சினிமா என்றாலே திருவிழாதான்!
"திரைவிழா', "ஹாலிவுட்' போன்ற நிகழ்ச்சிகளைப் பாலிமர் டிவியில் தொகுத்து வழங்கும் மோனிகா, நர்சிங் முடித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகத்துறையில் வேலை பார்க்கிறார் என்றால் உங்களுக்கு ஆச்சர


"திரைவிழா', "ஹாலிவுட்' போன்ற நிகழ்ச்சிகளைப் பாலிமர் டிவியில் தொகுத்து வழங்கும் மோனிகா, நர்சிங் முடித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகத்துறையில் வேலை பார்க்கிறார் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தானே இருக்கிறது? அதே ஆச்சரியத்தோடுதான் நாங்களும் அவரை அணுகிப் பேசினோம். அவருடைய பதில்களிலும் பல சுவாரஸ்ய ஆச்சரியங்கள்.
செவிலியருக்குப் படித்துவிட்டு சின்னதிரை பக்கம் வந்தது எப்படி?
நர்ஸிங் படித்து முடித்ததும், தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடம் செவிலியராக வேலை பார்த்தேன். அதன்பிறகு டிவியில் காம்பயரிங் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் சினிமா சம்பந்தப்பட்ட விருது வழங்கும் மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நண்பர்கள் மூலமாக இமயம் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் சின்னதிரைக்கு வந்தேன். அது தவிர ராஜ் டிவியில் "சினிமா சினிமா', "காதல் மீட்டர்' போன்ற நிகழ்ச்சிகளைக் கொஞ்ச நாள் தொகுத்து வழங்கினேன்.
இப்பொழுது பாலிமர் டிவியில் "ஹாலிவுட் டாக்கிஸ்', "திரைவிழா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருக்கிறேன், இதையடுத்து சிங்கப்பூர் டவுன் சேனல், தமிழ் பாக்ஸ் ஆபிஸில், "ஹலோ டி.பி.ஓ.' போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி கொண்டிருக்கிறேன். இதை தவிர சில விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன்.
"திரை விழா' நிகழ்ச்சி சினிமாவை ஒவ்வொரு கட்டமாக விவரிக்கும் நிகழ்ச்சி... அதைப் பற்றி சொல்லுங்கள்?
சினிமா என்றாலே திருவிழா மாதிரிதான் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் என்ன சிறப்பு என்றால் ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பு அப்படத்தின் துவக்க விழாவில் தொடங்கி இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு, படப்பிடிப்பு.. எனப் பல கட்டங்கள் கடந்து பிறகுதான் ரிலீஸ் ஆகும். அப்படத்தின் செய்திகளையும், இது போன்ற குட்டிக் குட்டி திரைவிழாவையும் தொகுத்து வழங்குவதுதான் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
தமிழ்ப் படங்களை விமர்சிப்பதற்கும் ஆங்கிலப் படங்களை விமர்சிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
தமிழில் டப் ஆகி திரைக்கு வரும் புதிய ஆங்கில திரைப்படங்களை விமர்சிப்பதுதான் ஹாலிவுட் டாக்கீஸ். நம்முடைய தமிழ்ப் படங்களில் யதார்த்தம் இருக்கும், வாழ்க்கை இருக்கும். அதே சமயம் லாஜிக்கில்லாத விஷயங்கள் இருந்தால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஹாலிவுட் படங்களில் அதை எதிர்பார்க்க முடியாது. பிரம்மாண்டம், கிராபிக்ஸ், டெக்னாலாஜி தான் அதிகமாக இருக்கும். லாஜிக்கே இருக்காது. தமிழ்ப் படத்துக்கும் ஆங்கிலப் படத்திற்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துதானே பார்க்கிறோம்? அதனால் அதற்கு ஏற்றாற்போல் விமர்சனமும் இருக்கும்.
மருத்துவமனை போன்ற பொதுமக்கள் கூடும் இடத்தில் இருப்பதனால் ரசிகர்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்களா?
என்னோடு பணிபுரியும் ஒரு சிலருக்குத்தான் நான் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பது தெரியும். அதே போல் மருத்துவமனைக்கு வரும் பேஷன்ட்களில் ஒரு சிலர் அடையாளம் கண்டு கொண்டு கேட்பார்கள். உங்கள் நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்று சொல்லுவார்கள், ஒரு சிலர் தெரிந்தாலும் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பார்களே தவிர பேசமாட்டார்கள். ஒரு சிலர் கண்டுபிடிக்கவே மாட்டார்கள். ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் நிறைய பேர் அடையாளம் கண்டு கேட்டிருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
மேடை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, டிவியில் தொகுப்பாளினியாக இருப்பது இந்த இரண்டிலும் எது சுலபமானது?
இரண்டையுமே சுலபமானது என்று சொல்ல முடியாது. ஒவ்வொன்றிலுமே சில சிரமங்கள் இருக்கும். அதேசமயம் டிவி நிகழ்ச்சியைக் காட்டிலும் மேடை நிகழ்ச்சிதான் கடினமானது. டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது ஏதாவது தவறு நேர்ந்தால், அதை அடுத்த டேக் எடுத்துச் சரி செய்து விடலாம்.
ஆனால் மேடை நிகழ்ச்சிகள் அப்படி இல்லை, நம்மை மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கண்களைப் பார்த்து நாம் பேச வேண்டும். ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே முகம் சுளித்துவிடுவார்கள். அதனால் அதில்தான் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். பார்க்க அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு மட்டும் போனால் போதாது. சமயோசிதமாக வேலை பார்க்க வேண்டும்.
கடின உழைப்பாளியாக இருக்கும் நீங்கள், உங்களை எப்படி உற்சாகப்படுத்திக் கொள்கிறீர்கள்?
பொதுவாக வேலைக்கும் செல்லும் பெண்கள் எல்லோரையும் போல நானும் காலை 9.30 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை மருத்துவமனையில் வேலை பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் தான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறேன். இரண்டையும் நான் எப்பொழுதும் குழப்பிக் கொள்வதில்லை. இந்த நேரத்தில் இதைத்தான் செய்ய வேண்டும் என்று தெளிவாக இருப்பேன்.
இரண்டு வேலைகளையும் விரும்பிச் செய்கிறேன். சோர்வாக உணரும் நேரங்களில் எஃப்.எம். ரேடியோவில் பாடல்களை விரும்பிக் கேட்பேன். அது என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கியமான நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதிலும் கலந்து கொள்வதில்லை. முழுமையாக ரெஸ்ட் எடுத்துக் கொள்வேன். இதைத் தவிர மற்ற பெண்களைப் போல சினிமாவுக்குச் செல்வது, ஷாப்பிங் செல்வது ரொம்பப் பிடிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...