நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனிதர்களும் சிறுத்தைகளும்...

வால்பாறை பகுதியில் மனித-விலங்கு மோதல் தொடர்ந்து நடந்துவருகிறது. யானை, சிறுத்தை, கரடி ஆகியவற்றால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. குறிப்பாக வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:19 pm

எம். ஆனந்த்

வால்பாறை பகுதியில் மனித-விலங்கு மோதல் தொடர்ந்து நடந்துவருகிறது. யானை, சிறுத்தை, கரடி ஆகியவற்றால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. குறிப்பாக வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதில் சென்ற ஆண்டு 2 சிறுவர்கள் அடுத்தடுத்து சிறுத்தை தாக்கி இறந்தனர்.

சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அவற்றை கூண்டுவைத்துப் பிடித்து வனப்பகுதியின் வேறு இடத்தில் விடுகின்றனர். இந்த நடவடிக்கை தாற்காலிகத் தீர்வு மட்டுமே என்பது வனத்துறை அறியாததல்ல.  இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் அரசு, சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆய்வாளர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வால்பாறையில் நிலவும் சிறுத்தை பிரச்னைக்கான நிரந்தரத்தீர்வு பற்றி ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்

வைக்கின்றனர்.

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் க.காளிதாஸ்,""வால்பாறை உலகின் மிக முக்கிய உயிர்ச்சூழல் பகுதியான ஆனைமலையில் அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு இடையேதான் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. வனப்பகுதியில் பல நூறு ஆண்டுகளாக யானை, புலி, சிறுத்தை, கரடி, போன்றவை வாழ்கின்றன.

காடு வனவிலங்குகளின் வாழ்விடம். யானைகள் அதிக அளவில் வாழ்வதால்தான் இப்பகுதிக்கு ஆனைமலை என்ற பெயரே வந்தது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள காட்டை அழித்தே தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன; மனிதர்களும் பெருமளவில் குடியேறினர்.

விலங்குகள் வாழும் காட்டை ஒட்டித்தான் தற்போது மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். சிறுத்தை தாக்கி சிறுவர்கள் இறந்ததில் எல்லோருக்கும் மீளாத அதிர்ச்சி மற்றும் வருத்தம் உண்டு. ஆனால் சிறுத்தைகளின் இயல்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

காட்டில் உள்ள சிறு விலங்குகள் மட்டுமே சிறுத்தைகளின் உணவாகும். புலி போன்ற விலங்குகளைப் போலல்லாமல் சிறுத்தைகள் எல்லாச் சூழலிலும் தகவமைத்து வாழும் திறன் கொண்டவை. கேளை ஆடு, சருகுமான் போன்ற விலங்குகள் மட்டுமின்றி சிறு தவளைகளைக் கூட பிடித்து உண்டு அவை உயிர் வாழும்.

வால்பாறையில் சமீபத்தில் நடந்த சம்பவங்களை ஆய்வு செய்தபோது, தாக்கப்பட்ட சிறுவர்கள் குனிந்த நிலையில் ஏதோ விலங்குகள் என்ற அச்சத்திலேயே அந்தத் தாக்குதல் சிறுத்தைகளால் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது. மங்கிய ஒளியில் இருள் சூழ்ந்த வேளையில் தாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தன்னுடைய இரை விலங்கு என்று நினைத்தே சிறுவர்களை சிறுத்தைகள் தாக்கியுள்ளன என்பதே ஆய்வாளர்களின் கருத்து. கொல்லப்பட்ட சிறுவர்களைச் சிறுத்தை சாப்பிடவில்லை என்பது இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. சில சமயங்களில் புலியும் சிறுத்தையும் மனிதர்களை அடித்து உண்ணும் சம்பவங்கள் அரிதாக நிகழ்ந்தது உண்டு. அவை தொடர்ந்து மனிதர்களை மட்டுமே அடித்து உண்ணும் "மேன் ஈட்டர்கள்'. ஆனால் வால்பாறையில் அவ்வாறாக நிகழவில்லை.

மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்படுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் சிறுத்தைகளைக் கூண்டுவைத்து பிடிப்பதன் மூலம் இப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது.  புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் தமக்கென்று தனித் தனியே வாழ்விடங்களை ஏற்படுத்தி வாழும் குணமுடையவை. ஒரு சிறுத்தை தனது அதிகார எல்லைக்குள் மற்றொரு சிறுத்தையை அனுமதிக்காது. ஒவ்வொரு சிறுத்தையும் 5 கி.மீ. முதல் 20 கி.மீ வரை உணவு சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப இந்த எல்லையை அமைத்துக் கொள்ளும்.

இனச்சேர்க்கை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ஒரு சிறுத்தை தனது எல்லையை விட்டு மற்றொரு சிறுத்தையின் அதிகார எல்லைக்குள் நுழையாது. தனது அதிகார எல்லையை மற்ற சிறுத்தைகளுக்கு அறிவிக்கும் வகையில், ஒவ்வொரு சிறுத்தையும் தனது எல்லையைச் சுற்றிவந்து ஆங்காங்கே மலம் கழித்தும், செடிகளில் சிறுநீர் கழித்தும், மரங்களில் நகங்களால் கீறியும் அடையாளத்தைத் தெரிவிக்கும்.

ஒவ்வொரு பெண் சிறுத்தையும் 2 ஆண்டுக்கு ஒருமுறை குட்டி ஈனும். குட்டிகள் 12 மாதம் முதல் 18 மாதமாகும் போது (ஒன்று முதல் ஒன்றரை) வயதாகும் போது அவற்றை விரட்டிவிடும்; மீண்டும் அடுத்த தலைமுறையை உருவாக்க குட்டி ஈனும். தாயை விட்டுப் பிரியும் ஒவ்வொரு சிறுத்தைக் குட்டிக்கும் வேறு சிறுத்தைகள் இல்லாத வனப்பகுதி தேவைப்படுகிறது. சிறுத்தைகள் 12 முதல் 18 ஆண்டுகள் வரை வாழும்.நாம் கூண்டு வைத்து ஒரு வளர்ந்த சிறுத்தையைப் பிடிக்கும்போது அங்கு ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப வேறு ஒரு புதிய சிறுத்தை அதுவாக வந்து சேரும். மகாராஷ்டிர வனப்பகுதியில் 7 ஆண்டுகளுக்கு மேல் நடந்த ஆய்வில் இவை நிரூபணமாகியுள்ளன'' என்றார்.

வால்பாறையில் அரசு செய்ய வேண்டியது என்ன என்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடம் கேட்டோம்.

அங்குள்ள  தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் போதிய கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். அதனால் அவர்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குச் செல்வது தவிர்க்கப்படும். அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலும் குறிப்பிட்ட தூரம் வரையிலும் புதர்களை அகற்ற வேண்டும்.

போதிய பேருந்து வசதியை எல்லா தேயிலைத் தோட்டங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும். பேருந்து வசதி இல்லாத இடங்களுக்கு அகலமான நடைபாதையை ஏற்படுத்தி அவற்றுக்கு மின்விளக்கு வசதி செய்ய வேண்டும்.

நாய்கள் வளர்ப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இறைச்சிக் கடைகளில் எஞ்சிய மாமிசக் கழிவுகளை குழிதோண்டி புதைப்பதும் அவசியம். இவற்றை எல்லாம் சரியாக நடைமுறைப்படுத்தினால் நிச்சயமாக சிறுத்தைகளால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

புலிகள் காப்பகமாக அறிவித்ததனால், புதிதாக புலி, சிறுத்தைகளை வால்பாறையில் கொண்டுவந்து விட்டுள்ளனர் என்ற தவறான புரளியை, சிலர் அறியாமை காரணமாகப் பரப்புகின்றனர். அவ்வாறு யாரும் செய்ய முடியாது.

""வனவிலங்குகள் மிகுதியாக வாழும் டாப்சிலிப், பரம்பிக்குளம் போன்ற பகுதிகளில் பலநூறு ஆண்டுகள் பூர்வீக பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய இடங்களில் புலிகளைக் கொண்டு வந்துவிடும் செயல்களில் அரசு இறங்கவில்லை'' என்றார் வனச்சரகர். அங்கு இது போன்ற ஒரு சம்பவம்கூட இதுவரை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.