேன்.
"தாயே, நான் இப்போது குடும்பஸ்தனாகி விட்டேன். என் குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டியுள்ளது. எனவே, எனக்கு ஒரு வீடு தேவை, நீ உதவுவாயா?' என்று கேட்டார் அன்பு.
"மகனே! என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்து உனக்கொரு வீடு கட்டிக்கொள். "பாவத்தின் தந்தை பேராசை' என்று கண்களைக் கசக்கியப்படி சொன்னேன். வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றார்.
"என்னை மறந்துவிடாதே மகனே, உனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பார்த்துச் செல்' என்றேன். பின், அவர் வரவேயில்லை. அவருக்காக, நான் காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதுதான் மிச்சம்.
ஒரு நாள் அன்பு என்னைக் காண வந்தார். அவர் சோகமாக இருந்தார். "மகனே, எங்கே போனாய்? ஏன் சோகமாக இருக்கிறாய்... என்னவாயிற்று உனக்கு?' என்றேன்.
"தாயே, என் மீன்பிடி படகு பழுதாகிவிட்டது, படகு இல்லாததால் மீன் பிடிக்க முடியவில்லை. எனக்கு வருமானமும் இல்லை. மனைவியும், குழந்தைகளும் பசியால் வாடுகிறார்கள்' என்றார்.
"கவலைப்படாதே மகனே! நானிருக்கிறேன், என் அடி மரத்தை வெட்டி எடுத்து, அழகான படகு செய்து பிழைத்துக்கொள்' என்றேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்த அன்பு, அப்படியே செய்தார்.
பின்னர் திரும்பி வரவில்லை. பல ஆண்டுகள் கடந்தன. அதோ, அங்கே வருவது யார்? தலையில் வழுக்கை, கண்களின் திரை, கூன் விழுந்து, தள்ளாடியபடி கைத் தடியை ஊன்றி நடந்து என்னருகே வருவது யார்? என்று நினைத்து, அவரைப் பார்த்தேன்.
அவர் என்னருகே வந்து, "தாயே, நான்தான் உன் மகன் அன்பு' என்றார். நான் திகைத்தேன்! "மகனே, உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லையே' என்றேன்.
"தாயே, காய், கனிகள் கொடுத்தாலும் அதை உண்ண எனக்குப் பற்கள் இல்லை. வீடு கட்டவும், படகு செய்யவும் எனக்கு சக்தியும் இல்லை. தாயே! எனக்கு இப்போது ஓய்வு தேவை' என்றார்.
"ஓ அப்படியா மகனே! இறந்து கொண்டிருக்கும் என் வேர்கள் மீது படுத்துக்கொண்டு நன்றாக ஓய்வெடு' என்றேன். அதைக் கேட்டு மகிழ்ந்த அன்பு, என் வேரின் மீது படுத்துறங்கினார். என் கண்களிலிருந்து கண்ணீர் துளி என் மகன் அன்புவின் மேல் பட்டுத் தெறித்தது. அதை அவர் உணரவேயில்லை. நான் அன்புக்காக ஏங்கி அவ்வப்போது அழுதுக் கொண்டேதான் இருக்கிறேன், மழையாக.
தங்கங்களே இங்கு வருக! எங்களிடமிருந்து வரங்கள் இன்னும் அதிகம் பெருக! உலகில் அன்பு வளரட்டும், அருள் செழிக்கட்டும். வாழ்த்துகள் குழந்தைகளே! உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.