இளைஞர் இசை நடனத் திருவிழா
சென்ற வாரம் சுப்பிரமணியம் என்ற இளம் மிருதங்கக் கலைஞரின் அரங்கேற்றம் நடைபெற்றபோது, அமெரிக்காவில் என்ஜினீயரிங் படிக்கும் ஓர் இளைஞர்- ராமகிருஷ்ண மூர்த்தி- இசை நிகழ்ச்சி வழங்கினார். மிருதங்கம் அரங்கேற்ற


சென்ற வாரம் சுப்பிரமணியம் என்ற இளம் மிருதங்கக் கலைஞரின் அரங்கேற்றம் நடைபெற்றபோது, அமெரிக்காவில் என்ஜினீயரிங் படிக்கும் ஓர் இளைஞர்- ராமகிருஷ்ண மூர்த்தி- இசை நிகழ்ச்சி வழங்கினார். மிருதங்கம் அரங்கேற்றம் செய்த சுப்பிரமணியனும் அமெரிக்காவில் பள்ளி மாணவர்தான். ராமகிருஷ்ண மூர்த்தியின் பாட்டுக்கும், சுப்பிரமணியனின் மிருதங்க வாசிப்புக்கும் பாராட்டுக்கள் நிறையவே இருந்தன.
இன்னொரு வாய்ப்பாட்டுக்கார இளைஞர் அனிருத் இசை நிகழ்ச்சியிலும் கணிசமான அளவு ரசிகர்களும் இளம் இசைக் கலைஞர்களும் வந்திருந்தார்கள்.
""உங்களுக்குத் தெரியாதா? அனிருத் அமெரிக்காவில் இசை பயின்று வருகிறார்!'' என்றார்கள்.
அனிருத்துக்கு நல்ல குரல் வளம். எளிதாக மூன்று நிலைகளிலும் சஞ்சாரம் செய்தார். நாட்டக் குறிஞ்சி ராக ஆலாபனையில் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி பாடினார். நிரவலுக்குப் போகாமல் நேராக சுவரப்பிரஸ்தாரத்துக்குப் போனது நேரமின்மை குறித்துத்தான் என்று தெரிந்தது. வயலின் வாசித்த ராஜீவ் கைதேர்ந்த கலைஞராக இருந்தார். இவரும் இளைஞர்தான்.
இப்போது அமெரிக்காவிலிருந்து வந்து பாடுகிறார் அல்லது மிருதங்கம் வாசிக்கிறார் என்றால் கொஞ்சம் கூடுதலாகவே கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது!
டி.எம்.கிருஷ்ணாவும் பாம்பே ஜெயஸ்ரீயும் சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் இளைஞர் இசைக் கழகமான ஒய்.ஏ.சி.எம்.முடன் இணைந்து இளைய தலைமுறையினருக்காக நடத்திய நிகழ்ச்சியை இந்த ஆண்டும் ஆறு நாட்களுக்கு அமர்க்களமாக நடத்துகிறார்களாம்.
முதல் இரண்டு நாட்கள் கலாஷேத்திரா அரங்கிலும், அடுத்த இரண்டு நாட்கள் சென்னை அரசு இசைக் கல்லூரி வளாகத்திலும் கடைசி இரண்டு தினங்கள் மியூசிக் அகடமி வளாகத்திலும் இந்த "சுவானுபவா' இசை-நடன நிகழ்ச்சிகள் இளைய தலைமுறையினருக்காகவே நடத்தப்படுகின்றன.
இசை-நடனத்துறைகளில் இப்போது நிறையவே இளம் கலைஞர்கள் இடம் பிடித்து வருகிறார்கள். அவர்களின் நிகழ்ச்சிகளுக்குக் கூட்டமும் வருகிறது. அந்தக் கூட்டத்தில் இளைய ரசிகர்கள் கணிசமாகப் பங்கு கொள்கிறார்களா? பங்கு கொள்ளவில்லை என்றால் ஏன்? அப்படியானால் இந்தப் பாரம்பரிய இசைக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல கலைஞர்கள் இருந்தாலும் கூட, இளைய ரசிகர் கூட்டத்தை இப்போது முதலே தயார் செய்யாவிட்டால், இந்த இசையைக் கேட்பவர் யார்? நடனத்தைப் பார்ப்பவர் யார்?
"சுவானுபவா' வாயிலாக, கிருஷ்ணாவும் ஜெயஸ்ரீயும் புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்க முனைந்திருப்பது வரவேற்க வேண்டிய முயற்சி.
தஞ்சாவூர் உபேந்திரன் நினைவு நிகழ்ச்சியாக ஓர் இசை நிகழ்ச்சி நடந்தது. மிருதங்கக் கலைஞராக இருந்த உபேந்திரன், நல்ல சிந்தனையாளரும் கூட. அவர் எழுதிய ஒரு கட்டுரையை, சிறு நூலாக எல்லா ரசிகர்களுக்கும் வழங்கினார்கள்.
தலைப்பு: "இன்றைய இசைக் கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம்.' தனி ஆவர்த்தனம் ஆரம்பிக்கும்போது ஏன் சில ரசிகர்கள் வெளிநடப்புச் செய்கிறார்கள் என்று கட்டுரையில் அலசியிருக்கிறார்.
"முன்பெல்லாம், அதாவது சென்ற தலைமுறை காலம் வரை, லயத்தில் மகா மேதைகளாக விளங்கிய ஸ்ரீமான்கள் தட்சிணாமூர்த்தி பிள்ளை, கொன்னக்கோல் பக்கிரியா பிள்ளை, அழகநம்பி பிள்ளை, பழனி சுப்பிரமணிய பிள்ளை போன்றவர்களும் இன்னும் சக்ரவர்த்தியாக விளங்கி வரும் ஸ்ரீமான் பாலக்காடு மணி அய்யர் அவர்களும் வாசித்த கச்சேரிகளில் 2 அல்லது 3 தனி ஆவர்த்தனங்களும் தவிர, சில அபூர்வ தாளங்களில் வரும் திருப்புகழுக்கும் கூட அந்த அந்தத் தாளங்களின் சிறப்பியல்புகளில் சிறுசிறு லய வின்யாசங்களும் செய்து மக்களையும், கலைஞர்களையும் மகிழ்வித்து, தாங்களும் ஆத்ம திருப்தி அடைந்திருக்கின்றனர்'' என்று குறிப்பிட்டிருக்கிறார் உபேந்திரன்.
"கச்சேரி ஆரம்பித்து சுமார் ஒரு மணிநேரம் ஆன சமயத்தில் சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் ஒரு தனி வாசிக்க வருவது என்ற ஒரு "புதிய பந்தா'வைக் கையாள ஆரம்பித்தால் இந்த மாதிரியான நிலைகளுக்கு எல்லாம் அவசியமே வராது என்பதுடன் மெயின் வித்துவான், ஏனைய சகவித்துவான்கள், ரசிகர்கள் இவர்கள் யாவருக்கும் கச்சேரியின் ஹெவியான பகுதியின்போது கூட ஒரு மாறுதலும் ஆறுதலும் கிடைக்கக் கூடும்' என்கிறார்.
லயம் என்பது தந்தையின் நிலையை வகிக்கிறது என்கிறார் உபேந்திரன்.
(சுருதி- தாயின் நிலையை வகிக்கிறது என்பார்கள்) எனவே இதற்கு இழுக்கு நேர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தினால் மட்டுமே இந்த யோசனையைத் தந்து விட்டுச் சென்றிருக்கிறார் உபேந்திரன்.
கலையில் ஆர்வமும் ஈடுபாடும் அக்கறையும் கொண்ட எல்லா கலைஞர்களும் ரசிகர்களும் ஏகோபித்து இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி ஆவன செய்வார்களாக!' என்று முடித்திருக்கிறார் உபேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...