நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கலாமின்கனவு!

இன்றைய இயந்திரமயமான காலத்தில் சொந்த வேலையைச் செய்யவே நேரம் போதவில்லை என புலம்புபவர் மத்தியில், தன் ஓய்வில்லாத மருத்துவப் பணிகளுக்கு இடையே சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று செயல்பட்டுவருகிறார்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:35 pm

வி.குமாரமுருகன்

இன்றைய இயந்திரமயமான காலத்தில் சொந்த வேலையைச் செய்யவே நேரம் போதவில்லை என புலம்புபவர் மத்தியில், தன் ஓய்வில்லாத மருத்துவப் பணிகளுக்கு இடையே சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று செயல்பட்டுவருகிறார் டாக்டர் தங்கம். கலாமின் உயரிய திட்டமான எடை குறைந்த காலிப்பர்களை (செயற்கைக் கால்கள்) பலரின் முயற்சியுடன் இலவசமாக வழங்கி வருகிறார் கடையநல்லூர் கோல்டன் பிரிஸ் அரிமா சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் தங்கம். கடையநல்லூரில் மருத்துவராகப் பணியாற்றி வரும் டாக்டர் தங்கத்தை அவரது இல்லத்தில் சந்தித்தோம்...

எடை குறைந்த காலிப்பர்களை இலவசமாக வழங்க நினைத்தது எப்போது?

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஒருமுறை ஹைதராபாத்திலுள்ள "நிம்ஸ்' மருத்துவமனைக்கு சென்ற பொழுது, கலாமை அங்கிருந்த காலிப்பர் பிரிவுக்கு அம்மருத்துவமனை மருத்துவர் நரேந்திரநாத் அழைத்துச் சென்றாராம்.

 அப்போது, அங்கிருந்த குழந்தைகள் காலிப்பர்களை அணியாமல் கழற்றி வைத்திருந்தனவாம். காரணத்தை கேட்ட பொழுது அவற்றின் எடை 3 கிலோ என்பதால் தூக்கி நடக்க சிரமம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தார்களாம்.

 இதனையடுத்து எடை குறைந்த காலிப்பர்களை கலாம் சிலரின் துணையுடன் வடிவமைத்து வழங்கினார். இதனை அணிந்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதனை கேள்விப்பட்டவுடன் இது போன்ற காலிப்பர்களைத் தமிழகம் முழுவதுமுள்ள பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

எடை குறைந்த காலிப்பர்களை வடிவமைத்தவர்கள் யார்?

அப்துல்கலாமின் எண்ணத்திலும், இந்திய பாதுகாப்பு துறையைச் சேர்ந்த விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, ஹைதராபாத் "நிம்ஸ்' மருத்துவர் டாக்டர் நரேந்திரநாத் ஆகியோரின் வடிவமைப்பிலும் சீரிய முயற்சியிலும்தான் இந்த காலிப்பர்கள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

நீங்கள் வழங்கும் காலிப்பர்களின் எடை எவ்வளவு? காலிப்பர்களை யார் ஸ்பான்சர் செய்கிறார்கள்?

முன்பெல்லாம் இந்த காலிப்பர்கள் 3 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டன. ஆனால் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் காலிப்பர்கள் 300 கிராம் எடை மட்டுமே உள்ளவை.

 இதனை தயாரிக்க 1500 ரூபாய் செலவாகிறது. இதனை இந்திய மருத்துவக் கழக தமிழ்நாடு கிளை, அரிமா சங்கங்கள், எல்.ஐ.சி. மற்றும் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இலவசமாக வழங்கி வருகின்றன.

 இது வரை எத்தனை பேருக்கு வழங்கியுள்ளீர்கள்?

 இதுவரை திருநெல்வேலி, கோயம்புத்தூர், பரமக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, சென்னை ஆகிய பகுதிகளிலுள்ள 5200 பேர்களுக்கு இந்த காலிப்பர்களை இலவசமாக வழங்கியுள்ளோம். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாமே கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கியதுதான்.

 மற்ற காலிப்பர்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

 கான்பூரிலுள்ள "அலிம்கோ' வில் இருந்து வரும் "ப்ரோ' கிட்டைக் கொண்டு இது உருவாக்கப்படுகிறது. இதனால்

குறைந்த எடை என்றாலும் நல்ல திடத்துடன் இருக்கும். மேலும் காற்றும் எளிதாக உட்செல்லும். எலாஸ்டிக் மற்றும் ஸ்பிரிங்க் தன்மை உள்ளதாலும், காலில் புண்கள் ஏற்படாத வகையில் தயாரிக்கப்படுவதாலும் பல மணி நேரம் தொடர்ந்து சிரமமின்றி இதனை அணிய முடியும்.

உங்களின் இந்த சேவைக்கு யார் உதவுகிறார்கள்?

இத்திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறப்பு விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை, நிம்ஸ் மருத்துவர் நரேந்திரநாத், விஞ்ஞானி மயூங்க்திவேதி, தலைமை நுட்பவியலாளர் வெங்கடேஷ், மருத்துவர் ராய், இத்திட்டத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளரும் எனது கணவருமான டாக்டர் மூர்த்தி உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துணை புரிந்து வருகின்றனர்.

மேலும் மாவட்ட ஊனமுற்றோர் அலுவலர்கள், அரிமா உறுப்பினர்கள், இந்திய மருத்துவ கழகத்தினர் ஆகியோர் முகாம்கள் தோறும் இலவசமாகப் பணியாற்றி வருவதுடன், காலிப்பர்கள் பொருத்தப் பட்ட பின்னரும் அதை கண்காணிக்கும் பணியையும் சேவை

மனப்பான்மையுடன் செய்து தருகின்றனர்.

உங்கள் இலக்கு?

இன்னும் 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் காலிப்பர்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை சிறப்பாகச் செய்து வருவதற்காக அப்துல்கலாம் எங்களுக்கு விருது வழங்கியது சந்தோஷமான தருணம். இதை எனது வேகத்தை அதிகப்படுத்துவதற்காக வழங்கப்பட்ட பரிசாக கருதுகிறேன்.

காலிப்பர் தேவைக்கு யாரை அணுகலாம்?

இது போன்ற காலிப்பர்கள் தேவைப்படுபவர்கள் தங்கள் பகுதி அரிமா நிர்வாகிகள் மூலமோ அல்லது நேரடியாக நெல்லையில் உள்ள கோல்டன் பிரிஸ் அரிமா சங்கத்திற்கோ தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.