அரபிக்கடலின் அதிசயம்!
நமது பூமிப்பந்தில் சுமார் 70 சதவீதம் பரந்து காணப்படும் கடலின் அதிசயங்கள் அளவற்றவை; அவற்றில் நாம் அறிந்தவை சில மட்டுமே. இதில் மேற்கு கடற்கரையில் பரந்து விரிந்து காணப்படும் லட்சத்தீவுகள் அரபிக்கடலின் அ


ந மது பூமிப்பந்தில் சுமார் 70 சதவீதம் பரந்து காணப்படும் கடலின் அதிசயங்கள் அளவற்றவை; அவற்றில் நாம் அறிந்தவை சில மட்டுமே. இதில் மேற்கு கடற்கரையில் பரந்து விரிந்து காணப்படும் லட்சத்தீவுகள் அரபிக்கடலின் அதிசயமாகும்.
கேரள மாநிலத்திலிருந்து சுமார் 220 கி.மீ முதல் 445 கி.மீ வரை அரபிக்கடலினுள் பரவி கிடக்கும் சிறு சிறு அற்புதத் தீவுகளின் தொகுப்பே லட்சத்தீவுகளாகும். சமீபத்தில் இத் தீவுகள் குறித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய பேராசிரியர் முனைவர் தி.த.அஜீத்குமார் பயண அனுபவங்கள் குறித்து நம்மிடம் தெரிவித்தது:
""32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தீவுகளின் தொகுப்பில் ஏறக்குறைய 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இதில் மொத்தம் 36 தீவுகள் அடங்கியுள்ளன. இதில் 11 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கின்றனர்.
அவை அம்னி, அகாத்தி, ஆண்ரூத், பங்காரம், பித்ரா, சிட்லட், கட்மட், கல்பெணி, கவரட்டி, கில்டன் மற்றும் மின்காய் தீவுகள் ஆகும். கவரட்டி தீவு லட்சத்தீவின் தலைமையிடமாக செயல்படுகிறது.
இத்தீவுகளுக்குக் கேரள மாநிலத்தின் கொச்சின், மங்கலாபுரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளிலிருந்து கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
கடலின் சீற்றம் அதிகம் உள்ள காலகட்டமான ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் அனைத்து விதமான பொருள்களுக்கும் உள்நாட்டையே நம்பியிருக்கும் மக்கள், இக்கால கட்டத்தில் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வாரத்துக்கு 3 முறை கொச்சியிலிருந்து அகாத்தி தீவுக்கு விமானப் போக்குவரத்தும் நடைமுறையில் உள்ளது.
இந்தியாவில் பவளப் பாறைகள் அதிகம் நிறைந்துள்ள குறிப்பிடத்தக்க இடம் லட்சத்தீவுகள் ஆகும். கடலின் மலர்த் தோட்டங்கள் என்று புகழப்படும் பவளப் பாறைகள் கடல் வளங்களில் முக்கியமானது.
கடல் வளத்தை அளவிடும் அளவுகோலாகத் திகழும் அலங்கார மீன்களின் உறைவிடமாகத் திகழும் பவளப்பாறைகள், இங்கு செழிப்பாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் கடல் அலங்கார மீன்கள் அதிகமாக காணப்படும் லட்சத்தீவு, நாட்டின் வளங்களில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டு கடலோரப் பகுதிகளை உலுக்கிய சுனாமி பேரலை ஏற்பட்ட போது லட்சத்தீவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம் பவளப்பாறைகள் அலைகளின் சீற்றத்தைக் கட்டுப்படுத்தியதுதான்.
இங்கு வாழும் மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித்தல் ஆகும். இங்கு ட்யூனா (Tuna) இன மீன்கள் அதிகம் கிடைப்பதால், இம்மீன்கள் பதப்படுத்தப்பட்டு மாசிமீன்கள் என்ற பெயருடன் கேரளம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ட்யூனா மீன்கள் பிடிப்பதற்குக் கடல்சீற்றம் அதிகம் இருக்கும் ஆகஸ்ட்- அக்டோபர் மாதங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை மீன்களைப் பிடிக்க இங்குள்ள மக்கள் ஒரு வித்தியாசமான முறையை கையாளுகின்றனர். நம் பகுதியில் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதனை இவர்கள் வித்தியாசமாய் "லாங்லைனிங்' எனும் முறையில் பிடிக்கின்றனர். இந்த முறையில் ஒரு குச்சியிலேயே நீண்ட வரிசையில் தூண்டில் அமைப்பு செய்யப்பட்டு இருக்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த லட்சத்தீவில் மீன்கள் மட்டுமின்றி தென்னை மரங்களும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள், இம்மீன்களையும், தென்னை மரங்களையும் நம்பியே வாழ்க்கையை நடத்துகின்றனர்.
மாசிமீன் மற்றும் கொப்பரைத் தேங்காய் உற்பத்தியை மட்டுமே நம்பி வாழும் இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு புவி அறிவியல் அமைச்சகம், அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையம் மூலம் கடல் வண்ண மீன்கள் உற்பத்தி குறித்து பயிற்சி அளிப்பதற்காக நிதிஉதவி வழங்கியுள்ளது.
இதன் முதல்கட்டமாக அகாத்தி தீவில் லட்சத்தீவு வளர்ச்சி நிறுவன கட்டடத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மீன் பொரிப்பகத்தை நிறுவி, ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தீவுகளில் காணப்படும் மீன்களின் வளத்தை இத்திட்டத்தில் பணியாற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டறிந்து வருகின்றனர்.
ஆழ்கடலில் சென்று வளங்களை ஆராய ஸ்கூபா டைவிங் எனும் சிறப்பு பயிற்சி பெற்று இவர்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்'' என்கிறார் தி.த.அஜீத்குமார். நாட்டின் பிற பகுதிகளில் கிடைக்காமல், இத்தீவுகளில் மட்டுமே காணப்படும் அலங்கார மீன்களான க்ளௌண் மற்றும் டேம்செல் மீன்களை பொரிப்பகத்தில் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் தயார்படுத்தியுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பமானது பல கட்டப் பயிற்சிகள் மூலம் லட்சத்தீவின் மக்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு அவர்கள் சிறு தொழிலாய் இந்த அலங்கார மீன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உதவி புரிந்து வருகிறது.
பல்கலையின் கடல் அறிவியல் புல முதல்வர் பேராசிரியர் டி.பாலசுப்பிரமணியன் தலைமையில் முனைவர் தி.த.அஜீத்குமார் மேற்பார்வையில் இந்த ஆராய்ச்சி திட்டம் லட்சத்தீவில் சத்தமின்றி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...