ஒரு மனிதன்... ஒரு கோயில்... ஒரு புத்தகம்...

தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், நம்மால் கொண்டாடப்பட வேண்டியவர் யாராக இருக்க முடியும்? கேள்வி நீளமானது. ஆனால், பதில் சுருக்கமானது. குடவாயில்
ஒரு மனிதன்... ஒரு கோயில்... ஒரு புத்தகம்...
Published on
Updated on
2 min read

ஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், நம்மால் கொண்டாடப்பட வேண்டியவர் யாராக இருக்க முடியும்? கேள்வி நீளமானது. ஆனால், பதில் சுருக்கமானது. குடவாயில் பாலசுப்ரமணியன். பெரிய கோயில் என்றாலே, இன்றைக்கு அரசாங்கத்திலிருந்து ஊடகங்கள் வரை எல்லோரும் அவரைத்தான் தேடுகிறார்கள். கோயில் பற்றி அவர் பேசுவதைக் கேட்பதே ஓர் அலாதியான அனுபவமாக இருக்கிறது. பேசத் தொடங்கிய சில நிமிஷங்களில் சோழர் கால வரலாற்றினூடே நம்மை ஒரு சுற்றுலா அழைத்துச் சென்றுவிடுகிறார் மனிதர். முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது வரலாற்றோடு தத்துவ விசாரங்களிலும் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. அது நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு எவ்வளவோ சிறப்புகள் உண்டு. அதில் முக்கியமான ஒரு சிறப்பு இந்தக் கோயிலைப் பற்றிய ஆவணங்கள். பொதுவாக, தமிழர்கள் ஆவணப்படுத்துவதில் அசட்டையர்கள் என்பது வரலாற்று காலம் தொட்டு தொடரும் கதை.

இங்குள்ள பல கோயில்களுக்கு நம்மிடத்தில் சரியான வரலாறு கிடையாது. தல புராணங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புனை கதைகளே பெரும்பாலான கோயில்களின் வரலாறு. ஆனால், பெருவுடையார் கோயில் ஒரு விதி விலக்கு. இந்தக் கோயிலின் உருவாக்கத்தில் தொடங்கி நிர்வாகம் வரை தொடர்புடைய நிறைய தகவல்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. சோழர்களுக்குப் பிந்தைய பல்வேறு ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் கோயில் நிர்வகிக்கப்பட்ட விவரம், கோயில் எதிர்கொண்ட தாக்குதல்கள் ஆகிய விவரங்கள் எல்லாம்கூட பல்வேறு ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. ஆனால், சாதாரணர்களை எட்டக்கூடிய வரலாறாக இது இல்லை.  இவற்றையெல்லாம் தொகுத்து சாமானியர்களும் அறிந்துகொள்வதற்கேற்ப வரலாற்றைச் சொல்ல வேண்டிய தேவை இந்தக் கோயிலுக்கு இருந்தது.  பாலசுப்ரமணியன் அதைப் பூர்த்திசெய்திருக்கிறார்.

தன் வாழ்வில் பெரும் பகுதியை ஆராய்ச்சிக்காகச் செலவிட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 518 பக்கங்களில் அவர் கொண்டு வந்திருக்கும் "இராஜராஜேச்சரம்' புத்தகம், தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய அற்புதமான பெட்டகம்.

ஒரு கோயிலை அணுகுவது எவ்வளவு பெரிய கலை என்று வியக்கச் செய்கிறது. கோயில் நிர்மாணம், அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், அவை சொல்லும் சேதிகள், வழிபாட்டு முறைகள், வழக்கொழிந்த அம்சங்கள், கோயிலைப் பற்றிய புனை கதைகள் என்று ஒரு கோயிலைப் பற்றிப் பேசவும் கேட்கவும் நமக்கு எவ்வளவு இருக்கின்றன?

எத்தனை வாய்ப்புகள் இருக்குமோ அத்தனை வாய்ப்புகளிலும் புகுந்து வெளியே வருகிறது "இராஜராஜேச்சரம்'. இது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகமில்லை. ஏராளமான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. ஆனால், இந்தப் புத்தகத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட இப்படியொரு புத்தகம் ஒவ்வொரு கோயிலுக்கும் தேவை என்கிறார்கள்.

குடவாயில் பாலசுப்ரமணியன் இதுவரை 25}க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கல்வெட்டுகள், செப்பேடுகள், அரிய வகை நாணயங்கள், சிற்பங்கள் என்று அவருடைய ஆர்வங்கள் பெரிய அளவில் விரிகின்றன. ஏராளமான கோயில்கள் அவருடைய பணிப் பட்டியலில் வருகின்றன.

ஆனால், பெருவுடையார் தன்னை ஆக்கிரமித்துக்கொண்டார் என்கிறார் பாலசுப்ரமணியன். தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதி இந்தக் கோயில் மீதான கவனத்திலேயே கழிந்திருக்கிறது என்கிறார். புரிகிறது, பாலசுப்ரமணியன். அப்படிப்பட்ட ஒருவரால்தான் இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைத் தர முடியும்!

ராஜராஜனின் உள்துறை!

அலுவலர்கள்: பிணக்கறுப்பான், கணக்கன்,  கீழ்க் கணக்கன்,  பாடிகாப்பான், தண்டுவான்,  அடிக்கீழ் நிற்பான்.  

நடுநிலையாளன்: கிராமசபை நடைபெறும் போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவன்.

கணக்கன்: சபைக்குரிய கணக்கை எழுதுபவன். சபை விரும்பும்போது கணக்கை அவ்வபோது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கீழ்க் கணக்கன்: கணக்கனுக்கு உதவுபவன்.

பாடிகாப்பான்: கலகம், திருட்டு முதலான குற்றங்கள் நிகழாத வகையில் காப்பவன்.

தண்டுவான்: கிராம மக்கள் அரசுக்கு, கொடுக்க வேண்டிய வரிகளை வசூலிப்பவன்.

அடிக்கீழ் நிற்பான்: ஊர்ச் சபையாருக்குச் குற்றேவல் புரிபவன்.

ஊதியங்கள்: மேற்சொன்ன ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு நானாழி நெல், ஆண்டுக்கு ஏழு கழஞ்சு பொன், இரண்டு ஆடைகள் என ஊதியம் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com