பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஒரே நேரத்தில் 20 எம்.ஜி.ஆர்.!

""ரசிகர்கள் என்றாலே விசிலடிப்பவர்கள்; நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்பவர்கள் என்ற கருத்து உள்ளது.   ஆனால் ரசிகர்களில் பலர் சிறந்த சமூக சேவை செய்பவர்களாக உள்ளனர். சிறந்த வாழ்க்கைமுறையைக்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:12 am

ந. ஜீவா

""ரசிகர்கள் என்றாலே விசிலடிப்பவர்கள்; நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்பவர்கள் என்ற கருத்து உள்ளது.

  ஆனால் ரசிகர்களில் பலர் சிறந்த சமூக சேவை செய்பவர்களாக உள்ளனர். சிறந்த வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பவர்களாக உள்ளனர். அவர்களைப் பற்றிய நெகடிவ் பார்வை மாற்றப்பட வேண்டும்'' என்கிறார் கிராவிட்டி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த விஜயகுமார்.

  இந்த நிறுவனம் ரசிகர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும்விதமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை "ரசிகன்' என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சியில் வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான விஜயகுமாரையும், இயக்குநர் மணிவண்ணனையும் சென்னையில் உள்ள அவர்களுடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

  ""ரசிகர்கள் என்றால் வெட்டியாகப் பொழுது போக்குபவர்கள், உருப்படாதவர்கள் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த ரசிகர்களால்தான் தமிழ்த் திரையுலகமாகட்டும், இதர கலைகளாகட்டும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. எனவே ரசிகர்களைக் கெüரவப்படுத்தும்விதமாகத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்று நீண்டகாலமாகவே நினைத்திருந்தோம். அதில் உருவானதுதான் "ரசிகன்' நிகழ்ச்சி.

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் இசைக் கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் போன்றோரின் ரசிகர்கள்தாம்.

  இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று நினைத்தவுடனேயே நானும், நிகழ்ச்சியின் இயக்குநர் மணிவண்ணனும் முதலில் சந்தித்தது நடிகர் ரஜினிகாந்த்தையும் கமல்ஹாசனையும்தான்.

  அவர்கள் உடனே, "இது நல்ல ஐடியா, நிச்சயம் வெற்றியடையும், அவசியம் செய்யுங்கள்' என்று உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் தந்த உற்சாகத்தால் இன்று ரசிகன் 50 வது எபிசோடை அடைந்துவிட்டது'' என்கிறார் மகிழ்ச்சியுடன் விஜயகுமார்.

  ""அதற்குப் பின்பு தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப் பயணம் செய்து பல நடிகர்களின் ரசிகர்களைச் சந்தித்துப் பேசினோம். அதன்பின்பு முதல் நிகழ்ச்சியாக ரஜினிகாந்த் ரசிகர்கள் பங்கு கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஐம்பதாவது நிகழ்ச்சியாக எம்.எஸ்.விஸ்வநாதனின் ரசிகர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. ஐம்பதாவது நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனே முக்கியப் பிரமுகராகக் கலந்து கொண்டார்'' என்று தொடர்ந்தார் மணிவண்ணன்.

  ""இந்த நிகழ்ச்சியை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ரசிகன் நிகழ்ச்சியில் பங்கு பெறும் ரசிகர்கள், அவர்கள் யாருக்கு ரசிகராக இருக்கிறாரோ அவரைப் பற்றி நன்கு தெரிந்துவைத்திருக்கிறாரா என்பதை அறிவதற்காக கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

  அதற்குப் பின்பு ரசிகர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவரும் விதமாக அவர்களுக்குப் பாட்டுப் போட்டி, நடனப் போட்டி போன்றவற்றை  நடத்துகிறோம்.

  நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர் ரசிகர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி ஒன்றும் உள்ளது. அவருடைய கேள்விகளுக்கு ரசிகர்கள் பதிலளிக்க வேண்டும்.

  இறுதியில் போட்டிகளில் வென்ற ரசிகர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இதுதான் "ரசிகன்' நிகழ்ச்சி'' என்ற மணிவண்ணனிடம், நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள்? என்று கேட்டோம்.

  ""இளையராஜா ரசிகர்களின் நிகழ்ச்சிக்கு அவருடைய ரசிகராக வந்தவர்களில் பின்னணிப் பாடகர் மனோ, பாடகி ஜென்ஸி ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ரசிகர்கள் வந்தனர். பல பெரிய மருத்துவர்கள், சாஃப்ட்வேர் என்ஜினியர்கள், உயர் பதவியிலிருப்பவர்கள் வந்தனர். பலர் இளையராஜாவைத் தெய்வம்போல நினைக்கிறார்கள்.

  எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். போன்ற உருவ அமைப்புக் கொண்ட சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் 20 எம்.ஜி.ஆரைப் பார்த்ததும் அசந்து போய்விட்டோம்.

  நடிகர்களின் ரசிகர்களில் பலர் அவர்களுடைய ரசிகர் மன்றங்களின் மூலமாக ரத்ததானம் போன்ற பல சமூக சேவைகளைச் செய்கிறார்கள்.

  கமல்ஹாசன் ரசிகர் ஒருவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். "கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்' என்று கமல் அவரிடம் சொல்லியிருக்கிறார். அந்த ரசிகர் அதன்பின்பு மிகக் கடுமையாக உழைத்து இன்று வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிட்டார்.

  இவற்றையெல்லாம் ரசிகர்கள் "ரசிகன்' நிகழ்ச்சியில் கூறும்போது அவர்கள் மீது நிகழ்ச்சியைப் பார்க்கிறவர்களுக்கு மரியாதை ஏற்படுகிறது.'' என்கிறார் பெருமையாக.   இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ரசிகர்களைத் தேர்வு செய்வது கடினமல்லவா? என்ற கேள்வியைப் போட்டு வைத்தோம்.

""அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அடுத்த நிகழ்ச்சியைப் பற்றி தொலைக்காட்சியில் நாங்கள் அறிவித்தவுடனேயே ஏராளமான ரசிகர்கள் எங்களிடம் தொடர்பு கொள்வார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். நாங்கள் அவர்களுடைய குரல்வளம், நடனத்திறன் போன்றவற்றை ஆராய்வோம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களைத் தேர்வு செய்வோம். இந்த நிகழ்ச்சியில்தான் ஏராளமான ரசிகர்கள் அவர்களாகவே ரொம்ப ஆர்வத்துடன் கலந்து கொள்வதைப் பார்க்கிறோம்'' என்கிறார் தயாரிப்பாளர் விஜயகுமார்.

  அடுத்து? என்றோம்.

  ""இப்போது "ரசிகன்' நிகழ்ச்சி ஐம்பதாவது எபிசோடைத் தாண்டிவிட்டது. அடுத்து கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்களின் ரசிகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம்'' என்கிறார் சிரித்துக் கொண்டே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.