நகர்வலம்: சாரி, ஒய்.ஜி.எம்!
ஒய்.ஜி.மகேந்திரனின் புதிய நாடகம் "வெங்கடா - த்ரீ'யில் கதை அம்சம் மிகவும் குறைவு என்பதால்தானோ என்னவோ, எதைச் செய்தாலும் சபா ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று செயற்கையாக நகைச்சுவைக் காட்சிகளைத் திணித்து சமாள


ஒய்.ஜி.மகேந்திரனின் புதிய நாடகம் "வெங்கடா - த்ரீ'யில் கதை அம்சம் மிகவும் குறைவு என்பதால்தானோ என்னவோ, எதைச் செய்தாலும் சபா ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று செயற்கையாக நகைச்சுவைக் காட்சிகளைத் திணித்து சமாளித்திருக்கிறார் சித்ராலயா ஸ்ரீராம். (அதற்கும் கைதட்டி ரசிக்கிறவர்கள் இருக்கிறார்கள்!)
வீட்டுக்கு வருகிற பணிப் பெண்ணை, மகள் - மாப்பிள்ளை முன்னாலேயே மாமனார் பார்த்து ஜொள்ளு விடுவதும், கட்டிப்பிடிப்பதும், ஆபீசில் லீவு கிடைக்க, மாமனார் இறந்துவிட்டார் என்று பொய் சொல்லிவிட்டு மாட்டிக் கொள்வதும்,ஒய்.ஜி.எம்.முக்குப் புதிதான நகைச்சுவையாக இருக்கின்றன போலும்.
க்ளோனிங் முறையில் இரண்டு வெங்கடாத்திரிக்களை உருவாக்கி (விஞ்ஞான நாடகமாச்சே!) ஒருவனை ஆபீசுக்கு வேலை செய்யவும், இன்னொருவனை டிவி சீரியல் எழுத வைப்பதும் வேண்டுமானால், புதுமையாக இருக்கலாம். ஆனால் அதில் "ஒன்பதை' வைத்து ஒரு பகுதியினரைக் கேலி செய்வதும், இன்னொன்றில் திக்குவாய் குறையுள்ளவர்களைக் கிண்டல் செய்வதும் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை. அதிலும் டாக்டர் ஆரோக்கியம் பாத்திரம்... வேண்டாம், வம்பே வேண்டாம்.
நகைச்சுவைக்காக மிகைப்படுத்தலை ஏற்கலாம். ஆனால் அது அளவுக்கு மீறி, ஆபாசத்தையும் எட்டும்போதுதான் ஏமாற்றம் ஏற்படுகிறது. ஒய்.ஜி.எம். போன்ற சிந்திக்கத் தெரிந்த நல்ல நகைச்சுவை நடிகர்கூட தரம் தாழ்வது தமிழ் நாட்டு மேடைக்கு நல்லதல்ல. சாரி, ஒய்.ஜி.எம்!
இசை ரசிகர் - "ராக சுதா' அமைப்பைத் தோற்றுவித்தவர், அமரர் எஸ்.வி.கிருஷ்ணன். அவருடைய நினைவாக நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் மூன்றை அவற்றின் தரத்துக்காக இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இளைய தலைமுறைப் பாடகிகள் எத்தனை வேகமாக முன்னேறி வருகிறார்கள் என்பதற்கு இவை எடுத்துக்காட்டாக இருந்தன.
ஐச்வர்யா வித்யா ரகுநாத் பாடிய "வினராத நாமனவி' (தேவகாந்தாரி), பரிபூர்ணகாமா (பூர்விகல்யாணி) ப்ரோவம்மா (மாஞ்சி), கஜவதனா (தோடி) நான்குமே பளிச்சென்று இருந்தன. குறிப்பாக சியாமா சாஸ்திரியின் "பரோவம்மா' மனதை நெகிழச் செய்தது. தோடியில் பாடிய "கஜவதனா' சாகித்தியத்தை எழுதியவர் எட்டையபுரம் அரசர் குமார எட்டேந்தீர பூபதி என்று தெரிவித்தார் என் நண்பர் கிருஷ்ணன்.
அம்ருதா வெங்கடேஷ் பெங்களூர்க்காரர். ஆனால் அங்கே எப்படியோ, தெரியாது. சென்னை ரசிகர்களை அப்படியே கவர்ந்து இழுத்து வைத்திருக்கிறார் என்பது மிகையில்லாத உண்மை. அன்று சுவாதித் திருநாள் தினம் என்பதால், அவர் பாடியவை எல்லாமே சுவாதித் திருநாள் எழுதியவையாக இருந்தன. "தோடி'யில் பதவர்ணமும், "ஹம்சத்வனி'யில் பாஹி ஸ்ரீபதேயும், "கானடா'வில் மாமவ சதாஜனனியும், 9-ஆம் நாள் நவராத்திரி கீர்த்தனையான "ஆரபி'யில் பாஹி பர்வத நந்தினியும், வித்தியாசமான ராகமான "லலித் பஞ்சமத்'தில் பரம புருஷமும், "சிம்மேந்திர மத்தியமத்தில் ராமராம குணசீமாவும், கச்சேரியின் தரத்தைத் தூக்கிப் பிடித்தன. மகாராஜா எழுதிய "அஜாமிளோபாக்யானம்' கவிதை நாடகத்தில் வரும் நாம சுதா ரசம் என்ற காபி ராகப் பாடல் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. தில்லானாவில், கல்யாணி, நீலாம்பரி, காபி என மூன்று ராகங்கள் கேட்கப் புதுமையாக இருந்தன.
பாரதி ராமசுப்பனின் பாடல் தேர்வுகள் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன. தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் என்று மூவர் தவிர, பெஹாக் ராகத்தில் கோபாலகிருஷ்ண பாரதியின் "ஆடும் சிதம்பரமோ'வும், பிலஹரி - வராளி - கமாஸ் ராகமாலிகையாக "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனும்; ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவிலிருந்து "அஞ்சாதே நெஞ்சே'வும் இடம் பெற்றன. (குரு பி.எஸ். நாராயண சுவாமி இதை கமாஸ் ராகத்தில் அமைத்துக் கொடுத்தாராம்.) தியாகராஜரின் சரஸ்வதி மனோஹரி ராகப் பாடல் "மாமவ ஜகதம்பா' அதிகம் கேட்காதது. தீட்சிதரின் லலிதா ராகப் பாடல் "ஹிரண்மயீம்' நெஞ்சைத் தொட்டது. கம்பீரம், கவர்ச்சி, நளினம் எல்லாம் பிணைந்த தோடி ராக ஆலாபனையில் பாரதி தன் கற்பனை வளத்தைக் குழைத்து வழங்கிவிட்டு, தியாகராஜரின் "தாசு கோவலன'வைத் தொடர்ந்தார்.
இளம் பாடகிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் சிறப்பாகப் பாடி விடலாம். ஆனால் பக்க வாத்தியங்களான வயலினும் மிருதங்கமும் கைகொடுக்கா விட்டால் கச்சேரி களை கட்டாது. வயலின் கலைஞர்கள் அம்ருதா முரளி, பத்மா சங்கர், அதிதி கிருஷ்ணபிரசாத்; மிருதங்க கலைஞர்கள் கணபதிராமன், ஈரோடு நாகராஜன், அர்ஜுன் கணேஷ் ஆகியோரின் பங்கும் இந்த இசைவிழாத் தொடரின் வெற்றிக்குக் காரணமாக இருந்தன.
திருமூலரின் திருமந்திரம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதுபோல் அருணகிரியாரின் திருப்புகழை யாராவது ஆங்கிலத்தில் பெயர்க்க முடியுமா?
""முடியும். ஆறு தொகுதிகள் வெளியாகிவிட்டன. ஏழும் எட்டும் அச்சில் இருக்கின்றன. 1327 பாடல்களையும் மொழி பெயர்க்க எனக்கு ஆறு வருடங்கள் பிடித்தன!'' என்று அலட்டிக் கொள்ளாமல் தெரிவித்தார் என்.கோபால சுந்தரம். இவர் "சிட்டி'யின் நண்பர். மணிக்கொடி கால எழுத்தாளர் மட்டுமல்லாமல், தி.ஜானகிராமன், லா.ச.ரா. என்று அத்தனை எழுத்தாளர்களோடும் நெருக்கமாகப் பழகியவர். அயல்நாடுகளில் பணியாற்றிவிட்டு, ஓய்வுக்குப் பின் சென்னை திரும்பியவர். இதை ஒரு சவாலாகவே ஏற்று முடித்திருக்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...