

வயிற்றில் கரு சுமந்த நேரத்தில் கணவன் இறந்துவிட்டார். பிறந்த குழந்தைதான் தன் ஒரே வாழ்க்கைப் பிடிப்பாக நினைத்துக் கொண்டிருந்தார் அந்தத் தாய். ஆனால் பட்ட காலிலேயேதான் படும் என்பது இவருடைய வாழ்க்கையில் மீண்டும் ஒரு தரம் நிரூபணமானது. பிறந்த குழந்தைக்குக் காது கேட்கவில்லை, வாய் பேச முடியவில்லை... அந்தக் குழந்தையையே ஒரு சாதனைப் பெண்ணாக்கிக் காட்டுவேன் என்று சபதம் எடுத்தார். காது கேட்காத, பேச இயலாத அந்தக் குழந்தையின் கைகளிலும் கண்களிலும் இருந்த வித்தையை மெருகேற்றினார். அந்தப் பெண் இப்போது ஓவியத் தாரகையாக உலாவருகிறார். சாதனை செய்தது மகளா, தாயா? சென்னையை சேர்ந்த இந்த சாதனைத் தாய் உமாமகேஸ்வரியை ஈரோட்டில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பேசியதிலிருந்து...
தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் சென்னை கிளையில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறேன். பிறந்தது மதுரையில். வங்கிப்பணியில் இருந்த என் உறவினருக்கும், எனக்கும் கடந்த 1985-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.
எட்டு மாத கருவை வயிற்றில் சுமந்து கொண்டு ஓரிரு மாதங்களில் இரண்டு உயிர் மூன்று உயிராக போகிறது என்று சந்தோஷ கனவில் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இடியை விட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கணவரின் மரணம். சர்க்கரை நோயினால் படுக்கையில் விழுந்த கணவர், வயிற்றில் இருந்த சொந்தத்தை பார்க்காமலேயே மறைந்து போனார். அப் போது எனக்கு வயது 23. கணவரின் இறப்புக் குப் பிறகு பெற்றோர் என்னை மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 1986-ம் ஆண்டு டிசம்பரில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விதார்த்தி என்று என் பெற்றோர் பெயரிட்டனர். இந்நிலையில் சில நாட்களில் வாரிசு அடிப்படையில் அதே வங்கியில் எனக்கு கிளார்க் வேலை கிடைத்தது. முதலில் சேலம் பிறகு சென்னையில் பணியாற்றிய நான் அவ்வப்போது மதுரைக்குச் சென்று விதார்த்தியைப் பார்த்துவிட்டு வருவேன்.
எனக்கு மிகப்பெரிய ஆறுதல் விதார்த்திதான் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு வயதில் அவளுக்குத் திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ பரிசோதனையில் விதார்த்திக்குக் காதுகேட்கும், வாய்பேசும் திறன் இல்லை என்பது தெரியவந்தது. விதார்த்தி பள்ளி செல்லும் வரையில் வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாமல் இருந்தேன். இரண்டு வயதில் விதார்த்தியை சிறப்பு பள்ளியில் சேர்த்தேன். ஓவியம் வரைவதில் அப்போதே அவருக்கு ஆர்வம் இருந்தது. இரண்டாம் வகுப்பு வரை மதுரையில் படித்த விதார்த்தியை 3-ம் வகுப்புக்கு சென்னையில் சேர்த்தேன். பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றுவந்தபோதுதான் விதார்த்தியை இந்தச் சமுதாயம் போற்றும் அளவிற்கு மிகச்சிறந்த சாதனையாளராக உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பதவி உயர்வுகள் விதார்த்தியின் வெற்றிப் பாதைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று கருதி, எனக்கு பதவி உயர்வு எப்போதும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டேன். விதார்த்திக்கு தன்னம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காக 6-ம் வகுப்பில் சாதாரண பள்ளியில் சேர்த்தேன். மேலும் ஓவியத்தை முறையாக கற்றுக்கொள்ள சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்தேன்.
ஊதியத்தில் பெரும் பகுதி ஓவியம் வரையும் உபகரணங்கள் வாங்குவதற்கே செலவழிந்து விடுவதால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிப்புக்கு விதார்த்தியை மாநகராட்சி பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டில் பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்தபோது, தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் ஊனமுற்றோருக்கான பிரிவில் சிறப்பு பிரிவில் தேசிய அளவில் முதலிடத்தை பெற்றார். அப்போது குடியரசு தலைவராக இருந்த ஏ.பி.ஜெ.அப்துல்கலாமிடம் விதார்த்தி விருது வாங்கியுள்ளார். இதுபோல் கடந்த 2007-ம் ஆண்டில் பிளஸ் 2 படிக்கும் போது காமன்வெல்த் நாடுகள் அளவிலான ஓவிய போட்டியில் பங்கேற்றார் விதார்த்தி. இதில் 54 நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் இரண்டாம் இடத்தையும், ஆசிய நாடுகளுக்கிடையே முதல் இடத்தையும் பிடித்தார். தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இவரை வீட்டிற்கு அழைத்து பாராட்டியதோடு, இவரது 8 ஓவியங்களை கவர்னர் மாளிகையில் மாட்டிவைத்துள்ளார்.
உலகின் மிகச்சிறந்த ஓவியராக விதார்த்தியை உருவாக்க வேண்டும். தற்போது சென்னை அரசு கவின் கல்லுரியில் படித்து வரும் இவரை, லண்டனில் உள்ள ஓவியக் கலை கல்லூரிக்கு அனுப்பி படிக்கவைக்க வேண்டும் என்பது என் கனவு. நான் சம்பாதித்த பணம் முழுவதும் விதார்த்தி வரைந்த ஓவியங்களாய் உள்ளது. விதார்த்தி லண்டன் செல்வதற்கு தமிழக அரசு உதவவேண்டும். முதல்வரைச் சந்தித்து உதவி கேட்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடிதம் கொடுத்தேன். இதுவரை அழைப்பு இல்லை.
எப்படியும் என் மகளை லண்டன் அனுப்பி படிக்க வைப்பேன். உலகம் போற்றும் ஒரு சாதனைப் பெண்ணாக மிகவிரைவில் விதார்த்தி வருவார். பேரும் புகழும் சம்பாதிக்க வேண்டும். பிறகு தன் தந்தை பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி பிறர் படிக்க உதவ வேண்டும் என்பது தான் விதார்த்தியின் ஆசை' என்கிறார்.
ஊனமுற்ற குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்டு மன நோயாளிகளாய் உழன்று கொண்டிருக்கும் பெற்றோருக்கு மத்தியில், இந்த லட்சியத் தாயின் முயற்சி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் பெற்றோருக்குக் கண்டிப்பாக தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
திறமையாளர்களை ஊக்குவிக்கும் தமிழக முதல்வர், விதார்த்தி விஷயத்திலும் ஒரு நல்ல வழி காட்டுவார் என நம்புவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.