நியூட்டனின் மூன்றாவது விதி!
எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் அதனைச் சளைக்காமல் சொல்லிக்கொடுப்பார்கள். அவர் எண்ணத்தைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம்.


காலை 5மணி. அலாரம் வைத்து எழுந்து பல் தேய்த்து பூஸ்ட் குடித்தும் குடிக்காமலும் ஓடி டியூஷன். பிறகு வந்து குளித்துச் சாப்பிட்டு பள்ளி. மாலை பள்ளி முடிந்தவுடன் அங்கேயே ஒரு டியூஷன். வீட்டுக்கு வந்து கை, கால் முகம் கழுவி டிபன் சாப்பிட்டு கணக்குக்குத் தனியா ஒரு டியூஷன். இப்படிப் படித்தும் மதிப்பெண் வருவதில்லை. இந்த பள்ளியும் சரியில்லை. வேறு பள்ளிக்கு மாத்தணும் என்று அலுத்தும் கொள்ளும் பெற்றோர்களே... உங்கள் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
கோவை மாநகராட்சியில் அண்மையில் நடந்த உள்ளாட்சி விழாவில் மேயர், துணைமேயர், துணை ஆணையர், மண்டலத் தலைவர்கள், மாவட்ட கல்வி அதிகாரி, கல்வி குழுவினர், கவுன்சிலர்கள், எனச் சூழந்திருந்தது விழா மேடை. கரகோஷத்தில் அரங்கம் அதிர மேடை ஏறிய அந்த மாணவ, மாணவியர் குழுவின் கையில் மின்னியது வெற்றிக் கோப்பை. அவர்கள் மேடையைவிட்டு கீழே இறங்கிய பின்னரும் கைத்தட்டல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.
பரிசு பெற்ற மாணவர்களை நெருங்கினோம். தலையில் எண்ணெய்த் தேய்த்து நேர் வகுடெடுத்து நேர்த்தியாய் தலைவாரி ரிப்பன் வைத்து இரட்டை ஜடை போட்டு பிரகாசித்தது. அந்த மாணவிகளின் முகம் மட்டும்தான். சீருடையோ வெளுத்து நிறம் மாறி மங்கலாய்க் காட்சியளித்தது. அவர்களுடன் வந்த மாணவர்கள் நெற்றியில் விபூதியிட்டிருந்தனர். ஆனால் காலில் செருப்பில்லை. கணுக்கால்வரை இருக்கவேண்டிய பேன்ட் முக்கால் காலுக்குத் தொங்கிக் கொண்டிருந்தது. இந்தப் பரிசு மாணவர்களுக்காகக் கொடுக்கப்படுகிறது? என்றோம் ஒரு கல்வி அதிகாரியிடம், ""அசோக் லேலண்ட் மற்றும் சொசைட்டி ஆப் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனங்கள் இணைந்து நடத்திய அறிவியல் சார்ந்த பள்ளிகளிடையேயான போட்டியில் மாவட்ட அளவில் இரண்டு பள்ளிகளில் ஒன்றாகத் தேர்வாகி கடந்த மாதம் இம்மாணவர்கள் சென்னை சென்றனர். இறுதிப் போட்டியில் பங்கேற்ற 49 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மெட்ரிக் மற்றும் கான்வென்ட் பள்ளிகளைச் சேர்ந்தோர். ஒரே ஒரு பள்ளி மட்டும் மாநகராட்சி பள்ளி. அந்தப் பள்ளி மாணவர்கள்தான் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர். அவர்கள் வேறு யாருமில்லை கோவை உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்'' என்றார் அவர். ஆச்சரியமாகிப் போனது.
போட்டியில் வென்ற ஒரு மாணவியின் பெயர் கே.சௌமியா. இவரது தந்தை படிப்பு வாசனை அறியாதவர். ஒர்க்ஷாப்பில் கூலி வேலைக்குச் செல்கிறார். அடுத்து கே.சினேகா. இவரது தந்தை படிக்கவில்லை. மரம்வெட்டும் வேலைக்குச் செல்கிறார். தாய் கட்டட வேலைக்குப் போகிறார். ஆர்.தனலட்சுமியின் தந்தை தனியார் மருத்துவமனையில் அட்டண்டராக வேலை பார்க்கிறார். வி.சாக்கோ பினுவின் தந்தை தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்த நான்கு பேரும் சேர்ந்து கான்வென்ட் பள்ளி மாணவர்களைத் தோற்கடித்து இருக்கிறார்கள். அறிவியல் போட்டியில் இவர்கள் என்ன வித்தியாசமாகச் செய்தார்கள்?
நியூட்டனின் மூன்றாம் விதியை அடிப்படையாகக் கொண்ட ஓர் எளிமையான மாடல் "பலூன் பவர்ட் கார்'. காருக்குள் பலூனைப் பொருத்தி அதில் காற்றை அடைக்கின்றனர். பின்னர் காற்றை நாசில் மூலம் வெளியேற்றுகின்றனர். காற்றின் விசை பின்னோக்கித் தள்ளப்படும்போது எதிர் திசையில் கார் சீறிப்பாய்கிறது. இதனை மாணவர்கள் நான்கு பேரும் இயக்கிக் காட்டியபோது போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட எல்லோருமே அசந்துபோய்விட்டார்கள்.
""இந்த காரை இயக்கும் முறையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?'' என்று கேட்டபோது அந்த நான்கு பேரின் கையும் அவர்களுடைய இயற்பியல் ஆசிரியர் பி.சிவக்குமாரை நோக்கி நீண்டன.
""இயற்பியல் ஆசிரியர் கொடுத்த ஊக்கம்தான் காரணம். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் அதனைச் சளைக்காமல் சொல்லிக்கொடுப்பார்கள். அவர் எண்ணத்தைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம். பரிசு வென்றோம்'' என்றார்கள்.
இப்போது சொல்லுங்கள் பெற்றோர்களே... பள்ளியும் டியூஷனும் மட்டும்போதுமா மாணவர்களின் திறமையை வளர்க்க?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...