காடே என் வீடு!
நீர்நிலை ஒன்றில் மூழ்கியிருக்கும் புலியைக் கவனிக்காமல் அதே நீர் நிலைக்குள் இறங்குகிறது ஒரு யானை. சுதாரித்துக் கொண்ட புலி நீர் நிலையை விட்டு வெளியேறுகிறது. யானையும் புலியிருக்கும் கரை பக்கம் போகாமல் மற


நீர்நிலை ஒன்றில் மூழ்கியிருக்கும் புலியைக் கவனிக்காமல் அதே நீர் நிலைக்குள் இறங்குகிறது ஒரு யானை. சுதாரித்துக் கொண்ட புலி நீர் நிலையை விட்டு வெளியேறுகிறது. யானையும் புலியிருக்கும் கரை பக்கம் போகாமல் மறுகரைக்குச் செல்கிறது. ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுத்து விலகி, தத்தம் பாதையில் செல்லும் காட்சியைக் கொண்ட ஒரு புகைப்படம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களின் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி முதல் பரிசு பெற்றது. சலீம் அலி இன்டர்நேஷனல் நேச்சர் சலூன் அவார்ட் போன்ற பல விருதுகள் கிடைத்திருக்கின்றன, இவருக்கு. உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள கார்பட் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.பி.நாகேந்திரன். தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணிபுரியும் ஓர் அரசு ஊழியர்.
நீங்கள் வாங்கிய சர்வதேச விருதைப் பற்றிச் சொல்லுங்கள்?
ஏஆர்பிஎஸ் என்ற பட்டம், அசோசியேட் ஆப் தி ராயல் போட்டோகிராப்பர்ஸ் சொசைட்டி ஆப் இங்கிலாந்தில் பெருமைக்குரிய பட்டம். சர்வதேச அளவிலான சிறந்த புகைப்பட கலைஞர்களுக்கு மட்டும் இது வழங்கப்படுவது. இது தவிர, 50 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளேன்.
கானுயிர் புகைப்படக் கலைஞராகக் காரணம் என்ன?
என் தந்தை ராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். சிறுவயது முதலே என்னை பயம் என்றால் என்ன என்று கேட்கும் வகையில் வளர்த்துவிட்டார். காட்டுக்குள் அழைத்துச் செல்வார். அப்போது பறவைகளின் இனிமையான ஒலியில் மூழ்கி அவை மேல் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக நான் பார்த்ததை மற்றவர்களுக்குக் காட்ட புகைப்படம் எடுத்தேன். பின்னர் அவற்றின் பெயர்களைத் தெரிந்துகொள்ள நிறையப் புத்தகங்களைப் படித்தேன். ஆயிரக்கணக்கில் பறவைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். அடிக்கடி காட்டுக்குள் செல்லத் தொடங்கினேன். இப்படித்தான் ஈடுபாடு ஏற்பட்டது.
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை காட்டுக்குள் செல்வீர்கள்? காட்டுக்குள் செல்ல ஏற்ற மாதங்கள்?
ஜனவரி முதல் மே மாதம் வரை புகைப்படம் எடுக்கச் சிறந்த மாதம். பின்னர் மழைக் காலம் தொடங்கிவிடும். எல்லா சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் காடுதான் என் வீடாகும். வருடத்தில் 110 நாட்கள் காட்டில்தான். அலுவலகத்தில் விடுப்புகள் எடுக்காமல் எனது ஆண்டு விடுப்புகள் அனைத்தையும் சேர்த்துவைத்துப் புகைப்படம் எடுக்க விடுப்புகளை உபயோகித்துக் கொள்வேன். விடுமுறைகளுக்கு எனக்கு வழங்கப்படும் ஊதியத்தைக்கூட நான் பெற்றுக் கொள்வதில்லை.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் உங்கள் புகைப்படங்களின் பங்கு?
பெங்களூர், தில்லி உள்ளிட்ட பல நகரங்களில் புகைப்படக் கண்காட்சி நடத்துகிறேன். காட்டுக்குள் சென்றாலும் எளிதில் பார்க்க முடியாத பல அரிய பறவைகள், விலங்குகள், தாவரங்களைப் புகைப்படம் எடுத்து அவற்றின் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க பருவம், எண்ணிக்கை, உள்ளிட்ட பல தகவல்களைப் பொதுமக்களிடம் கண்காட்சிகள் மூலம் கொண்டு செல்கிறேன். உன்னதி (இயற்கை) என்ற அறக்கட்டளை துவங்கி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நம் வனங்கள், அவற்றின் வகைகள், அரிய விலங்குகள், அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் பற்றிய புகைப்படங்களுடன் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்துகிறேன். மாணவர்களைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று எனக்குத் தெரிந்த தகவல்களை அவர்களுக்குக் கூறுகிறேன். காடுகளைப் பாதுகாக்கும் பணியில் அவர்களை ஊக்குவிக்கின்றேன்.
காட்டுக்குள் புகைப்படம் எடுக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்?
காட்டுக்குள் செல்வதற்கு முன்பு அது குறித்த புத்தகங்களைப் படித்து தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். தனியாகச் செல்லக்கூடாது. குறிப்பிட்ட வனச் சரகத்தைச் சேர்ந்த வனஅதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். அதிகக் கூட்டத்தைத் தவிர்த்தல் நல்லது. வேட்டைத் தடுப்பு ஊழியர் ஒருவரை உடன் அழைத்துச் செல்வது மிகவும் அவசியம். குறிப்பிட்ட வனப்பகுதியின் வரைப்படத்தை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். காட்டுக்குள் செல்லும்போது பேசுவதை முழுமையாக நிறுத்திவிட வேண்டும். சிறு ஒலிகளைக் கூட கூர்ந்து கவனிக்க வேண்டும். பூட்ஸ் அணிந்துகொள்ள வேண்டும். அதிக பாரம் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பைனாகுலர் எடுத்துச் செல்ல வேண்டும். செடிகளைப் போன்ற டிசைன்களில் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வெள்ளை நிற உடைகளைத் தவிர்ப்பது நல்லது. பறவைகளைப் புகைப்பட எடுக்கும்போது அதன் கூட்டுக்கு அருகில் ஒரு வாரத்துக்கு முன்பே பதுங்கு கூடாரம் பச்சை துணியால் (செடிகளைப் போன்ற டிசைன் உடைய துணியால்) அமைத்துவிட்டு வந்துவிட வேண்டும். ஒரு சில நாட்களுக்கு பிறகு அந்த புதிய கூடாரம் அந்தப் பறவைக்குப் பழக்கப்பட்டுவிடும். பின்னர் அங்கு சென்று பதுங்கி படம் எடுக்க வேண்டும். சில சமயம் 5 நாட்கள் ஆனாலும் நாம் எதிர்பார்க்கும் படம் கிடைக்காது. அச்சம் தவிர்க்க வேண்டும். பொறுமை மிகவும் அவசியம்.
உங்களின் புகைப்படங்களால் வெளியான அரிய தகவல்கள்?
அழிவின் விளிம்பில் உள்ள ஒரே இந்திய சிம்பன்சி இனமான கிப்பான் ஹுல்லாக் இன்னும் அசாம் மாநிலமான பான்பரி ஹில்ஸ் மலைக் காடுகளில் வாழ்கிறது என்பதை எனது அரிய புகைப்படத்தைக் கொண்டு தெரிந்துகொள்ளலாம். அதே போல் அழிந்துவிட்டது என்று கருதப்படும் கோல்டன் லங்கூர்ஸ் குரங்கு இனம் பூட்டான் எல்லைப் பகுதியான மனஸ் காடுகளில் எஞ்சியுள்ளது என்பது எனது புகைப்படம் மூலமே தெரியவந்தது. அதே போல் மட் ஸ்கிப்பர்ஸ் எனப்படும் தரையில் வாழும் மீன்களைச் சுந்தரவனக் காடுகளில் படம்பிடித்துள்ளேன். பாராசிங்கா என்னும் 12 கொம்புகளையுடைய அரிய வகை மானை உத்தராஞ்சல் கார்பட் தேசிய பூங்காவில் படம்பிடித்தேன். இந்தப் புகைப்படங்களைக் கொண்டே இன்னும் இந்த உயிரினங்கள் எந்தப் பகுதியில் வாழ்கின்றன என்னும் அரிய தகவல் வெளியானது.
தமிழகத்தில் கண்காட்சி நடத்த திட்டம் உள்ளதா?
ஆம். வருகிற மார்ச் மாதம் 11 முதல் 15ஆம் தேதி வரை கோவை வனத்துறை, தி நேட்சர் கன்சர்வேஷேன் சொசைட்டி (டிஎன்சிஎஸ்), ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கண்காட்சி நடத்த உள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...