புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

"தாயி... நல்லா எடுத்திருக்கே!"

"யாரும் என்னைக் கிண்டல் பண்ணமாட்டாங்க. அப்படியே யாராவது பண்ணினாலும் என்னால் சமாளிக்க முடியும்'' என்கிறார் சையது அலி ஃபாத்திமா. திருநெல்வேலி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ஃபாத்திமா ஒரு புகைப்படக் கலைஞர். த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:51 pm

ந. ஜீவா

"யாரும் என்னைக் கிண்டல் பண்ணமாட்டாங்க. அப்படியே யாராவது பண்ணினாலும் என்னால் சமாளிக்க முடியும்'' என்கிறார் சையது அலி ஃபாத்திமா. திருநெல்வேலி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ஃபாத்திமா ஒரு புகைப்படக் கலைஞர். திருமண விழாக்கள், கூட்டங்களில் மிகவும் சுறுசுறுப்பாக ஓர் இளம் பெண் திருநெல்வேலிப் பகுதியில் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது சையது அலி ஃபாத்திமாவாகத்தான் இருக்கும்.

"ஓர் இளம் பெண் எப்படி இந்தத் துறைக்கு வந்தீர்கள்?' என்று எல்லாரும் என்னைக் கேட்கிறார்கள். பெண்கள் எவ்வளவோ கடினமான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க போட்டோ எடுப்பது பெரிய விஷயமா? என்கிறார் இவர்.

""நான் ராணி அண்ணா கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் ஆசிரியைகள் எல்லாரும், "நீ வெளியே போனா அஞ்சு காசுக்குப் பெறமாட்டாய்' என்று வாழ்த்தினார்கள். அவர்களுடைய வாழ்த்துகளைப் பொய்யாக்க வேண்டும் என்று நினைத்தேன். புகைப்படம் எடுக்கத் தொடங்கிவிட்டேன்'' என்கிறார் சிரித்துக் கொண்டே.

""கல்லூரியில் படிக்கும்போதே புகைப்படம் எடுக்கத் தொடங்கிவிட்டேன். புகைப்படம் எனக்குப் பெரிய விஷயமல்ல. என் அப்பா ஒரு போட்டோகிராபர். பெரியப்பா போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கிறார். என்னுடைய மாமியின் அப்ரோஸýம், சுமையாவும் ஒரு கேமிராவை நான் கல்லூரியில் படிக்கும்போது வாங்கிக் கொடுத்தார்கள். நான் என்னுடன் படிக்கும் சக மாணவிகளை முதலில் போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். கல்லூரி விழாக்களைப் போட்டோ எடுக்கப் புகைப்படக்காரர்கள் வருவார்கள். ஆனால் அவர்கள் விழாவை மட்டும் எடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். மாணவிகளைத் தனியாக போட்டோ எடுக்கமாட்டார்கள். நான் மாணவிகளை அவர்களுடைய தோழிகளுடன் சேர்த்து போட்டோ எடுப்பேன். இதனால் கல்லூரியில் படிக்கும்போதே என்னுடைய போட்டோவுக்கு ரொம்ப கிராக்கி'' என்கிறார்.

திருமண விழாக்களில் போட்டோ எடுப்பதற்கு அதிகாலையிலேயே செல்ல வேண்டியிருக்கும். ஒரு பெண்ணான உங்களுக்கு இதனால் சிரமம் இல்லையா? என்று கேட்கிறார்கள்.

""அதெல்லாம் ஒன்றும் சிரமம் இல்லை. எப்படியும் திருமண விழாவுக்கு வீடியோகிராபர் செல்வார். அவருடன் சென்றுவிடுவேன். கல்யாண வீட்டுக்காரர் காலை 5 மணிக்கு வரச் சொன்னால், 4.30 மணிக்கே சென்றுவிடுவேன். குறித்த காலத்தில் செல்வது புகைப்படத் தொழிலில் ரொம்ப முக்கியம். எந்தக் காரணத்தாலும் தாமதமாகச் செல்லக் கூடாது.'' நறுக்கென்று சொல்கிறார்.

உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது, சரி. உங்கள் வீட்டில் எப்படி இதற்கு அனுமதித்தார்கள்? என்று கேட்டதற்கு, ""வீட்டில் பெற்றோரின் முழு ஒத்துழைப்பு இருக்கிறது. என் அம்மா மஹமுதா அமானுல்லா ஒரு சமூக சேவகி. மேலும் என் பெற்றோர் என்னை முழுமையாக நம்புகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையைப் பொய்யாக்கும்விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன் என்ற உறுதி எனக்கும் இருக்கிறது'' என்கிறார்.

""நான் ஆரம்பத்தில் ஒரு சிறிய யாஷிகா கேமிரா வைத்திருந்தேன். இப்போது டிஜிட்டல் கேமிரா வைத்திருக்கிறேன். புதிய புதிய தொழில்நுட்பங்களை எல்லாம் எங்கும் போய்ப் படித்ததில்லை. புகைப்படம் எடுத்து எடுத்துக் கற்றுக் கொண்டேன். ஒருவேளை தெரியாவிட்டால் - ஏதாவது சந்தேகம் வந்தால் - பக்கத்தில் படமெடுத்துக் கொண்டிருக்கும் வீடியோ எடுப்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். ஒரு படம் எடுத்து அது சரியாக வரவில்லை என்றால் ஏன் அப்படியானது என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு யோசித்துக் கண்டுபிடிப்பேன்'' என்கிறார் சீரியஸôக.

""பல மதம், சாதியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் திருமண விழாக்களைப் படமெடுத்திருக்கிறேன். ஏழு வருடத்திற்கும் மேலாகப் புகைப்படம் எடுப்பதால் ஒவ்வொரு பிரிவினரும்  என்ன என்ன சடங்குகள் வைத்திருப்பார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஒரே ஒரு பிரச்னை. தாலி கட்டும் வேளையில் எல்லாரும் போட்டோ எடுக்கவிடாமல் பெண் மாப்பிள்ளை இருக்கும் இடத்தில் போய் குவிந்துவிடுவார்கள். அதனால் முதலிலேயே, படம் நல்லா வர வேண்டுமென்றால் எல்லாரும் படம் எடுக்க வழிவிட்டு விலகி இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவேன்.

கல்யாண போட்டோதானே இதில் என்ன பெரிய கிரியேட்டிவிட்டி இருக்கப் போகிறது என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட வினாடியில் எடுக்க வேண்டிய புகைப்படத்தை எடுக்காவிட்டால் அதைத் திரும்பவும் எடுக்க முடியாது. தாலி கட்டுவதை படம் எடுக்க முடியவில்லை என்றால் திரும்பவும் தாலி கட்டச் சொல்ல முடியுமா? எனவே இதிலும் ரிஸ்க் இருக்கிறது. எல்லாரையும் வரிசையாக நிற்க வைத்து படம் எடுப்பதே முதலில் சிரமமான காரியம் என்பது பலருக்குத் தெரிவதில்லை'' என்கிறார் சிறிது கோபமாக.

""இப்போதெல்லாம் கிராமத்து மக்களே நல்ல ரசனையுடையவர்களாக இருக்கிறார்கள். படம் நன்றாக வரவில்லை என்றால் "ஏய்... தாயி என்ன எடுத்திருக்கே?' என்று கேட்பார்கள். படம் நன்றாக வந்துவிட்டால் "தாயி... நல்லா எடுத்திருக்கே' என்று பாராட்டுவார்கள்.

எனக்குப் புகைப்பட ஆர்டர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள், ஏற்கனவே என்னிடம் புகைப்படம் எடுத்தவர்கள் சொல்லி... என்று  பலவிதங்களில் வருகின்றன. திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா, கூட்டங்கள் என்று எடுக்கிறேன். ஆனால் இன்னொரு புகைப்படக்காரர் எங்காவது தொடர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தால் அங்கே நான் போய் ஆர்டர் கேட்கமாட்டேன். அடுத்தவர் வயிற்றில் அடிக்க நான் ஒரு நாளும் நினைக்கமாட்டேன்.

என்னைப் பொறுத்த அளவில் நான் எடுக்கும் புகைப்படங்கள், இது இன்னார் எடுத்தது என்று சொல்லும்படியாக நினைவில் நிற்க வேண்டும்; புகைப்படங்கள் அவர்களுக்குத் திருப்தி தர வேண்டும் என்று நினைக்கிறேன்''  என்று சொல்லும் ஃபாத்திமாவிடம் உறுதி தெரிகிறது.

""புகைப்படம் எடுப்பதோடு நின்றுவிடாமல் வருங்காலத்தில் ஒரு புகைப்பட லேப் வைக்கவேண்டும் என்பதே என் ஆசை'' என்கிறார் கண்களில் உறுதியுடன் சையது அலி ஃபாத்திமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.