குயிலினியா?ஷுகரா?
இந்தக் காலத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் என்ன படிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டுப் பாருங்கள். எல்லாரும் கம்ப்யூட்டர் படிப்பேன். எம்பிஏ படிப்பேன், என்ஜினியருக்குப் படிப்பேன் என்று சொல்வார்கள்


இந்தக் காலத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் என்ன படிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டுப் பாருங்கள். எல்லாரும் கம்ப்யூட்டர் படிப்பேன். எம்பிஏ படிப்பேன், என்ஜினியருக்குப் படிப்பேன் என்று சொல்வார்கள். டாக்டருக்குப் படிப்பேன் என்று சிலராவது சொல்வார்கள். ஆனால் நான் பாடகியாவேன்; இசையமைப்பாளராவேன் என்று சொல் கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ருதிலயசுபிக்ஷா. பெயரிலேயே இசையை வைத்திருக்கும் அந்த 11 ஆம் வகுப்பு மாணவியிடம் பாடுவதில் ஆர்வம் வந்தது எப்படி? என்று கேட்டோம்.
""அம்மா சுமித்ரா விளம்பரப் படங்களுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தயாரிப்பு நிர்வாகி. அதனால் எனக்குச் சிறுவயது முதலே இசையுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது. ரிக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு அம்மா போகும்போது நான் இரண்டு மாத கைக் குழந்தை. பாட்டுத் தாத்தாவின் (எம்.எஸ்.விஸ்வநாதன்) பாட்டுக்கு நான் நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோதே கையைக் கையை ஆட்டுவேனாம். எனக்கு இசை
நன்றாக வருமென்று சொன்ன பாட்டுத் தாத்தா எனக்குப் பாட்டு கற்றுக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அவரே என் கையைப் பிடித்து ஆர்மோனியத்தை தொட வைத்து என் இசைப் பயிற்சியை ஆரம்பித்தும் வைத்திருக் கிறார். எனக்கு ஆறு வயது இருக்கும்போது பாட்டுத் தாத்தா என்னை அவருடைய கச்சேரியில் முதன்முதலாகப் பாட வைத்தார். பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களை அவர் கச்சேரியில் நான் பாடியிருக்கிறேன்.
"சுதி தப்பாம நல்லா பாடுறா. தொடர்ந்து பாட வையுங்க'என்று அவர் என்னைப் பாராட்டினார். அதற்குப் பின்பு நான்கு வயது முதலே குருவாயூர் ராஜம் என்கிற இசையாசிரியரிடம் நான் கர்நாடக சங்கீதத்தில் வாய்ப்பாட்டு கற்று வருகிறேன்.
அப்புறம் குழந்தை நட்சத்திரமாக விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது சிநேகா, ஜோதிகாவுடன் எல்லாம் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. விளம்பரப் படங்களுக்கும் பாடியிருக்கிறேன்.
படிப்பதில் ஆர்வமா? பாடுவதில் ஆர்வமா? என்று என்னைக் கேட்டால் பாடுவதில்தான் ஆர்வம் என்று சொல்வேன். அதிலும் எலக்ட்ரானிக் மியூசிக் புரடக்ஷனில் ரொம்ப ஆர்வம். இசையமைப்பதற்காக உள்ள லாஜிக் ப்ரோ, ப்ரோ டூல் ஆகியவற்றில் நானாகவே சொந்த முயற்சியில் பயிற்சி பெற்றிருக்கிறேன். அதன் பேஸிக் எனக்குத் தெரியும். இதுவரை 5 பாடல்களைக் கம்போஸ் பண்ணியிருக்கிறேன். இந்தக் காலத்தில் எல்லாரும் கம்ப்யூட்டர் படிக் கிறார்கள். ஆனால் எந்த ஃபீல்டும் காலத்தால் அழியாதது அல்ல. ஆனால் மக்கள் இருக்கும் வரை இசையை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அது காலத்தால் அழியாதது. அதனால் எனக்கு கம்ப்யூட்டரை விட இசையில் ரொம்ப ஆர்வம். இதனால் நான் நன்றாகப் படிக்கமாட்டேன் என்று நினைக்காதீர்கள். டென்த்தில் எந்தவிதக் கஷ்டமும் படாமல் 71 பெர்சன்ட் மார்க் எடுத்திருக்கிறேன். நான் இந்திப் பாடல்களையும் தெளிவாக உச்சரித்துப் பாடுவேன். காரணம் எனக்கு இரண்டாவது மொழியாக இந்தி உள்ளது. என்னுடைய தமிழ் உச்சரிப்பும் தெளிவாக இருக்கும். "சிலந்தி' படத்தில் பின்னணி பாடியிருந்தேன். அதற்கு மியூசிக் டைரக்டர் கார்த்திக்.
நான் பாடுவதைக் கேட்டு நடிகர் பாக்யராஜ், இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி எல்லாரும் பாராட்டியிருக்கிறார்கள். உதிரிப்பூக்கள் டைரக்டர் மகேந்திரன் என் பாட்டைக் கேட்டு "குயிலினி' என்றுதான் என்னை அழைப்பார். நடிகர் தனுஷ் அண்ணன் "சுள்ளான்' சூட்டிங்கின் போது நான் பாடுவதைக் கேட்டார். "இந்த வயதில் இவ்வளவு நல்லாப் பாடுறியே' என்று என்னைப் பாராட்டினார். அதற்குப் பின் என்னை "சுகர்' என்று கூப்பிட ஆரம்பித்தார்.
நான் ஒருமுறை "லைஃப் ஸ்டைல்' கடைக்குப் போயிருந்தேன். ஒரு வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தனுஷ் அண்ணனுக்கு கல்யாணம் ஆன புதிது. அவர் தனது மனைவியுடன் அங்கே வந்திருந்தார். அவர் என் பின்னால் வந்து நின்று நான் வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே அந்த வாட்ச்சை வாங்கி எனக்குப் பிரசென்ட் பண்ணினார்.
வருங்காலத்தில் நல்ல இசையமைப்பாளராக வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி வந்தால் என் கூடப் படிக்கிற என் ஃபிரண்ட்ஸ்களுக்குப் பாடுவதற்கு வாய்ப்புத் தர வேண்டும். என் ஃபிரண்ட்ஸ் முறையான இசைப் பயிற்சி இல்லாமலே நன்றாகப் பாடக் கூடியவர்கள்.
ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே! நான் இன்டர்நேஷனல் பாப் பாடகர்கள் பியான்சே, ஷக்கீரா ஆகியோரின் பரம ரசிகை. நான் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும்போது ஷக்கீராவின் இசை நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. முழு ஆண்டுத் தேர்வுக்கு இரண்டு நாட்களே இருந்தன. இருந்தும் மும்பைக்கு அவசரமாகப் பறந்தேன். அதுபோல் 9 வது படிக்கும் போது பியான்சே இசை நிகழ்ச்சிக்கும் போனேன். என் குடும்பத்தினர் எடுக்க விருக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் ஹாலிவுட்டில் நடக்கும் போது நான் அங்கே சென்று அவர்களைச் சந்திக்க வேண்டும். அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்பதே என் ஆசை '' என்கிறார் அந்த இளம் இசைப் புயல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...