சிறார்களின் ஆங்கில நூல்
ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுத் தருபவர் அல்ல; மாணவர்களுக்குள் இருக்கும் திறமையை அடையாளம் கண்டு, அந்தத் திறமை உலகம் அறியும் அளவுக்கு உயர்த்துபவர்.

ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுத் தருபவர் அல்ல; மாணவர்களுக்குள் இருக்கும் திறமையை அடையாளம் கண்டு, அந்தத் திறமை உலகம் அறியும் அளவுக்கு உயர்த்துபவர். இந்த வரிகளுக்கு உயிரோட்டமாகத் திகழ்கிறார்
வே. பெய்த் பியூலா.
சென்னை செட்டியாரகரம் நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், கல்வியோடு இலக்கியத்தையும் இணைத்து, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவுகிறார்.
அவரிடம் பேசியபோது:
'எம்.ஏ., பி.எட்., எம்.ஃபில். படித்த நான், 2010-ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். ஆங்கில மொழியைக் கற்பிப்பதுடன் நின்றுவிடாமல், அந்த மொழியின் வாயிலாக மாணவர்களின் சிந்தனை, கற்பனை, படைப்பாற்றல், தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் பணிபுரிகிறேன்.
'கிரியேட்டிவ் ரைட்டர்ஸ்' என்ற இணையதளத்தின் வாயிலாக ஏழு மாதங்கள் தினமும் ஆங்கிலக் கவிதைகளை எழுதியிருக்கிறேன். மாணவர்களின் எழுத்துத் திறனைக் கவனித்து, அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை அடையாளம் கண்டு, அவர்களையும் இணையதளத்தின் மூலம் தினமும் ஆங்கிலக் கவிதைகள் எழுத ஊக்குவித்தேன்.
எனது வழிகாட்டுதலால் ஆங்கிலக் கவிதைகளை ஹரிஹரன் (ஆறாம் வகுப்பு), கோகுல பிரியா, யாழினி (ஏழாம் வகுப்பு), உம்மு ஹபிபா, நித்யா ஸ்ரீ, கிருத்திக், பிரதீப் (எட்டாம் வகுப்பு) உள்ளிட்டோர் எழுதினர்.
மாணவர்களின் கவிதைப் படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அதை ஒன்றிணைத்து 'தி சிம்பொனி ஆஃப் ஹவர் டெய்லி ஸ்கிரிப்பிளிங்ஸ்' என்ற தலைப்பில் தனி நூல் உருவாக்கியுள்ளேன். இதோடு, எனது அன்றாட சிந்தனைகள், உணர்வுகள், வாழ்க்கைப் பார்வைகளை கவிதை வடிவில் பதிவு செய்துள்ளேன். எனது படைப்புகள் பின்னர் தொகுக்கப்பட்டு 'ஆன் அந்தோலஜி ஆஃப் மை டெய்லி மியுஸிங்ஸ்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இவ்விரண்டு நூல்களும் தருமபுரியில் கவித்தேடல் பதிப்பகம் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டன.
இதுதவிர, மாணவர்கள் சிலரின் ஆங்கிலக் கவிதைகள் சில இதழ்களிலும் வெளியாகியுள்ளன. ஒரு மாணவன் எழுதிய முதல் கவிதை, அவனது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக மாறலாம். அந்த முதல் கவிதைக்கு ஆசிரியர் அளிக்கும் அங்கீகாரம், எதிர்காலத்தில் அந்த மாணவனை ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாக்கக் கூடும்' என்கிறார் பெய்த் பியூலா.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் வீ.நளினாவிடம் பேசியபோது:
'பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில், பள்ளி ஆசிரியர்கள் திறம்படச் செயயாற்றி வருகின்றனர். சென்னை
மாநகரத்தின் 'கவிதையும் கானமும்' என்ற எஃப்.எம். வானொலி நிகழ்ச்சி, சிங்கப்பூர் எஃப்.எம். வானொலி நிலையமான 'பொழில் பண்பலை' நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன. 'எழுதுக' அமைப்பின் பள்ளி மாணவர்களை நூலாசிரியராக்கும் திட்டத்தில், எங்கள் பள்ளி மாணவர்கள் 11 பேர் நூல்களை எழுதியுள்ளனர்.
மாணவர்களைப் போட்டித் தேர்வுகளில் தயார்படுத்துவதற்காக, 'என்.எம்.எம்.எஸ்.' என்ற பெயரில் கணித ஆசிரியை கோ.பாமா வாட்ஸ் ஆப் குழு ஒன்றைத் தொடங்கி, நாள்தோறும் பொது அறிவு கேள்வி- பதில்களைப் பதிவிட்டு வருகிறார். இதோடு, அவர் யூ டியூப்பிலும் எளிய முறையில் கணிதம் குறித்து நாள்தோறும் குறுங்காணொலிகளை வெளியிட்டு வருகிறார்' என்கிறார் வீ.நளினா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





