காந்தியமே இன்றைய தேவை!
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரிடமும் நன்மதிப்பையும் பல நேரங்களில் ஏச்சுகளையும் வாங்கியவர். தேர்தல் நேரம் என்றால் இவர்தான் ஹீரோ. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை,


ஆ ளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சியினரிடமும் நன்மதிப்பையும் பல நேரங்களில் ஏச்சுகளையும் வாங்கியவர். தேர்தல் நேரம் என்றால் இவர்தான் ஹீரோ. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்கள், 11 இடைத் தேர்தல்கள் என அனைத்தையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்.
பெரும் பிரச்னை வரும் என எதிர்பார்க்கப்பட்ட தேர்தல்களில்கூட தனது சாதுர்யமான "அகிம்சை' நடவடிக்கைகள் மூலம் அமைதியை ஏற்படுத்தியவர். தேர்தல் காலங்களில் வாக்குப் பதிவை வெப் காமிரா வழியாக கண்காணித்தது, எஸ்.எம்.எஸ். மூலம் வாக்கு சதவீத நிலவரங்களை அதிகாரிகளுக்கு விரைந்து தெரியச் செய்தது எனப் பல்வேறு நவீனங்களை தமிழக தேர்தல்களில் அமல்படுத்தியவர். ஆம்... அவர் வேறு யாருமல்ல. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா.
அரசியல் தலைவர்களின் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிய காலங்களில் அமைதி காத்து தனது பணியைத் திறம்படச் செய்தவர். நேர்மையான வழியில் தொடர்ந்து பணியாற்றி நிம்மதியாக தனது பதவியில் இருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றுள்ளார்.
காந்தியவாதி... காந்தியின் கொள்கைளைப் பின்பற்றுபவர் என்கிற இன்னொரு முகமும் குப்தாவுக்கு உண்டு. ஆடம்பர உடை அணிய விரும்பாதவர். காந்தியைப் போலவே எளிமையைப் பின்பற்றி வாழும் குப்தாவை சுதந்திரதினத்தையொட்டி சந்தித்தோம். அவரது பார்வையில் காந்தியத்தையும், அது இக்காலத்துக்கு பொருந்துகிறதா? என்ற கேள்வியுடன் அவரின் முன் அமர்ந்தோம். இப்போது, நரேஷ் குப்தா.
காந்தியத்தின் பால் ஈர்க்கப்பட்டது எப்போது?
மாணவப் பருவத்தில் இருந்தபோது, பள்ளியில் உள்ள எனது நண்பர்கள் காந்தியைப் பற்றியும் அவரது கொள்கைகளையும் பேசியிருக்கிறார்கள். அவரது எளிமை, பண்பு போன்றவை மாணவப் பருவத்திலேயே எனது மனதில் பதிந்துவிட்டது. இதன் நீட்சி நான் சென்னைக்கு வந்த பிறகும் தொடர்ந்தது. காந்தியக் கொள்கைகளை மேலும் கற்க வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே, 1994-1995-ம் ஆண்டில் காந்தியச் சிந்தனைகள் குறித்த பட்ட மேற்படிப்பை படிக்கத் தூண்டியது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ. காந்திய சிந்தனைகள் படிப்பைப் படித்தேன். சென்னை தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் மகாத்மா காந்தியடிகள் படிப்பு மையம் உள்ளது. அங்கு, காந்திய சிந்தனைகளுக்குரிய புத்தகங்கள் நிறைய உள்ளன.
எனது பட்ட மேற்படிப்புக்கு அது பெரிதும் உதவியது. இப்படியாக, என் மனதுக்குள் இருந்த காந்திய சிந்தனைகள் வெளிப்படத் துவங்கின.
உங்கள் பார்வையில் காந்தியம் என்றால்...?
காந்தி வலியுறுத்திய கொள்கைகளில் எனக்கு மிகவும் பிடித்தது, அமைதி-அகிம்சை. யாரையும் எந்த விஷயத்திலும் பழிவாங்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார். வன்முறை எண்ணத்துடன் செயல்பட்டால் ரத்தத்துக்கு ரத்தம் என்ற நிலை ஏற்படும்.
ஆனால், பழிவாங்கும் சூழல் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிகளவு உள்ளது. திருமண நிகழ்ச்சிக்கு ஒரு தலைவர் சென்றால், மற்றொரு முக்கிய தலைவர் அந்த நிகழ்ச்சிக்கு செல்லாமல் தவிர்க்கிறார். நடத்தை நன்நெறிகளைப் பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என மகாத்மா வலியுறுத்தினார்.
அவரும் இதைப் பின்பற்றினார். சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு யாரும் அவரைப் பின்பற்றவில்லை. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கட்சிகளின் வளர்ச்சிக்காக எந்த வழியையும் கையாளலாம் என்று நினைக்கின்றனர். இது, தவறான பாதைக்கு அவர்களை இட்டுச் செல்லும்.
இன்றைய சூழலில் காந்தியக் கொள்கைகள்
ஏற்புடையதா?
ஏற்புடையதுதான். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு நாம் நியாயமான வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான வழியில் முயற்சி செய்தால் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும்.
தேசியம், மாநிலம், மொழி, இனம் என நம்மைப் பிரித்து எல்லைகளை வகுத்துள்ளனர். மேடையில் பேசும்போது மட்டும் நாம் அனைவரும் ஒரே குடும்பம் எனப் பேசுகிறார்கள். இனம், ஜாதி, மொழியைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள தடைகளைத் தகர்த்து எறிய வேண்டும். அனைத்துத் தரப்பினருக்கும் சமமான மரியாதையை வழங்கிட வேண்டும்.
உலகில் வருமானமே பிரதானம் என்றாகி விட்டதே? இதில், காந்தியம் சாத்தியமா?
பொருளாதார வளர்ச்சி மட்டும் போதாது. மகாத்மா காந்தியடிகள் காட்டும் மனித நேயப் பண்பும், நேர்மையான வழியும் அவசியம். தர்மத்தை அதாவது நியாயமான வழியைப் பின்பற்றாவிட்டால் உலகில் அமைதி இருக்காது. எந்த வழியிலாவது அநியாயமாகச் சம்பாதித்தால் அதற்கு விலையாக நமது நிம்மதியையும் அமைதியையும் தர வேண்டியிருக்கும்.
மகாத்மா வலியுறுத்திய முக்கிய விஷயங்களில் ஒன்று பூரண மதுவிலக்கு. இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது?
சாதாரண ஏழை மக்கள் முதல் பல்வேறு தரப்பினரும் முன்பெல்லாம் கடைக்கு டீ, காபி குடிக்கச் செல்வார்கள். ஆனால், தினக்கூலிகள் உள்பட அனைவரும் இப்போது மதுக்கடைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டதே!
இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்குக் காந்திய வழிகளைப் போதிக்கும் வழி என்ன?
பள்ளிகளில் இப்போது நன்னெறி வகுப்புகள் போதிக்கப்படுகின்றன. இந்த வகுப்புகளுக்கான புத்தகங்களில் காந்திய சிந்தனைகளைச் சேர்க்கலாம். ஆனால், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்தச் சூழலால், காந்தியச் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பதவிகளில் உள்ள அரசின் உயரதிகாரிகளுக்கு காந்தியச் சிந்தனைகள்
அவசியமா?
சாதாரண பொது மக்களைக் காட்டிலும் அவர்களுக்குத்தான் அதிகம் இருக்க வேண்டும். காரணம், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள். சேவையாற்றும் பணியில் இருப்பவர்கள் ஆட்சி அதிகாரத்துடன் நடந்து கொள்ளக் கூடாது. இதைத்தான் காங்கிரஸ் கட்சியிடம் மகாத்மா அப்போதே வலியுறுத்தினார். ஆட்சிக்கு வந்து அதிகாரத்தைக் கைப்பற்றாமல் மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்று காங்கிரûஸக் கேட்டுக் கொண்டார். அது பயன்படாமல் போனது. இன்று அதிகாரத்தைக் கைப்பற்ற அனைவரும் நினைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...