புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஐஸ்வர்யாராய்க்குக் கராத்தே கற்றுக் கொடுத்தவர்!

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டரிடமிருந்து போன். "" ஐஸ்வர்யாராய்க்கு கராத்தே கற்றுத் தர முடியுமா?'' கராத்தே ரமேஷுக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. சென்னை நுங்கம்பாக்கத்தில் "எந்திரன்' பட ஷூட்டிங்.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 pm

ந. ஜீவா

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டரிடமிருந்து போன்.



"" ஐஸ்வர்யாராய்க்கு கராத்தே கற்றுத் தர முடியுமா?'' கராத்தே ரமேஷுக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை.



சென்னை நுங்கம்பாக்கத்தில் "எந்திரன்' பட ஷூட்டிங். படத்தில் ரஜினி ஐஸ்வர்யாராய்க்கு கராத்தே சொல்லித் தருவார். உண்மையில் சொல்லித் தந்தது கராத்தே ரமேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் எனச் சுமார் 1200 படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்திருப்பவர் கராத்தே ரமேஷ். பல பிரபல நடிகர்களுக்குச் சண்டைக் காட்சிகள் டூப் போட்டிருக்கிறார்.



அது மட்டுமல்ல, வேலூரிலும், திருவண்ணாமலை, அரக்கோணம், சென்னை ஆகிய பகுதிகளிலும் 70 இடங்களில் கராத்தே பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வருகிறார். ஸ்டண்ட் நடிகரான அவரோ நம்மிடம் பேசியது மிகவும் மென்மையாக....

""சொந்த ஊர் வேலூர். 1982 இல் தைவானில் நடந்த அகில உலக கராத்தே போட்டியில் கலந்து கொண்டேன். எனக்கு அதில் தங்க மெடல் கிடைத்தது. அதைப் பற்றிச் செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. அப்போது அதைப் படித்த "சட்டம் ஒரு இருட்டறை' தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரம், அவர் அடுத்துத் தயாரிக்க இருக்கும் "நீறு பூத்த நெருப்பு' படத்தில் கதாநாயகனாக நடிக்க என்னைக் கூப்பிட்டார். கே.விஜயன் டைரக்டர்.

நான் அப்போது திருப்பதிக்குப் போய் மொட்டை அடித்திருந்தேன். நமக்கு எங்கே வாய்ப்புக் கிடைக்கப் போகிறது என்று போனேன். டோப்பாவெல்லாம் வைத்து மேக் அப் டெஸ்ட் பண்ணி என்னை நடிப்பதற்குத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அதில் நான் கதாநாயகனாக நடித்தேன். எனது தங்கையாக விஜயசாந்தி நடித்தார்.

படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை. அதற்குப் பின்பு "கொம்பேறி மூக்கன்',  "வேங்கையின் மைந்தன்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தேன். அதற்குப் பின்பு எந்த வாய்ப்பும்  வரவில்லை. அதனால் நான் சோர்ந்து போகவில்லை. ஸ்டண்ட் யூனியனில் மெம்பராகச் சேர்ந்தேன். அதன் பின்பு, நிறையப் படங்களில் ஸ்டண்ட் நடிகராக

நடித்துவிட்டேன்.

ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட நிறையக் கதாநாயகர்களுடன் நடித்துவிட்டேன். நான் டூப் போட்டு நடிக்காத பிரபல நடிகர்களே இல்லை எனலாம்.

ரஜினி சாருடன் பாபா படத்தில் நடித்த போது ஏற்பட்ட ஓர் அனுபவம் மறக்க முடியாதது. ரஜினி ஷூட்டிங் இடைவெளியில் ஓர் இடத்தில் தனியாக உட்கார்ந்திருந்தார். நான் அவரைப் பார்க்கப் போனேன். அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் அவரிடம் என்னைப் போகவிடாமல் தடுத்துவிட்டனர்.

அதைப் பார்த்த ரஜினிசார் அங்கிருந்து வந்து அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார். ""உங்களை ரெண்டு வருஷத்துக்கு முந்தித்தான் தெரியும். ஆனால் ரமேஷை ரொம்ப நாளாக எனக்குப் பழக்கம்'' என்றார். என்னை எப்போது பார்த்தாலும் எனது குடும்பத்தினரைப் பற்றி விசாரிப்பார். பெரிய சூப்பர் ஸ்டார் என்றாலும் அந்தப் பந்தா எதுவுமில்லாமல் பழகுவார் அவர்.

ஐஸ்வர்யாராய் அவ்வளவு சீக்கிரம் யாருடனும் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளமாட்டார். "எந்திரன்' படத்துக்காக அவருக்குக் கராத்தே கற்றுக் கொடுத்ததால் அவரை என்னைக் கூப்பிட்டுப் பக்கத்தில் நிற்க வைத்துப் போட்டோ எடுத்துக் கொண்டார். இது எனக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது.

"அசல்' ஷூட்டிங்கில் அஜித்துடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. "" பிற நடிகர்களைப் பற்றி நாம் பேசக் கூடாது. நாம் கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும். நமது திறமையை நிரூபிக்க வேண்டும்'' என்பார்.

மலையாள நடிகர் மோகன்லால், மம்முட்டியுடன் நிறையப் படங்களில் நடித்துவிட்டேன். மோகன்லால் சாருக்கு நிறையப் படங்களில் டூப் போட்டிருக்கிறேன். "நெ.20 மெட்ராஸ் மெயில்' படத்தில் ஒரு காட்சி. பாலத்திலிருந்து கீழே ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் குதிக்க வேண்டும். மாலையில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்ததும் வீட்டுக்குப் போக வேண்டிய மோகன்லால் சார் வீட்டுக்குப் போகவில்லை.

இரவு 12 மணி வரை அந்தக் காட்சி எடுத்து முடிக்கும் வரை அவர் காத்திருந்தார். ""ரிஸ்க் எடுக்க முடியும்னா செய்ங்க. இல்லேன்னா வேண்டாம்'' என்றார். நான் தைரியமாக நடித்து முடித்ததைப் பார்த்த பின்புதான் வீட்டுக்குப் போனார்.

மம்முட்டி சாரிடம் ஒரு பழக்கம். வீட்டிலிருந்து வரும் உணவுகளை எங்களைப் போன்ற எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவார்.

கராத்தேயைப் பொருத்தவரை நான் சிறுவயது முதலே ஆர்வமாக இருக்கும் ஒன்று. நான் பிறருக்குப் பயிற்சி அளிப்பது, ஜப்பான் சிட்டோரியோ கராத்தேயைத்தான். சமீபத்தில் 2 மாதங்களுக்கு முன்பு ஜப்பானுக்குப் போய்விட்டு வந்தேன். ஒரு மாதம் அங்கு கூடுதல் பயிற்சி பெற்றேன்.

என்னைப் போலவே எனது மகன் மகேஷ்வரனும் கராத்தே வீரர். அவர் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். எனது கராத்தே பள்ளிகளை அவர் நிர்வகித்து வருகிறார்.

என்னைப் பொருத்தவரையில் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று கிடைக்காத வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பது தவறு. நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு எதுவோ அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் "நீறு பூத்த நெருப்பு' படத்தில் கதாநாயகனாக நடித்தேன்.

ஆனால் அதற்குப் பின்பு எனக்குக் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதற்காக நான் மனம் சோர்ந்து போகவில்லை. ஸ்டண்ட் நடிகராக என்னை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டேன்.

இன்று திரையுலகில் உள்ள பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.