நாட்டுக்குச் சேதி சொல்ல...!
ள்ளிப்பாலை நான் கொடுத்தா... தாய்ப்பாலுன்னு நீ குடிப்ப... முள்ளில்லாத ரோசாப்பூவே... மூச்சுமுட்ட நீ துடிப்ப... கண்ணே உன்னை கொன்னுபோட ஏ மனசு கேட்கலம்மா... காலமெல்லாம் காப்பாத்த என் மனசு துடிக்குதம்மா...


ள்ளிப்பாலை நான் கொடுத்தா... தாய்ப்பாலுன்னு நீ குடிப்ப... முள்ளில்லாத ரோசாப்பூவே... மூச்சுமுட்ட நீ துடிப்ப... கண்ணே உன்னை கொன்னுபோட ஏ மனசு கேட்கலம்மா... காலமெல்லாம் காப்பாத்த என் மனசு துடிக்குதம்மா... இந்தியா வல்லரசாகப் போவுதுன்னு சொன்னாங்கையா... இந்த நிலை நீடித்தால் எப்படித்தான் ஆவும் ஐயா...'' கோவை, சிவானந்தா காலனி சாலையின் நடுவே உள்ள பிளாட்பாரத்தில் வாகன ஒலியைவிட ஓங்கி ஒலிக்கிறது அந்தக் குரல் "தப்பு' இசையுடன். திரும்பிப் பார்த்தால் மிடுக்காய் பாடிச் செல்கிறார், நாகரிக உடையணிந்த இளைஞர். அவர் பெயர் பிரபாகரன். வீதி நாடகங்கள் நடத்துவதாக சொன்ன அவரை வழிமறித்தோம்; விவரம் கேட்டோம்.
நாடகம் என்றால் டிவியில் வரும் சீரியல் மாதிரியா...?
இல்ல...இல்ல... அது வேற. நாங்க நடிக்க மாட்டோம்; நிஜமாக வாழ்ந்து காட்றோம். இதில் லைட்ஸ் ஆன்... கேமிரா... ஆக்ஷன்... கட்... ஒன்ஸ்மோர்... இல்லீங்க. ஒன்லி ஒன் மட்டுமே... இடை இடையே விளம்பர இடைவேளை இல்லை... காசுக்காக கிளிசரின் போட்டு அழுது புலம்பும் வேலை இல்லை... பார்ப்பவர்கள் கண்ணில் இருந்துதான் தாரைதாரையாய் வரும் கண்ணீர்...
இந்த நாடகக் குழுவை எப்படி ஆரம்பித்தீர்கள்?
கோவையில் வேளாண் துறையில் நீர்வடிப்பகுதி சமூகவியலாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறேன். ஈழத்தில் இருந்து தாயகம் திரும்பிய மலையகத் தோட்டத் தொழிலாளி என் தந்தை. நான் சிறுவனாக இருந்த சமயம் ஊட்டியில் குடியேறினோம். அக்கம் பக்கம் இருந்தவர்கள் எங்களை அடையாளம் காட்ட உபயோகிக்கும் அடைமொழி "அகதிகள்'.
ஒருவரின் உணர்வுகளைப் பாதிக்கும் எந்த உரையாடலும் தவறு என்பது கூட அறியாத மக்கள் இந்த சமூகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்றே முடிவு செய்தேன், இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது என்று. 14 வயதிலேயே தொடங்கினேன், இந்த நாடகக் குழுவை. இதன் பெயர் "விடியல் வீதி நாடக் குழு'.
உங்கள் குழு பற்றி கொஞ்சம் சொல்லுங்க...?
எங்க குழுவில் ஆரம்ப காலத்தில் மொத்தம் 13 பேர் இருந்தாங்க. அப்போது பொருளாதார வசதி எதுவும் இல்ல. பள்ளி விடுமுறையில் நீலகிரித் தைல இலைகளைப் பொறுக்கி அதைக் கொள்முதல் மையத்துக்கு எடுத்துச் சென்று விற்றால் ஒரு கிலோவுக்கு 1.50 காசு கிடைக்கும். இப்படியாக 13 பேரும் தலா 10 கிலோவை விற்று கிடைக்கும் காசை வைத்து ஏதாவது ஒரு மலைக்கிராமத்துக்குப் போவோம்; அங்கு என்ன பிரச்னை என்பதை விசாரிப்போம்.
அங்குள்ள மரத்தடி அல்லது கோயில் வாசலில் எங்க குழு அமர்ந்து கிராம மக்கள் கூறிய பிரச்னை சம்பந்தமாக ஒரு நாடகத்தை உருவாக்குவோம். அன்று மாலையே ஊர் மத்தியில் உள்ள தெரு விளக்குக்குக் கீழ் கூடுவோம்.
இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, கையில் உள்ள தப்பை ஒங்கி அடித்தவாறே ""என்ன பேரோ... நாங்க எந்த ஊரோ...அண்ணன் தம்பி போல இங்க வாரோம்... கண்ணுமிருக்குது... காட்சியிருக்குது... கண்ணுக்குள் ஏதோ தூசி மறைக்குது... வீதி நாடகக் கலைஞர் நாங்கள்... அழைக்கிறோம் நல்ல சேதி சொல்றோம்...'' இப்படியாகப் பாடத் தொடங்குவோம்.
அந்த ஊர்ப் பிரச்னையை மையப்படுத்தி பாடி, நடித்துக் காட்டுவோம். நாடகம் முடிந்ததும் எங்களில் 4 பேர் இடுப்பில் உள்ள துண்டை கழற்றிவிட்டு மக்கள் கூட்டத்தில் திசைக்கு ஒருவராக சென்று அமர்வார்கள்.
கூட்டத்தில் நடுவில் நின்றபடி "இந்த நாடகத்தில் வந்த கதையை எங்காவது கேள்விப்பட்டது உண்டா'...? என்று அந்த மக்களை பார்த்துக் கேட்பேன். கூட்டத்திற்குள் இருக்கும் எங்கள் குழுவினர் கிராமவாசிகளின் உணர்வைத் தூண்டுவது போல் பதில் அளிப்பார்கள்.
நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவராகப் பேசத் தொடங்குவார்கள். கிராமவாசிகளை ஒன்றிணைத்து ஆலோசனை கூறி போராடச் செய்வோம். கிராமவாசிகள் விரும்பும்பட்சத்தில் 3 நாள் பயிற்சி கொடுத்து அதே ஊரில் ஒரு சிறிய நாடகக்குழுவை உருவாக்குவோம். இப்படியாக 40-க்கு மேற்பட்ட குழுக்களை உருவாக்கியுள்ளோம்.
யாரிடம் நீங்க பயிற்சி எடுத்துக்கொண்டீர்கள்...?
கல்லூரி நாட்களில் கோவைக்கு வந்தேன். முறையாக பயிற்சி எடுக்க கருப்பு அரங்கம் தேடல் கார்த்திக், ஜிப்ஸி ராஜ்குமார், பேராசிரியர் மு.ராமசாமி, அருட்தந்தை பிரிட்டோ, அருட்சகோதரி கிளேர் போன்றவர்களிடம் சென்னையில் பயிற்சி பெற்றேன். சென்னை வந்த போலந்து, ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வாழ்வு நிகழ்வு அரங்கம் நாடக பயிற்சியாளர்களிடமும் கற்றுக் கொண்டேன்.
தற்போதைய செயல்பாடுகள்...?
நாங்கள் எழுதிப் பாடி நடித்த பாடல்களை தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் உள்ளேன். தெரு நாடக வரலாறு கடந்து வந்த பாதை, தற்போதைய நிலை மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பயிற்சிகளில் உள்ள யுக்திகள் போன்றவற்றை புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன்.
அழிந்து வரும் கூத்து கலைஞர்களின் வாழ்வியலை தொகுத்து வருகிறேன். தமிழகம் தழுவிய வீதி நாடகக் கலைஞர்களை ஒருங்கிணைத்து "வாழ்வரங்கம்' என்ற அமைப்புக்கு அமைப்பாளராக செயல்பட்டு வருகிறேன்.
குழந்தை உரிமை, பெண்ணியம், ஆதிவாசிகளின் வாழ்வியல் போன்றவற்றை மையமாகக் கொண்டு சென்னை, சேலம், திருவள்ளூர், மதுரை போன்ற ஊர்களில் தெருப் பிரசாரம் செய்து வருகிறேன்.
பள்ளி, கல்லூரிகளில் கோடைக்கால வீதி நாடக பயிற்சிப் பட்டறைகள், நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களில் வீதி நாடகப் பயிற்சி, கதைக்கான கரு உருவாக்குதல், காட்சி அமைப்புகள், சத்தம் மற்றும் குரல் பயிற்சி, முகபாவனைகள், விழிப்புணர்வு பாடல் தயாரித்தல், கிராமிய ஆட்டம், தப்பாட்டம், கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம், எளிய முறை யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைக் கற்றுத் தருகிறேன்.
சமூக உணர்வுடன் செயல்படும் நாடகக்கலை வளர்க்கும் இளைஞரிடமிருந்து விடைபெற்றோம். அவர் தனது தெருப்பாடலைத் தொடர்ந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...