வெற்றியின் ரகசியம்!
சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் "ராணி மகா ராணி' நிகழ்ச்சியின் நாயகி மமதி. தன் வசீகர குரலால், அழகு தமிழில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரைச் சந்தித்தோம்.... ராணி மகா ராணி


சன் டிவியில் ஞாயிறு தோறும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் "ராணி மகா ராணி' நிகழ்ச்சியின் நாயகி மமதி. தன் வசீகர குரலால், அழகு தமிழில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரைச் சந்தித்தோம்....
ராணி மகா ராணி நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கேம் ஷோ. எல்லா பெண்களுக்குள்ளேயும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அதை வெளிக்கொண்டு வரவே இந்த கேம் ஷோ. சில பெண்களுக்குப் போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை மட்டும் இருக்கும்.
ஆனால்,வெற்றிபெறத் தெரியாது. அப்பொழுது அவர்களைச் சுற்றி இருப்பவர்களோ, அல்லது வேறு யாராவதோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அப்பெண்களின் மனது வேதனைப்படும்படி பேசிவிடுவார்கள். ஆனால் இந்த மேடையில் அதைப் போன்று எதுவும் கிடையாது.
அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கும். இதில் வெற்றி, தோல்வி என்ற இலக்கு இல்லாமல் சந்தோஷமாக விளையாடுவார்கள். ஒவ்வொரு பெண்ணும், பணமோ அல்லது பொற்காசோ வென்று செல்லுவார்கள்.
ஆக்கப்பூர்வமாக நாலு விஷயங்களைப் பேசி, சந்தோஷமாக விளையாடி, திருப்திகரமாக வீட்டுக்குப் போக வேண்டும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
சின்னத்திரையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?
தூர்தர்ஷன் மட்டும் இருக்கும் பொழுதிலிருந்தே சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி கொண்டுதான் இருக்கிறேன். தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை.
வேறு என்னென்ன நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகின்றீர்?
பிக் எஃப்.எம் வானொலியில் "பிக் வணக்கம்' என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கியிருக்கிறேன். இப்பொழுது ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதை தவிர விஜய் டிவியில் "சில்லுன்னு ஒரு சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியும் வழங்கி கொண்டிருக்கிறேன்.
சிறுவயது முதலே சின்னத்திரையில் இருக்கும் நீங்கள் பெரியதிரை பக்கம் போகாதது ஏன்?
பெரியதிரையில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு நடிப்பதில் ஈடுபாடு இல்லை. நிகழ்ச்சி தொகுப்பாளராகவோ, அல்லது பங்கேற்பாளராகவோ இருக்கத்தான் விருப்பம். அதனால்தான் நடிப்பதற்கு வருகிற வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி சாரோட படத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சின்னவயதில் இருந்தே அவரோட ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
தமிழ் ரசிகர்களைப் பொருத்தவரை மமதியின் குரலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது, அப்படியிருக்க பின்னணி குரலுக்கு நிறைய வாய்ப்புகள் வந்திருக்குமே?
தமிழ் சின்னத்திரையைப் பொருத்தவரை என்னையும் என் தமிழையும் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அது எனக்கு கடவுள் கொடுத்த வரம். பின்னணி குரலுக்கான வாய்ப்புகளும் நிறைய வருகின்றன.
குரலால் நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. சின்னத்திரையைத் தவிர ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துகிட்டு இருக்கிறேன். அதற்கு முழு நேரமும் செலவிட வேண்டியிருப்பதால் அதிகப்படியான நிகழ்ச்சிகள் வழங்க நேரம் கிடைப்பது இல்லை.
இந்தத் துறையில் பெண்கள் வெற்றி பெறுவது சுலபமில்லை என்று சொல்கிறார்களே அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
சினிமாத்துறை மட்டுமல்ல எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி என்று எடுத்து கொண்டாலே அது ஆடவராக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி பேராடினால்தான் வெற்றி கிடைக்கும்.
அதே சமயத்தில் தன்னுடைய எல்லையைத் தாண்டாமல் உழைக்கும் வரை பிரச்னைகள் எது வந்தாலும் எதிர்கொள்ளலாம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் திறமையிருந்தால் வெற்றி பெறுவதற்கு ஆண், பெண் வேறுபாடு எல்லாம் கிடையாது.
ஆண்களுக்குத்தான் ஜெயிப்பது கஷ்டம். புத்திசாலிதனமான பெண்களுக்கு அது சுலபம். வெற்றியை எப்படி வேண்டுமானாலும் அடையலாம் என்று நினைப்பவர்களும் உண்டு, இப்படித்தான் அடைய வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு. அது அவரவர் தனிப்பட்ட கொள்கை.
ஓரிரண்டு நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்தாலும் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதே அதன் ரகசியம் என்ன?
என் தமிழ் உச்சரிப்பைக் கேட்க பிடித்திருப்பதாக நிறைய பேர் சொல்கிறார்கள். நிகழ்ச்சி ரொம்ப இயல்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். அதுதான் வெற்றியின் ரகசியம் என்று நினைக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...