கழிப்பறை சுத்தம் செய்து கல்விப் பணி!
கழிப்பறை சுத்தம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நலிந்த பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி செய்கிறார் என்று கேள்விபட்டு அவரைச் சந்திக்க விரைந்தோம். பலமுறை வீட்டுக்குச் சென்றும் மனிதரைப் பிடிக்கம


கழிப்பறை சுத்தம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நலிந்த பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி செய்கிறார் என்று கேள்விபட்டு அவரைச் சந்திக்க விரைந்தோம். பலமுறை வீட்டுக்குச் சென்றும் மனிதரைப் பிடிக்கமுடியவில்லை. காரணம் தன் வேலை நேரம் போக எதாவது ஒரு கூலி வேலையைத் தேடி சென்றுவிடுகிறார் அவர். அதில் கிடைக்கும் பணத்தை யாருக்காவது கொடுத்து உதவலாம் என்ற நல்ல எண்ணத்தில்தான் இப்படி ஓடிஓடி உழைக்கிறார்
லோகநாதன்.
அவரது மனைவியிடம் தகவலைச் சொல்லி ஒரு வழியாக வார இறுதியில் கோவையில் அவருடைய இல்லத்தில் பிடித்தோம், இரவு 10மணிக்கு. வெல்டிங் வேலை செய்யும் அவர், தன் முதலாளி கொடுத்த ஒரே ஒரு சிறிய அறை கொண்ட வீட்டில் வசிக்கிறார். ஒரு பக்கம் முழுவதும் விருதுகளும் கோப்பைகளும் பாராட்டுப் பத்திரங்களும் பரிசுப் பொருள்களுமாய் குவிந்திருந்தன. "வைக்க இடம் இல்லீங்க சாமி... இந்த வாரம்தான் பழைய மார்க்கெட்டில் இருந்து ஒரு பொட்டியைப் புடிச்சுட்டுவந்து கண்ணாடி மாட்டி கொஞ்சத்தை மட்டும் உள்ளே வச்சிருக்கேன். மீதியை சாக்குமூட்டைல கட்டி பரண் மேலே போட்டிருக்கேனுங்க...'' என்றார் சர்வ
சாதாரணமாக.
எதற்காக இவ்வளவு பரிசுகள்?
நான் யாருக்காவது உதவின்னு எதையாவது செய்வேன். இதை சேவைன்னு சொல்லி எனக்கு ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், பல சேவை அமைப்புகள், திருக்குறள் பேரவை, வியாபாரிகள் சங்கம், தொழில் வர்த்தக சபை போன்றோர் இப்படிக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க.
என்ன மாதிரி உதவிகளை செய்கிறீர்கள்?
மாநகராட்சி பள்ளியில் சிறப்பாகப் படிக்கும் நலிந்த மாணவர்களை ஆசிரியர்கள் மூலமாக தேர்வு செய்து அவர்களின் ஒரு ஆண்டுக்கான கல்விச் செலவுகளான, கூடுதல் சீருடை, காலணி, டியூசன் கட்டணம், புத்தகப்பை, நோட்டு புத்தகம் போன்றவற்றிற்கு ஆகும் செலவைப் பணமாகக் கொடுத்துவிடுவேன். ஓர் ஆண்டுக்கு இப்படியாக 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்குகிறேன்.
வேறு என்ன சமூக சேவை செய்கிறீர்கள்?
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பதுடன், அவர்கள் இருக்கும் இடங்களைச் சுத்தம் செய்து சுவர்களுக்கு வெள்ளையடித்து கொடுப்பேன். சிறு அறக்கட்டளை நடத்துபவர்களைச் சந்தித்து அவர்கள் கோரும் உதவிகளைச் செய்வேன். நிதி உதவி உள்பட நாற்காலி, மேஜை, சமையல் பாத்திரங்கள், மின்விசிறி போன்றவற்றை வாங்கிக் கொடுக்கிறேன்.
விதவை பெண்களுக்கு நிதி உதவி செய்வேன். ஊரகப் பகுதிகளில் உள்ள நூலகங்களைச் சுத்தம் செய்து வெள்ளையடித்துக் கொடுக்கிறேன். பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களைச் சுத்தம் செய்வது, அரசு மருத்துவமனை வளாகத்தைச் சுத்தம் செய்து அங்கு தோட்டம் அமைத்தல், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது, அவர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கு வெல்டிங் தொழில் கற்றுத்தருவது போன்ற செயல்களில் ஈடுபடுவேன். அப்படியாக சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தத்தெடுத்து வளர்த்து வெல்டிங் தொழில் கற்றுத் தந்தேன். ஜான்சன் என்ற அவர் தற்போது துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவரும் எனது பணிக்கு நிதி உதவி செய்வார்.
சிறையில் உள்ளவர்களைச் சந்தித்து அவர்களை நல்வழிபடுத்தி விருப்பம் உள்ளவர்களைப் படிக்கச் சொல்லி புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பேன். என்னை நன்கு அறிந்த உயர்அதிகாரிகள் காவல்துறை மற்றும் ராணுவத்தில் உள்ளனர். அவர்களின் உதவியுடன் காவலர், ராணுவ குடியிருப்புகளுக்குச் சென்று அவர்கள் உபயோகிக்காத துணிகளை வாங்கி ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பேன். மரக்கன்றுகளைச் சேகரித்து, கல்லூரி- பள்ளி மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு மரக்கன்றுகள் நடுவேன்.
இவ்வளவுக்கும் இடையே வீட்டை எப்படிக் கவனித்துக்கொள்கிறீர்கள்?
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பார்கள். அது உண்மைதானுங்க. என் மகனைப் பி.காம்., சி.ஏ., படிக்கவச்சுட்டேன். மகள் அன்னபூர்ணி 5ஆம் வகுப்பு படிக்கிறார். கோவையில் உள்ள விமானப்படை பள்ளியில் அதிகாரியாக பணிபுரியும் ஏர் கமாண்டர் ஷர்மா என்னைப் பற்றி கேள்விப்பட்டு என் பிள்ளையை அவர் ஏர் ஃபோர்ஸ் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். என் மனைவியாக சசிகலா அமைந்தது இறைவன் கொடுத்த வரம்தான். எனது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வார். எனது செய்கைகளை ஊக்குவிப்பவர்களில் முக்கியமானவர்.
இவ்வளவு நிதிஉதவி செய்ய எங்கிருந்து உங்களுக்குப் பணம் கிடைக்கிறது?
வெல்டிங் ஒர்க்ஷாப் வேலைக்குப் போகிறேன். மாதம் ரூ. 5500 கிடைக்கும். ஒருமுறை எங்க கம்பெனி கழிவறையைச் சுத்தம் செய்தேன். ரூ. 400 கொடுத்தாங்க. அதேபோல் அருகில் உள்ள கம்பெனிகளுக்குச் சென்று "கழிப்பறைகளைச் சுத்தம் செய்து தருகிறேன், பணம் கொடுங்கள் ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும்' என்றேன். அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.
இப்படியாக பல கம்பெனிகளின் கழிப்பறையைச் சுத்தம் செய்கிறேன். இதில் வரும் பணத்தைக் கொண்டு உதவுகிறேன். சில நிறுவன முதலாளிகள் என் பணியைப் பாராட்டி நிதி உதவி செய்வார்கள். அதையும் இல்லாதவர்களிடம் கொடுத்துவிடுவேன். இப்படியாக கிடைக்கும் நிதி உதவிகளை வங்கியில் போட்டு எடுத்து செலவு செய்ததற்கு முறையான கணக்குகள் வைத்துள்ளேன். (வவுச்சர்கள் அடங்கிய கட்டுக்கட்டான ஃபைல்களைக் காட்டினார்.)
எந்த வயதில் இருந்து இப்படி உதவத் தொடங்
கினீர்கள்?
எனக்கு 12 வயசு இருந்தப்ப ஓர் ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போனேன். அங்கிருப்பவர்களைப் பார்த்து மனசு கஷ்டப்பட்டது. அழுதுட்டேன். அப்பறம் தினமும் அவர்களைச் சென்று சந்தித்து, அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அது இங்க வந்து நிக்கிது சாமி...
எல்லோரும் படிக்கணும்னு சொல்றீர்கள். நீங்கள்...?
நான் 6-ஆம் வகுப்புதான் படிச்சேன். குடும்பத்தில் மற்றவர்களுக்கு உதவ காசு தேவைப்பட்டது. அதற்காக சிறு வயசுலேயே வேலைக்குப் போயிட்டேன்.
ஒருத்தருக்கு மீனைக் கொடுப்பதற்குப் பதிலாக மீன் பிடிக்கக் கற்றுகொடுத்தால் அதுதான் உபயோகமான உதவி. கல்வி என்பது ஒரு மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கும். அதனால்தான் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன்.
இப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் காசை மற்றவர்களுக்குக் கொடுக்க எப்படி மனம் வருகிறது?
காசு இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்பார்கள். காசு என்னடா காசு. வாழ்கைக்கு நிம்மதிதான் முக்கியம் என்று தத்துவம் பேசுவார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் சேவை செய்து வாழ்ந்தால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் என்பதை மட்டும் அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன். அதில் கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...