பாம்புகளின் நண்பர்கள்!
வீட்டுக்குள் பாம்பு நுழைந்து விட்டதா? பதட்டப்படாதீர்கள். பாம்புக்கு அருகில் செல்லாமல் தள்ளி நின்று பாம்பு எங்கே சென்று பதுங்குகிறது என்று பாருங்கள். அந்த இடத்தைக் கலைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பி


வீட்டுக்குள் பாம்பு நுழைந்து விட்டதா? பதட்டப்படாதீர்கள். பாம்புக்கு அருகில் செல்லாமல் தள்ளி நின்று பாம்பு எங்கே சென்று பதுங்குகிறது என்று பாருங்கள். அந்த இடத்தைக் கலைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பின்பு அழையுங்கள் நிர்மலையும், கீர்த்தியையும்.
சிறிது நேரத்திற்குள் இருவரும் வந்துவிடுகிறார்கள். பாம்பு பதுங்கியிருக்கும் அந்த இடத்தை நெருங்குகிறார்கள். பாம்புக்கு எந்த சேதமும் ஏற்படாமல் மிக எளிதாகப் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டுக் கொண்டு நடையைக் கட்டுகின்றனர். விஷம் இல்லாத பாம்பு என்றால் சுற்றி இருப்பவர்களை தொடச் சொல்லி அவர்கள் கையில் பாம்பை கொடுத்து பாம்பு பயத்தைப் போக்குகின்றனர். நிர்மலும் கீர்த்தியும் யாரென்று கேட்கிறீர்களா? இருவரும் கோவையைச் சேர்ந்தவர்கள்.
நிர்மல் கோவை ஜிஆர்எடி கல்லூரியில் எம்எஸ்சி மென்பொருள் படித்து வருகிறார். தந்தை பிஎஸ்என்எல் ஊழியர் தாய் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
""8வது படிக்கும் போதே பாம்பு பிடிக்க கற்றுக் கொண்டேன். கோவை ஈஷா யோகா மையத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில் பாம்பு பிடிக்கவும் அதன் குணாதிசயங்கள் மற்றும் கையாளும் முறைகள் குறித்து கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பாம்புகள் பற்றி எனக்கு தெரிந்தவற்றை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். முக்கியமாக பாம்புகளைப் பார்த்தால் அவற்றை அடிக்கக் கூடாது என்பதே எனது பிரசாரமாக இருந்து வருகிறது. மெல்ல மெல்ல என்னைப் பற்றி எல்லாரும் தெரிந்து கொண்டார்கள். எனது நண்பர்கள் உறவினர்கள் மூலமாக எனது பெயர் பரவியது. பொது இடங்கள். அலுவலகம், வீடு என எங்கு பாம்பு நுழைந்தாலும் என்னை அழைப்பார்கள். நான் சென்று பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டுவிடுவேன்.
பாம்புகள் செதில்களால் கவசமிடப்பட்ட தோல்களைக் கொண்டவை. புறச்சூழல் வெப்பத்தைச் சார்ந்து வாழும் ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை. அண்டார்டிகா கண்டம், வடதுருவம், மற்றும் சில தீவுகளைத் தவிர எல்லா இடங்களிலும் பாம்புகள் வாழ்கின்றன. 10செமீ முதல் 10 மீட்டர் நீளம் வரை பல்வேறு அளவுகளில் காணப்படுபவை. சுமார் 3ஆயிரம் இனங்களாக வகைப்படுத்தப்படும் பாம்புகளில் பெரும்பாலானவை நச்சுத்தன்மை அற்றவை. சுமார் 600 வகையான பாம்புகள் மட்டுமே நச்சுத்தன்மை உள்ளதாகக் கூறப்படுகிறது. மனிதர்களைக் கண்டால் பாம்புகள் விலகிச் சென்றுவிடும். வயல்களில் நெல் பயிரை நாசம் செய்யும் எலிகளை கட்டுப்படுத்துவதில் விவசாயிகளின் நண்பனாக இருப்பது பாம்புகள்தான். பாம்புகளுக்கு தனியாக இடம் என்று எதுவும் கிடையாது அதிக அளவில் கட்டடங்களைக் கட்டி அவற்றின் வாழ்விடங்களை அழித்துவிட்டோம். நாம் பாம்புகளைத் துன்புறுத்தாதவரை அவை நம்மை ஒன்றும் செய்யாது. பாம்புகளுடனான இந்த சூழலில் இணைந்து வாழ பழகிக்கொள்வோம்''என்கிறார் நிர்மல். நிர்மலின் நண்பி எஸ்.கீர்த்தி (பிஎஸ்ஜி கல்லூரியில் பிடெக் பயோடெக்னாலஜி படித்து வருகிறார்.
""அச்சுதன் என்பவரிடம் பாம்பைக் கையாளப் பழகினேன். தற்போது நிர்மல் எனக்கு விஷப் பாம்புகளைப் பிடிக்கக் கற்றுத் தருகிறார். பாம்பு வந்துவிட்டது என்று கேள்விப்பட்டால் காலேஜுக்குக் கட்டடித்து விட்டு ஓடிவிடுவார். காரணம் கேட்டால் எனது பாடங்களை எனது நண்பர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். ஆனால் ஓர் உயிரைக் காப்பாற்றும் மனநிறைவு என்பதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது என்பார்.
பாம்பு கடித்து இறப்பவர்களை விட பயத்தில் இறப்பவர்களே அதிகம். பயத்தைப் போக்க வேண்டுமானால் பாம்புகளை பிடித்து அவற்றை கையாளத் தெரிந்தால் போதும். யாராக இருந்தாலும் பாம்பை பிடிக்கலாம். இதுவரை விபத்தில் சிக்கிய சுமார் 50க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளேன். கண்ணாடி விரியன், கட்டு விரியன். சுருட்டை விரியன், நல்லப்பாம்பு போன்றவை மக்கள் வாழும் சூழலில் வசிக்கக்கூடியவை. இவை மட்டுமே விஷதன்மை உடையவை. மற்ற பாம்புகளுக்கு விஷம் கிடையாது.
பொதுவாகவே பாம்பை மனிதர்கள் எதிரியாக பார்க்கின்றனர். பார்த்தவுடன் நம்மை கடித்து விடும் என்று அச்சப்படுகின்றனர். நாம் அதைப் பார்த்து அச்சப்படும் அதே அளவிற்கு நம்மை பார்த்து பாம்புகளும் அச்சப்படும். முடிந்தவரை நம்மை விட்டு விலகிச் செல்லத்தான் பார்க்கும். அதையும் மீறி நம்மைக் கடிக்கிறது என்றால். நாம் பாம்பை பிடிக்க முயல்வது, அடிக்க முயல்வது, அல்லது தெரியாமல் பாம்பை மிதித்துவிட்டால் மட்டுமே அது நம்மை கடிக்கும்'' என்கிறார் கீர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...